Sunday, December 26, 2010

கூண்டுக் கிளி...















கண் சிமிட்டும் நொடிப் பொழுதில்
திறந்திருந்த கூண்டிலிருந்து
சிட்டாகப் பறந்தேன் விடியலை நோக்கி
என் விடுதலை தேடி....

முறிக்கப்பாடாத சிறகுகளால்
பறந்து திரிந்து முழுமையாய்
அனுபவித்தேன்_ நீண்ட நாளாய்
ஒடுக்கப்பட்ட என் சுதந்திரத்தை...

வெண் பஞ்சு மேகங்கள் மோதி
குளிர் காற்றின் ஈரம் முகர்ந்து
என் சிறிய நுரையீரல் நுரைத்துப் பொங்க‌
சுதந்திரக் காற்றை சுவாசித்தேன்...

பழங்கள் கொட்டைகள் தானியங்கள்
கண்டதெல்லாம் கொத்தித் தின்று
கொஞ்சும் குமரிகளின் காதோரம்
காதல் சொல்லி
குட்டிக் குழந்தைகளின்
தோளோடு குலவிச் சென்று...

சூரியன் தொடு மட்டும் உயரே எழும்பி
சட்டென்று தடாகம் தொட்டு
சிறகுகளைச் சிலிர்க்க வைத்து
மலர் மண் புழுதி அத்தனையிலும்
முகிழ்த்தெழுந்தேன்....

மாலை மயங்குகையில்
மனதோரம் சிறு நெருஞ்சி...
ம‌றுப‌டியும் கூண்ட‌டைந்தேன்

ஒரு துளி அன்புக்கு
ஒரு கிலோ மாமிச‌ம் கேட்கும்
முர‌ண்ப‌ட்ட‌ உல‌க‌த்தில்

சிற‌கொடிக்காம‌ல் த‌ன் உண‌வை
ப‌கிர்ந்த‌ளித்த‌ என் எஜ‌மான‌
துரோக‌ம் முன் சுத‌ந்திர‌ம்
க‌ச‌ந்து தான் போன‌து...

Sunday, December 12, 2010

உற‌வின் மீட்சியாய்....












அனிச்சையாக உள் நுழைந்து
அதிர்வுகளை ஏற்படுத்தும்
வார்த்தகைகள் மறைத்த உன்
மயக்கும் மௌனங்கள்...

உனக்கு என் மீதும் எனக்கு உன் மீதும்
இருந்ததும் இருப்பதும்
காதலா?!.. காமமா?!.. போதயா?!...

காமமும் போதையும் மீளக்கூடியவை
ஆனால் காதல்?...

உனைப்பற்றிய அநேக எழுத்துக்கள்
இரவில் ஒரு காதலாய் ஒரு தவமாய்
ஒரு யாகமாய் மனதுள்ளேயே
வார்த்தைகளாகி வாக்கியமாகி பின்
விடியலில் காணாமலும் போகிறது
படிக்கப் படாத கவிதையாய்
பிரிக்கப் படாத புத்தகமாய்

மௌனங்கள் பேசிய நம்
உறவின் மீட்சியாய் பிறக்கிறது
என் வரிகளின் நீட்சி....

Monday, December 6, 2010

சாலையோரம்...

வெளியில் அடை மழை
என்னுள் வெப்பம் ‍_ சூரியனாய் நீ...

மழை நனைத்த சாலையில்
உனை அணைத்து நடக்கையில்
ஈரம் குளித்த சாலையோரப் பூக்கள்
தலை சாய்த்து கேட்கிறது
உன் குளிர் வெப்பம் தானும் பெற..

நீர்த்துளி இலைகளின் தலை
துவட்டிக் கிளம்பிய தென்றல்
மூச்சு முட்டி நிற்கிறது
நம் இருவருக்கும் நடுவே
நுழைந்து செல்ல முடியாமல்...

உனை நோக்கும் நொடிப் பொழுதில்
பட படக்கும் என் இமைகள் கண்டு
'கூட்டத்தில் தவறிய குஞ்சுகளென‌
கூட்டிப் போக வருகிறது தாய்க் குருவி...

உதிரும் மழைச் சரங்கள்
உன் முத்தத்தால் மூழ்கிய‌
என் கன்ன‌க் குழிகளை
நிரப்ப முடியாமல்
உருண்டோடி மண் சேர்கிறது...

இத்தனையும் ரசித்துக் கொண்டே
நீ இறுக்கிய இறுமாப்பில்
தொடர்ந்து செல்கிறேன்
என் கனவுச் சாலைகளில்....

Wednesday, November 24, 2010

சௌகரியமான....

சகிப்புகள் எல்லாம் சம்மதித்தல் இல்லை
அனுமதி எல்லாம் அங்கீகரித்தலும் இல்லை

அசௌகரியமான உண்மைகளை விட
சௌகரியம் தரும் பொய்கள்
அனிச்சையாய் ஏற்புடையதாகிறது

ஒத்துக் கொள்ளக் கடினமாயினும்
தியாகங்கள் பலவும் சுயநலங்களே...

ஏதோ ஒரு நம் சௌகரியம் கருதி
இல்லை, பாராட்டுக்கு முற்பட்டு...

புகழ் மயக்கத்தில் புழுங்கும் சுயங்கள்
சுயம் எரித்த நலங்கள்
(அ)
நலம் அணைத்த சுயங்கள் யாவும்
சலுகையின் வெளிப்பாடுகள்

சலவை ஆடைக்குள் கசங்கிய மனங்கள்
சுருக்கம் நீக்கிப் பார்ப்பின்
நிறைந்திருக்கும் பொத்தல்கள்....

Thursday, October 28, 2010

ஈர்ப்பு....



உனக்காகப் படைக்கப் படும் என்
ஒவ்வொரு வரிகளும்
எனக்கான உன் கவன ஈர்ப்பை
மையம் கொண்டே....

சிதறும் உன் சிந்தனைகளின்
நினைவுச் செல்களை எனை நோக்கி
செல்லாமாக திருப்பும் சிறு முயற்சி....

உட‌ல் சாரும் ஈர்ப்புக‌ள்
வ‌ய‌து தின்னும் ம‌ட்டும்...
உயிர் சாரும் ஈர்ப்புக‌ள்
ம‌ண் தின்னும் ம‌ட்டும்

ந‌மைச் சேறும் முதுமையிலும்
மூன்றாம் கால் தேவையிலும்
கை அழுத்தி தோள் கொடுக்கும்
க‌ம்பீர‌த் தோழ‌மை உன‌தாகும் வேளையிலும்...

தொட‌ர்ந்து கொண்டே இருக்கும்
என்னின் இந்த‌ க‌வ‌ன‌ ஈர்ப்பு....

Wednesday, September 29, 2010

நாடகம்...

வளைந்து கொடுப்பது விட்டுக் கொடுப்பது
இரண்டும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தின்
இயலாமை மேல் பூசப்பட்ட‌
பண்புப் பூச்சு...

மனம் சாராத நம் வளைதலை விட‌
நிஜம் உணர்த்தி பிறரின் நிமிர்த்தலே மேலானது

வாழ்க்கைப் புத்தகத்தில் பிரித்த பக்கங்களைவிட‌
படிக்கப் படாத பக்கங்களே அதிகம்

அடுத்தவர் நிர்வாணம் கலையாகும் வேளையில்
சுய நிர்வாணம் கேவலமாகிறது..

சுய அழுக்குப் போக்குவதை விட
அழுக்கு மறைக்கும் ஒப்பனைக் கூட்டலே
கலாச்சாரமாகிவிட்டது...

இங்கே தற்கொலை தியாகமாகிறது
கொலை வீரமாகிறது...

நாடகம் அறிந்து நடிப்பு தெரிந்து
நம்முள் " நான்" மட்டும்
புரியாமல் புதிராய் தொடர்கிறது
சுவைக்க‌ முடியாத‌ சுக‌ங்க‌ள் த‌ந்த‌
சுமையுட‌ன் மீதி நாட‌க‌மும்....

Friday, September 17, 2010

முர‌ண்ப‌ட்ட‌ நியாய‌ங்க‌ள்...

அடகு வைக்கப் பட்ட மூளையின்
எஞ்சிய துளிகளின் துருக்களை
சுரண்டிவிட்டு யோசித்துப் பார்க்கிறேன்...
ந‌டைமுறையில் முர‌ண்ப‌ட்ட‌ சில‌ நியாய‌ங்க‌ளை...

நாளைக்காக‌ இழ்ந்து விடுகிறோம்
ந‌ம்முடைய‌ "இன்றை"

எதிர்கால‌ சேமிப்புக்காக‌ செல‌வாகிற‌து
நிக‌ழ்கால‌ ச‌ந்தோஷ‌மும்
இற‌ந்த‌கால‌ நினைவு அசைக‌ளும்...

க‌டிகார‌ முள்ளை விட‌ வேக‌மாக‌ ஓடி
நேர‌த்தில் ஜெயித்து, கால‌த்தில்
கோட்டை விட்ட‌ வெற்றிக‌ள் ஏராள‌ம்...

மிருக‌வ‌தை காட்டுமிராண்டித்த‌ன‌ம் என‌ப் பேசி
போர்க்க‌ள‌ம் எனும் பேரால்
ம‌னித‌வ‌தை செய்யும் காட்டுமிராண்டிக‌ள் நாம்...

ம‌னித‌ப் பிண‌ங்களில் மேடை க‌ட்டி
ம‌னித‌ம் ப‌ற்றிய‌ பிர‌ச்சார‌ங்க‌ள்...

காத‌லுக்கு ம‌றியாதை‍.
ந‌ம் வீட்டுப் பெண் ஓடிப் போகாத‌வ‌ரை...

ஒழுக்க‌ மீற‌லும் ஒத்துக் கொள்ள‌ப் ப‌டும்
பிற‌ன் தன் ம‌ணை நோக்காத‌ வ‌ரை....

வீனாக‌ப் போனாலும் உண‌வு ‍_ காசில்லாது
வெறுமெனே போகாது ஏழைக‌ளின் வ‌யிற்றுக்கு...

காசில்லாம‌ல் ப‌ட்டினி கிட‌ப்போரை விட‌
நேர‌மின்மையால் ப‌ட்டினி கிட‌ப்போர்
எண்ணிக்கை இங்கே அதிக‌ம்...

இத்த‌னையும் எழுதிவிட்டு
நேற்று எறும்பு ஊர்ந்த‌த‌ற்காய்
இன்று இட‌ம் மாற்றி வைக்கிறேன் டப்பாவை

" க‌ச‌ந்துதான் போன‌து என் வீட்டுச் ச‌க்க‌ரையும்..."

Tuesday, September 7, 2010

நீரில் இடும் கோலங்கள்....

இனிய நட்புகளுக்கு

இந்தக் கவிதை திரு. ஒட்டக்கூத்தன் அவர்கள் நடத்திய போட்டியில் பரிசு வென்றிருக்கிறது என்பதை மிக மகிழ்சியுடன் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

வாய்பளித்து பரிசும் தந்தமைக்கு மிக நன்றி நண்பர் ஒட்டக்கூத்தரே...

கீழ்க்காணும் வலைதளத்தில் விபரம் காணலாம்..
otakoothan.blogspot.com and Re: ஓர் இனிய கவிதை போட்டி.

காற்றின் ஏதோ ஒரு அளாவளில்

மலர்ந்த மொட்டுகள் போல

நிலவின் ஏதோ ஒரு கிரணம் தொட்டு

உயர்ந்தெழுந்த அலைகள் போல

மழையின் ஏதோ ஒரு துளி உள் வாங்கி

முத்தெடுத்த சிப்பி போல

உன்னின் எந்த அலை என் மேகம்

நனைத்துச் சென்றது?...

கருக்கள் தாங்கி நிற்கும் கருவரைக் காட்டிலும்

உன் ஒற்றைக் காதல் மட்டும்

சுமந்து நிற்கும் என் இதயம் தனித்துவமானது...

இரவில் விழுந்த நிழலாய்

நீரில் இட்ட கோலமாய்

தடயங்களற்ற தடம் பதித்துச்

சென்றது உன் காதல்...

Tuesday, August 17, 2010

திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்....

உன்னோடு நான் திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்
உன் நினைவு அழிக்கச் சொல்லி

அறிவு தூண்டும் போதும்
பேதை மனது உன் நினைவால்

குழையும் போதும்
உன்னோடு நான் திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்

ஒரு வார்த்தையும் கூறாமல்

இதழ் மட்டும் மௌனம் காக்க
ஓயாமல் உன்னோடு

இதயம் பேசும் தருணங்களில்- தோழா
உன்னோடு நான் திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்

காலச்சக்கரத்தில் கழன்று விழுந்த

நம் தருணங்களை தட்டிவிட நினைத்தும்
என் நெஞ்சில் தடம் பதிக்க அனுமதித்து
உன்னோடு நான் திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்

காயப் பூக்கள் எனத் தெரிந்தும்

கண்ணுக்குள் பொத்தி வைத்து
கண்ணீரை வரமாக்கி

கடையாணி கழன்ற தேராய்
உள்ளம் உன்னிடமே சாய்ந்து விட
உன்னோடு நான் திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்

வார்த்தைகளில் வாள் வீச்சும்

கண்களிலே காதல் பேச்சும் - என
முரன்பட்ட நம் களத்தில் தோல்வி
எனக்கான சுகம் என்பதால் - தோழா
உன்னோடு நான் திட்டமிட்டே தோற்றுப் போகிறேன்

Thursday, July 29, 2010

துளித் துளியாய்....

இது வரை நாம் பேசிய மணித்துளிகளை

மொத்தமாக அள்ளிக் கையில் தந்தாய்

நதி நீர் அள்ளிய கைகளாய்

பார்த்துக் கொண்டிருந்த போதே

துளித் துளியாய் சொட்டித் தீர்ந்தே போனது

தெரிந்தே தான் செய்திருப்பாய்

பதைக்கும் என் மனது என்று - ஆனால்

நீ அறிந்திருக்க நியாயம் இல்லை

ஒவ்வொரு துளியும் சொட்டிச் சேர்ந்த இடம்

பூமியில் நான் விதைத்த உன்

நினைவு விதைகளின் மேல் என்று....

Monday, July 26, 2010

வன்முறை....











நேற்று என் கையில் நீ
ப‌த்துத் திங்க‌ள் நான் செய்த‌
த‌வ‌த்தின் ப‌ல‌னாய் ‍
என்ம‌டியில் விழுந்த‌
ம‌ழ‌லைக் க‌விதையாய்...

நேற்று என் ம‌டியில் நீ
வ‌யிற் நிர‌ம்பிய‌ ம‌கிழ்வில்
என் முக‌ம் பார்த்து
உன் இத‌ழ்ம‌ல‌ர்ந்து சிரித்த‌ ப‌டி...

நேற்று என் தோளில் நீ
வெற்றிக் கோப்பை கையில் ஏந்தி
இத‌ய‌ம் முட்டிய‌ பெருமித‌த்துட‌ன்...

நேற்று என் காலில் நீ
புருஷ‌ ல‌க்ஷ‌ண‌ உத்தியோக‌த்துட‌ன்
என் ஆசி பெறுவ‌த‌ற்காய்...

இன்று என் கையில் நீ
ஒரு பிடி சாம்ப‌லாய்...

யாருக்கோ வைத்த‌ குண்டில்
அன்னிய‌மாய்ச் சிக்கி
அநியாய‌மாய் உயிர் விட்ட‌
அப்பாவி இளைஞ‌னாய்
க‌ருகிய‌ என் குல‌க் கொழுந்தாய்....

யாரோ ந‌ட‌த்திய‌ வ‌ன்முறையில்
வீழ்ந்த‌து என் த‌லைமுறை......

Saturday, July 10, 2010

தெளிவு....

மழையடித்து தூசி கழுவிய
பசுமர இலைகளாய்
துளிர்த்தது மனம்
உன் நினைவுகள் களைந்த கணத்தில்
கல்லெறிந்த குளமாய்
ஒரு நொடி குழம்பி
மறு நொடி தெளிந்தது
இலை மேல் நீர் கழுவிய தூசியல்ல
நீர் உறிஞ்சி உயிர் கொடுக்கும்
"வேர் நீ என்று"....

Thursday, July 1, 2010

வசீகரம்....













உயிர் சுமக்கும் உடலுக்கு உண்டு

ஜனனமும் மரணமும்

உன் நினைவு சுமக்கும் உணர்வுக்கு உண்டோ?...

பாசி படர்ந்த இதயக் குளத்தில்

வசீகரத் தாமரை உன் நினைவு

உனக்கான என் வரிகள் ஒவ்வொன்றும்

பாசி விலக்கி உனைச் சேரவே முயல்கின்றன..

விரல்களிலிருந்து விழும் முன்னமே

உன் விழிகளில் படிந்திட‌விழைகின்றன...

என் கண் பேசும் கவிதைகளுக்கும்

உன் இதழ் உணர்த்தும் பாடங்களுக்கும்

உவமை தேடியே பிணைகிற‌து நம் விர‌ல்க‌ள்...

உன் வ‌ர‌வால் என் வாழ்வின்

ஒவ்வொரு நாட்க‌ளும் தூசி த‌ட்ட‌ப் ப‌டுகிற‌து

ஒவ்வொரு நொடியும் வ‌ர்ண‌ம் ஏற்றப் ப‌டுகிற‌து

வ‌ளைந்து செல்லும் ந‌தியின் வ‌சீக‌ர‌ம் போல‌

உன் நினைவு சேக‌ரித்த

வார்த்தைக‌ளுக்கு ருசி அதிக‌மாகிற‌து

நில‌வின் கிர‌ண‌ம் பூமியில் விழுவ‌து போல்

ஓசையேதும் இன்றி விழுந்த‌து

என்னுள் உன் காத‌ல்...

உனைப் பார்க்கும் வேளை சிறு சொர்க‌ம்‍

என் இத‌ழோற‌ச் சிரிப்பில்...

நீளும் ஆயுள் ‍‍உன் விழியோற‌ உயிர்ப்பில்....

Sunday, June 20, 2010

தோப்பில் நான் தனி மரம்..















தொலைவுதான் என்றாலும்
தொலைவேன் தான் என்றாலும்
உனை நோக்கிய என் பயணங்கள்
முடிவதேயில்லை..

கேளாதிருந்தாலும் உனக்கு
கேட்காதிருந்தாலும் என்
கொலுசுகள் உன் பேர் சொல்லி
புலம்புவதை நிறுத்துவதே இல்லை..

உனக்கு புரிந்த போதும்
புரியாதது போல் இருந்த போதும்
உன் பார்வை ஸ்பரிசம் படிந்த நேரம்
என் நயனங்களின் உரத்த சப்தங்கள்
உரங்கியதே இல்லை...

நீ பேசிய போதும் பேசாதிருந்த போதும்
என் இதழ்களின் மௌன மொழிகள்
ஓய்ந்ததே இல்லை....

ஒழிச்சலற்று உன் நினைவு மட்டும்
தாங்கி நிற்கும்
"தோப்பில் நான் இன்று தனி மரம்"

Thursday, June 17, 2010

சுயம் இழந்த தேவதைகள்...















அவிழ்த்து விடுங்கள்
வெள்ளைத் தேவதையின் கருப்புக் கட்டை
எங்கேனும் சென்று ஓடி ஒளியட்டும்...

இல்லையேல் எடுத்துவிடுங்கள்
கையின் தராசை
நிலை சாய்ந்துவிட்ட முட் கம்பியால்
குத்திக்கொள்ளும் தற்கொலையாவது
தடுக்கப்படட்டும்

இத்தனை நாள் பொறுத்து, நீதிக்குத்தான்
நெருப்பு வைத்தோம்
பாவம் தேவதைக்கும் வேண்டாம்...

சுயநல அரக்கர்கள் மத்தியில்
சுயம் இழந்த தேவதைகள் ஏராளம்

இரக்கமற்ற தீர்ப்புகளை எழுதிவிட்டு
ஒடிவது பேனா முள் மட்டுமல்ல
நீதியின் நாடியும் தான்...

இங்கே நியாயங்கள் உறங்குவதில்லை
தட்டி எழுப்ப...
உறங்குவது போல் பாசாங்கு செய்கிறது

வேண்டுமென்றே தவறான
இலக்கு சுட்ட சரியான குறி?!...

என்ன சொல்லி என்ன?..
செய்தித்தாள் மடிக்கும் முன்னமே
மறப்பது நம் வாடிக்கை

நாளையும் தொடரும் இதே வேடிக்கை.....

Monday, June 7, 2010

கடைசி வரைக் கனவுகள்....

எங்குறைந்தாலும் உடலின் மாறாத
தட்ப வெட்பம் போல மனதில்
உன் நினைவுகள்-மாற்றங்கள் மறந்து

சூழ்நிலை எதுவாயினும் ஆழ்நிலையில்
ஆழமாய் உன் சாயல்
அழியாத கோலமாய்

உனது வரிகளில் எனது கவிதையின்
அர‌ங்கேற்றம் - நித்தமும்

அநித்ய வாழ்கையில் அனிச்சையாய்
அனுதினமும் நீ - என்னுள் எரியும் தீ!

உன்னால் இன்று எல்லாரும் எல்லாமும்
நானும் எனக்கே அன்னியமாய்

உன் ஞாபகத் துளிகள் என் கண்களின் ஓரமாய்
காயத ஈரமாய் கடைசிவரை - நான்
உன் கனவுகளோடு!........

Wednesday, June 2, 2010

நியதி...

நன்நீர் நதியாகினும்
உப்புக்கடல் சேர்வது நியதி போல‌
உன் உள் நோக்கியே எனது பயணம்
உன்னுள் எனக்கான
உறைவு அற்ற போதும்.....

Friday, May 28, 2010

மனிதம் மறந்த மனங்கள்...

நான்கு புறமும் கைத் தட்டல்கள்
எட்டுத் திக்கிலும் பாராட்டு மழைகள்
ஒளி வெள்ளத்தின் நடுவே
கர ஒலிகளும் போட்டியிட‌
மேடை தொட்டவனுக்கு முதல் பரிசு
அகில இந்திய அளவில்...

பெருக்கெடுத்த வெள்ளச் சுழலில்
சிக்கிச் சுழன்ற மூதாட்டியை
மிகச் சிறந்த கோண‌த்தில்
ஒளிப்பதிவு செய்ததற்காய்...

நிஜத்தை பதிய வைக்கும்
நிழல் வேலையில்
மனிதம் மறந்த மனங்கள்?..

மரத்துத்தான் போனது
உர‌த்த‌ சப்தத்தின் எதிரொலியாய்
மௌனித்த‌ என் ம‌ன‌தும்!.....

Friday, May 14, 2010

வலிகளின் வாசம்....









என் கவிதைகள்
உற்பத்தி செய்யப்பட்டவை அல்ல
உன் நினைவுத் தாக்கத்தால்
உருவாக்கப்பட்டவை...

நிஜம் அந்நியமான
பொய்களைக் கொண்டிருந்தாலும்
உனைப்பற்றியதால்
இனிமையாகத்தான் இருக்கிறது...

உன் மனக்கண்ணின் உணர்வுகள்
என் அகக் கண்ணின் கனவுகளாக,
வந்து உதிர்ந்த வார்த்தைகளை
உனையன்றி பிற கண்கள்
ஸ்பரிசிக்கும் வேளை...

கை தட்டல்களையும் மீறி
வலிக்கத்தான் செய்கிறது
எழுதிய விரல்களுடன்
உன் நினைவு
தாங்கி நிற்கும் இதயமும்...

பழைய காகித கற்றைகளிலிருந்து
உனக்கான பக்கங்களில்
எனது வாக்கியங்கள்
நாம் பழகிய நாட்களின்
ஞாபகச் சின்னமாய்...

மறுபடியும்(சு)வாசிக்கிறேன்
"வலிகள் தாங்கிய உன் வாசத்தை"...

Friday, May 7, 2010

என் முதல் குழந்தைக்கு...

ஒன்பது வருடங்களுக்கு முன் என் முதல் குழந்தையை கருதரித்திருந்த போது எழுதியது இந்தக் கவிதை.... சமீபத்தில் என் பெண்ணுக்கு படித்துக் காட்டினேன், ஒரே சந்தோஷம் அவளுக்கு. அவள் முகத்தில் பெருமை,ஆச்சரியம் நெகிழ்ச்சி என ஏகப்பட்ட கலப்பட உணர்வுகளை பார்க்கையில் என் நாலு வரிகள் செய்த மாற்றங்களை நினைத்து எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆகவே என் முதல் பதிப்பாக என் குழைந்தைக்கான என் வரிகளை போடலாம் என்ற ஆவலுடன் இதோ இங்கே.....

அன்புடன் அம்மா....

வளர்பிறையும் தேய் பிறையும்
வானத்து நிலவுக்கு உண்டு - ஆனால்
என் வயிற்றுக்குள் உதித்த நிலவுக்கு
என்றும் வளர் பிறைதான்...

வண்ணத் தாரகைகளுக்கு நடுவில்
வான் நிலவு
எண்ணத் தாரகைகளுக்கு நடுவில்
என் நிலவு

மரபுக் கவிதையாய் வளர்த்து
புதுக் கவிதையாய் உனை பெற்றெடுப்பேன்
இது என்னுள் வளரும் உயிர் கவிதைக்கு
என் உயிர் எழுதும் கவிதை

இந்த கவிதை அறங்கேறும் நாளுக்காக
காத்திருக்கும் உன்
அன்பு அம்மா.....

Monday, May 3, 2010

ஒரு எளிய அறிமுகம்...

நான் ஒரு அன்பான மனைவி, 9 வயது மகளுக்கும் 5 வயது மகனுக்குமான பாசமுள்ள தாய். 15 வருடங்களுக்கு முன் கவிதை என்ற பெயரில் தோன்றியதை எல்லாம் கிறுக்க ஆரம்பித்ததவள். இன்றும் அதையேதான் செய்கிறேன் என்பது வேறு விஷயம். படித்தது முதுகலை ஆங்கில இலக்கியம் என்றாலும், தாய் மொழி தமிழ் என்பதாலும் அடிப்படையில் ஒரு தமிழச்சி என்பதாலும் பள்ளிப் படிபனைத்தும் தமிழ் வழி கல்வி என்பதாலும் சரளமாக படிப்பதற்கும் எழுதுவதற்கும் வருவது தமிழ் தான். அதற்காக தமிழ் புலமை அதிகம் என்றெல்லாம் தவறான கருத்துக்கு வந்துவிட வேண்டாம். எனக்கு தோன்றிய எண்ணங்களை என் அறிவுக்கு எட்டிய வார்த்தைகளில் எளிமையாக பகிர்வதே நோக்கம்.

நான் என் எண்ணங்களை எழுத்தாக்குவதற்குண்டான அடிப்படை தகுதியை வளர்துக்கொண்டது படிக்கும் பழக்கம் இருந்ததால்தான். படிக்கும் ஆர்வத்தை என்னுள் விதைத்து அதை ஊக்குவிது வளர்த்துவிட்ட என் தாய்க்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.



என் தாய் ஒரு நல்ல (நல்ல என்பதை விட தீவிரமான) புத்தக பிரியர். படிக்கும் ஆர்வம் எனக்கும் என் சகோதரிக்கும் வந்தது என் அம்மாவிடமிருந்துதான். ஆதலால் இந்த வலைதளத்தை என் தாய்க்கு சமர்பிக்கிறேன்.




என் ஒவ்வொரு படைப்பையும் படித்துக் காட்டும்பொழுது பாராட்டி (துளியும் இத் துறையில் சம்பந்தமில்லாவிட்டாலும் பொறுமையுடன் கேட்டு) அதை புத்தக வடிவிலோ (அ) பத்திரிக்கையிலோ போட வேண்டும் என இன்னமும் என்னை தூண்டிக்கொண்டிருக்கும்












என் அன்புக் கணவருக்கு எனது LIFE TIME நன்றிகள்.


ஒரு கூட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டு, கூட்டுப் பறவையாய் இருந்த என்னை, பிற உலகளாவிய விஷயங்களிலும் கவனம் செலுத்த வைத்து, தரமான புத்தகங்களைப் பரிசளித்தும், அறிமுகப் படுத்தியும் என் படிக்கும் ஆர்வத்தை விரிவாக்கி, மேலும் தங்களது விமர்சனங்கள் மூலம் உளியாய் எனைச் செதுக்கிக் கொண்டிருக்கும் எங்கள் குடும்ப நண்பர் திரு. ராஜா செந்தூர் பாண்டியன் அவர்களுக்கும் என் உடன் பிறவா சகோதரர் திரு. வேல்சாமி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த வலைதளம் ஆரம்பிக்க முக்கியத் தூண்டுகோலாக இருந்த எங்கள் நண்பர் தாமஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.