Wednesday, September 29, 2010

நாடகம்...

வளைந்து கொடுப்பது விட்டுக் கொடுப்பது
இரண்டும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தின்
இயலாமை மேல் பூசப்பட்ட‌
பண்புப் பூச்சு...

மனம் சாராத நம் வளைதலை விட‌
நிஜம் உணர்த்தி பிறரின் நிமிர்த்தலே மேலானது

வாழ்க்கைப் புத்தகத்தில் பிரித்த பக்கங்களைவிட‌
படிக்கப் படாத பக்கங்களே அதிகம்

அடுத்தவர் நிர்வாணம் கலையாகும் வேளையில்
சுய நிர்வாணம் கேவலமாகிறது..

சுய அழுக்குப் போக்குவதை விட
அழுக்கு மறைக்கும் ஒப்பனைக் கூட்டலே
கலாச்சாரமாகிவிட்டது...

இங்கே தற்கொலை தியாகமாகிறது
கொலை வீரமாகிறது...

நாடகம் அறிந்து நடிப்பு தெரிந்து
நம்முள் " நான்" மட்டும்
புரியாமல் புதிராய் தொடர்கிறது
சுவைக்க‌ முடியாத‌ சுக‌ங்க‌ள் த‌ந்த‌
சுமையுட‌ன் மீதி நாட‌க‌மும்....

Friday, September 17, 2010

முர‌ண்ப‌ட்ட‌ நியாய‌ங்க‌ள்...

அடகு வைக்கப் பட்ட மூளையின்
எஞ்சிய துளிகளின் துருக்களை
சுரண்டிவிட்டு யோசித்துப் பார்க்கிறேன்...
ந‌டைமுறையில் முர‌ண்ப‌ட்ட‌ சில‌ நியாய‌ங்க‌ளை...

நாளைக்காக‌ இழ்ந்து விடுகிறோம்
ந‌ம்முடைய‌ "இன்றை"

எதிர்கால‌ சேமிப்புக்காக‌ செல‌வாகிற‌து
நிக‌ழ்கால‌ ச‌ந்தோஷ‌மும்
இற‌ந்த‌கால‌ நினைவு அசைக‌ளும்...

க‌டிகார‌ முள்ளை விட‌ வேக‌மாக‌ ஓடி
நேர‌த்தில் ஜெயித்து, கால‌த்தில்
கோட்டை விட்ட‌ வெற்றிக‌ள் ஏராள‌ம்...

மிருக‌வ‌தை காட்டுமிராண்டித்த‌ன‌ம் என‌ப் பேசி
போர்க்க‌ள‌ம் எனும் பேரால்
ம‌னித‌வ‌தை செய்யும் காட்டுமிராண்டிக‌ள் நாம்...

ம‌னித‌ப் பிண‌ங்களில் மேடை க‌ட்டி
ம‌னித‌ம் ப‌ற்றிய‌ பிர‌ச்சார‌ங்க‌ள்...

காத‌லுக்கு ம‌றியாதை‍.
ந‌ம் வீட்டுப் பெண் ஓடிப் போகாத‌வ‌ரை...

ஒழுக்க‌ மீற‌லும் ஒத்துக் கொள்ள‌ப் ப‌டும்
பிற‌ன் தன் ம‌ணை நோக்காத‌ வ‌ரை....

வீனாக‌ப் போனாலும் உண‌வு ‍_ காசில்லாது
வெறுமெனே போகாது ஏழைக‌ளின் வ‌யிற்றுக்கு...

காசில்லாம‌ல் ப‌ட்டினி கிட‌ப்போரை விட‌
நேர‌மின்மையால் ப‌ட்டினி கிட‌ப்போர்
எண்ணிக்கை இங்கே அதிக‌ம்...

இத்த‌னையும் எழுதிவிட்டு
நேற்று எறும்பு ஊர்ந்த‌த‌ற்காய்
இன்று இட‌ம் மாற்றி வைக்கிறேன் டப்பாவை

" க‌ச‌ந்துதான் போன‌து என் வீட்டுச் ச‌க்க‌ரையும்..."

Tuesday, September 7, 2010

நீரில் இடும் கோலங்கள்....

இனிய நட்புகளுக்கு

இந்தக் கவிதை திரு. ஒட்டக்கூத்தன் அவர்கள் நடத்திய போட்டியில் பரிசு வென்றிருக்கிறது என்பதை மிக மகிழ்சியுடன் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

வாய்பளித்து பரிசும் தந்தமைக்கு மிக நன்றி நண்பர் ஒட்டக்கூத்தரே...

கீழ்க்காணும் வலைதளத்தில் விபரம் காணலாம்..
otakoothan.blogspot.com and Re: ஓர் இனிய கவிதை போட்டி.

காற்றின் ஏதோ ஒரு அளாவளில்

மலர்ந்த மொட்டுகள் போல

நிலவின் ஏதோ ஒரு கிரணம் தொட்டு

உயர்ந்தெழுந்த அலைகள் போல

மழையின் ஏதோ ஒரு துளி உள் வாங்கி

முத்தெடுத்த சிப்பி போல

உன்னின் எந்த அலை என் மேகம்

நனைத்துச் சென்றது?...

கருக்கள் தாங்கி நிற்கும் கருவரைக் காட்டிலும்

உன் ஒற்றைக் காதல் மட்டும்

சுமந்து நிற்கும் என் இதயம் தனித்துவமானது...

இரவில் விழுந்த நிழலாய்

நீரில் இட்ட கோலமாய்

தடயங்களற்ற தடம் பதித்துச்

சென்றது உன் காதல்...