Friday, May 28, 2010

மனிதம் மறந்த மனங்கள்...

நான்கு புறமும் கைத் தட்டல்கள்
எட்டுத் திக்கிலும் பாராட்டு மழைகள்
ஒளி வெள்ளத்தின் நடுவே
கர ஒலிகளும் போட்டியிட‌
மேடை தொட்டவனுக்கு முதல் பரிசு
அகில இந்திய அளவில்...

பெருக்கெடுத்த வெள்ளச் சுழலில்
சிக்கிச் சுழன்ற மூதாட்டியை
மிகச் சிறந்த கோண‌த்தில்
ஒளிப்பதிவு செய்ததற்காய்...

நிஜத்தை பதிய வைக்கும்
நிழல் வேலையில்
மனிதம் மறந்த மனங்கள்?..

மரத்துத்தான் போனது
உர‌த்த‌ சப்தத்தின் எதிரொலியாய்
மௌனித்த‌ என் ம‌ன‌தும்!.....

Friday, May 14, 2010

வலிகளின் வாசம்....

என் கவிதைகள்
உற்பத்தி செய்யப்பட்டவை அல்ல
உன் நினைவுத் தாக்கத்தால்
உருவாக்கப்பட்டவை...

நிஜம் அந்நியமான
பொய்களைக் கொண்டிருந்தாலும்
உனைப்பற்றியதால்
இனிமையாகத்தான் இருக்கிறது...

உன் மனக்கண்ணின் உணர்வுகள்
என் அகக் கண்ணின் கனவுகளாக,
வந்து உதிர்ந்த வார்த்தைகளை
உனையன்றி பிற கண்கள்
ஸ்பரிசிக்கும் வேளை...

கை தட்டல்களையும் மீறி
வலிக்கத்தான் செய்கிறது
எழுதிய விரல்களுடன்
உன் நினைவு
தாங்கி நிற்கும் இதயமும்...

பழைய காகித கற்றைகளிலிருந்து
உனக்கான பக்கங்களில்
எனது வாக்கியங்கள்
நாம் பழகிய நாட்களின்
ஞாபகச் சின்னமாய்...

மறுபடியும்(சு)வாசிக்கிறேன்
"வலிகள் தாங்கிய உன் வாசத்தை"...

Friday, May 7, 2010

என் முதல் குழந்தைக்கு...

ஒன்பது வருடங்களுக்கு முன் என் முதல் குழந்தையை கருதரித்திருந்த போது எழுதியது இந்தக் கவிதை.... சமீபத்தில் என் பெண்ணுக்கு படித்துக் காட்டினேன், ஒரே சந்தோஷம் அவளுக்கு. அவள் முகத்தில் பெருமை,ஆச்சரியம் நெகிழ்ச்சி என ஏகப்பட்ட கலப்பட உணர்வுகளை பார்க்கையில் என் நாலு வரிகள் செய்த மாற்றங்களை நினைத்து எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆகவே என் முதல் பதிப்பாக என் குழைந்தைக்கான என் வரிகளை போடலாம் என்ற ஆவலுடன் இதோ இங்கே.....

அன்புடன் அம்மா....

வளர்பிறையும் தேய் பிறையும்
வானத்து நிலவுக்கு உண்டு - ஆனால்
என் வயிற்றுக்குள் உதித்த நிலவுக்கு
என்றும் வளர் பிறைதான்...

வண்ணத் தாரகைகளுக்கு நடுவில்
வான் நிலவு
எண்ணத் தாரகைகளுக்கு நடுவில்
என் நிலவு

மரபுக் கவிதையாய் வளர்த்து
புதுக் கவிதையாய் உனை பெற்றெடுப்பேன்
இது என்னுள் வளரும் உயிர் கவிதைக்கு
என் உயிர் எழுதும் கவிதை

இந்த கவிதை அறங்கேறும் நாளுக்காக
காத்திருக்கும் உன்
அன்பு அம்மா.....

Monday, May 3, 2010

ஒரு எளிய அறிமுகம்...

நான் ஒரு அன்பான மனைவி, 9 வயது மகளுக்கும் 5 வயது மகனுக்குமான பாசமுள்ள தாய். 15 வருடங்களுக்கு முன் கவிதை என்ற பெயரில் தோன்றியதை எல்லாம் கிறுக்க ஆரம்பித்ததவள். இன்றும் அதையேதான் செய்கிறேன் என்பது வேறு விஷயம். படித்தது முதுகலை ஆங்கில இலக்கியம் என்றாலும், தாய் மொழி தமிழ் என்பதாலும் அடிப்படையில் ஒரு தமிழச்சி என்பதாலும் பள்ளிப் படிபனைத்தும் தமிழ் வழி கல்வி என்பதாலும் சரளமாக படிப்பதற்கும் எழுதுவதற்கும் வருவது தமிழ் தான். அதற்காக தமிழ் புலமை அதிகம் என்றெல்லாம் தவறான கருத்துக்கு வந்துவிட வேண்டாம். எனக்கு தோன்றிய எண்ணங்களை என் அறிவுக்கு எட்டிய வார்த்தைகளில் எளிமையாக பகிர்வதே நோக்கம்.

நான் என் எண்ணங்களை எழுத்தாக்குவதற்குண்டான அடிப்படை தகுதியை வளர்துக்கொண்டது படிக்கும் பழக்கம் இருந்ததால்தான். படிக்கும் ஆர்வத்தை என்னுள் விதைத்து அதை ஊக்குவிது வளர்த்துவிட்ட என் தாய்க்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.என் தாய் ஒரு நல்ல (நல்ல என்பதை விட தீவிரமான) புத்தக பிரியர். படிக்கும் ஆர்வம் எனக்கும் என் சகோதரிக்கும் வந்தது என் அம்மாவிடமிருந்துதான். ஆதலால் இந்த வலைதளத்தை என் தாய்க்கு சமர்பிக்கிறேன்.
என் ஒவ்வொரு படைப்பையும் படித்துக் காட்டும்பொழுது பாராட்டி (துளியும் இத் துறையில் சம்பந்தமில்லாவிட்டாலும் பொறுமையுடன் கேட்டு) அதை புத்தக வடிவிலோ (அ) பத்திரிக்கையிலோ போட வேண்டும் என இன்னமும் என்னை தூண்டிக்கொண்டிருக்கும்
என் அன்புக் கணவருக்கு எனது LIFE TIME நன்றிகள்.


ஒரு கூட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டு, கூட்டுப் பறவையாய் இருந்த என்னை, பிற உலகளாவிய விஷயங்களிலும் கவனம் செலுத்த வைத்து, தரமான புத்தகங்களைப் பரிசளித்தும், அறிமுகப் படுத்தியும் என் படிக்கும் ஆர்வத்தை விரிவாக்கி, மேலும் தங்களது விமர்சனங்கள் மூலம் உளியாய் எனைச் செதுக்கிக் கொண்டிருக்கும் எங்கள் குடும்ப நண்பர் திரு. ராஜா செந்தூர் பாண்டியன் அவர்களுக்கும் என் உடன் பிறவா சகோதரர் திரு. வேல்சாமி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த வலைதளம் ஆரம்பிக்க முக்கியத் தூண்டுகோலாக இருந்த எங்கள் நண்பர் தாமஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.