Sunday, December 26, 2010

கூண்டுக் கிளி...















கண் சிமிட்டும் நொடிப் பொழுதில்
திறந்திருந்த கூண்டிலிருந்து
சிட்டாகப் பறந்தேன் விடியலை நோக்கி
என் விடுதலை தேடி....

முறிக்கப்பாடாத சிறகுகளால்
பறந்து திரிந்து முழுமையாய்
அனுபவித்தேன்_ நீண்ட நாளாய்
ஒடுக்கப்பட்ட என் சுதந்திரத்தை...

வெண் பஞ்சு மேகங்கள் மோதி
குளிர் காற்றின் ஈரம் முகர்ந்து
என் சிறிய நுரையீரல் நுரைத்துப் பொங்க‌
சுதந்திரக் காற்றை சுவாசித்தேன்...

பழங்கள் கொட்டைகள் தானியங்கள்
கண்டதெல்லாம் கொத்தித் தின்று
கொஞ்சும் குமரிகளின் காதோரம்
காதல் சொல்லி
குட்டிக் குழந்தைகளின்
தோளோடு குலவிச் சென்று...

சூரியன் தொடு மட்டும் உயரே எழும்பி
சட்டென்று தடாகம் தொட்டு
சிறகுகளைச் சிலிர்க்க வைத்து
மலர் மண் புழுதி அத்தனையிலும்
முகிழ்த்தெழுந்தேன்....

மாலை மயங்குகையில்
மனதோரம் சிறு நெருஞ்சி...
ம‌றுப‌டியும் கூண்ட‌டைந்தேன்

ஒரு துளி அன்புக்கு
ஒரு கிலோ மாமிச‌ம் கேட்கும்
முர‌ண்ப‌ட்ட‌ உல‌க‌த்தில்

சிற‌கொடிக்காம‌ல் த‌ன் உண‌வை
ப‌கிர்ந்த‌ளித்த‌ என் எஜ‌மான‌
துரோக‌ம் முன் சுத‌ந்திர‌ம்
க‌ச‌ந்து தான் போன‌து...

Sunday, December 12, 2010

உற‌வின் மீட்சியாய்....












அனிச்சையாக உள் நுழைந்து
அதிர்வுகளை ஏற்படுத்தும்
வார்த்தகைகள் மறைத்த உன்
மயக்கும் மௌனங்கள்...

உனக்கு என் மீதும் எனக்கு உன் மீதும்
இருந்ததும் இருப்பதும்
காதலா?!.. காமமா?!.. போதயா?!...

காமமும் போதையும் மீளக்கூடியவை
ஆனால் காதல்?...

உனைப்பற்றிய அநேக எழுத்துக்கள்
இரவில் ஒரு காதலாய் ஒரு தவமாய்
ஒரு யாகமாய் மனதுள்ளேயே
வார்த்தைகளாகி வாக்கியமாகி பின்
விடியலில் காணாமலும் போகிறது
படிக்கப் படாத கவிதையாய்
பிரிக்கப் படாத புத்தகமாய்

மௌனங்கள் பேசிய நம்
உறவின் மீட்சியாய் பிறக்கிறது
என் வரிகளின் நீட்சி....

Monday, December 6, 2010

சாலையோரம்...

வெளியில் அடை மழை
என்னுள் வெப்பம் ‍_ சூரியனாய் நீ...

மழை நனைத்த சாலையில்
உனை அணைத்து நடக்கையில்
ஈரம் குளித்த சாலையோரப் பூக்கள்
தலை சாய்த்து கேட்கிறது
உன் குளிர் வெப்பம் தானும் பெற..

நீர்த்துளி இலைகளின் தலை
துவட்டிக் கிளம்பிய தென்றல்
மூச்சு முட்டி நிற்கிறது
நம் இருவருக்கும் நடுவே
நுழைந்து செல்ல முடியாமல்...

உனை நோக்கும் நொடிப் பொழுதில்
பட படக்கும் என் இமைகள் கண்டு
'கூட்டத்தில் தவறிய குஞ்சுகளென‌
கூட்டிப் போக வருகிறது தாய்க் குருவி...

உதிரும் மழைச் சரங்கள்
உன் முத்தத்தால் மூழ்கிய‌
என் கன்ன‌க் குழிகளை
நிரப்ப முடியாமல்
உருண்டோடி மண் சேர்கிறது...

இத்தனையும் ரசித்துக் கொண்டே
நீ இறுக்கிய இறுமாப்பில்
தொடர்ந்து செல்கிறேன்
என் கனவுச் சாலைகளில்....