Sunday, February 27, 2011

அழகிய நாட்களும் அழியாத சோகமும்...
கை விரித்து கடலளவு
எனைப் பிடிக்கும் என்றாய்
உனக்குத் தெரியுமோ தெரியாதோ
என் கையகல இதயத்தின் கற்பனையளவு
எனக்குனைப் பிடிக்கும் என்பது..

கடலுக்கு உண்டு கற்பனைக்கேது
அளவுகோலும் எல்லைக் கோடும்?..

கண்ணயர்ந்த நொடிப் பொழுதில்
வரம் கேட்ட கடவுள் போல்
வந்தே மறைந்து போய்விட்டாய்..
காத்திருந்த காலமெல்லாம்
சேர்த்து வைத்த கண்ணீரோடு
இன்று தவறவிட்ட நொடி முதலாய்
செந்நீரும் கரிக்கிறதே...

உன்னால் என் உயிரில்
விழுந்த முடிச்சுகள்
இறுகாமல் இன்னமும் இளகாமல்...

அழகிய நாட்களையும்
அழியாத சோகத்தையும்
ஒரு சேரக் கொடுத்தவனே

நாம் பழகிய நாட்களின் உச்சம்
இன்று உயிர் வலி மட்டுமே மிச்சம்....

குறுங்கவிதைக‌ள்...

1.

இது பழைய கிணறு
நீ பழகிய கிணறு
உன் நினைவுக் கற்கள் வீசப்படும்போது
மட்டும் சற்றே சலனம்....

2.
நீல வானில் மட்டுமல்ல‌
கருங்குளத்திலும் நட்சத்திரங்கள்
அல்லி...

3.
மேகம் துளைத்து மறைந்த‌
மின்னல் போல‌
என் மனதை துளைத்துவிட்டு
எங்கே சென்றாய்...

4.
இலையுதிர்க்கும் காற்றில்
பூ எதிர்பார்க்கும்
வழிப்போக்கனும் மறந்துபோன‌
உன் நினைவுச் சுமைதாங்கி நான்...

5.
தனிமை

இனிமையானது தான்
நம்மைத் தின்காதவரை...

Saturday, February 26, 2011

இதுவும் கடந்து போகும்....


துன்பம் எனும் துரும்பு கண்டு

துவண்டு விடாதே தோழா

அதைத் துண்டாடும் இரும்புக் கரங்கள்

உனக்கு இரண்டு உண்டு மறந்துவிடாதே...

சோர்வுகளை வியர்வைகள் போல்

துடைத்தெறிந்து துணிந்து செல்

சிங்கத்தின் முன் சிறு நரிகள் என் செய்யும்?..

ஆக்கத் தெரிந்த மனம்

அழிவைக் கண்டு அச்சம் கொள்வதில்லை

நீ ஆக்கப் பிறந்தவன் ஆளுமைத்திறன் கொண்டவன்

செம்பிழம்பு ஞாயிற்றைக் கை மறைப்பாரும் உண்டோ!.
.
உனக்குள் இருப்பது பற்றியது அழிக்கும் நெருப்பல்ல

தன் சாம்பலிலும் உயிர்ப்பு தரும் எரிமலைக் குழம்பு

மெய் என்னும் ரயில் வண்டி

வாழ்வெனும் பாதையில் செல்லும்

பொய் பயணங்களில்

இன்பமும் துன்பமும் மாறி வரும் நிலையங்கள்

ஒற்றைச் சொல் மனதில் கொள்

துணிவாய் எதையும் ஏற்றுக் கொள்

“இதுவும் கடந்து போகும்”

Friday, February 25, 2011

தவறியும்....

எடுக்க முடியாத சில தருணங்களில்

தவறவிடும் அழைப்புகளின் பட்டியலில்

உனது பெயர் இருக்குமோ எனத்

தவிப்புடன் தேடும் கண்கள்

சிந்தியது ஏமாற்றப் புன்னகையை

"தவறியும் உனதழைப்பு

இல்லாதது கண்டு"

Sunday, February 20, 2011

பாருக்குள்ளே...

பழைய வார இதழ் ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதில் சென்னையில் நடந்துவரும் நைட் க்ளப்புகளைப் பற்றியும் பெண்களின் கணிசமான வரவு பற்றியும் எழுதியிருந்தது. அதைத் தொடர்ந்த சில தினங்களிலேயே மேலும் அது பற்றிய மனதுக்கு ஒவ்வாத விஷயங்களையும் கேள்விப்பட நேர்ந்தது. அதன் விளைவே இவ் வரிகள்....

பாருக்குள்ளே...


நரபலிக் கூட்டத்தில் சுய பலியாகும்
சுயம்பு இரைகள்
நைட் க்ளப்பில் பெண்கள்...

பாருக்குள்ளே நல்ல நாடு
பாடிய பாரதியே இன்று நீ சற்றே
(BAR) பாருக்குள்ளே வந்து பாரு

போராடிப் பெற்றோம் சற்றே
அதிக கால் சதவிகிதம் 33%
வெளியில்

சுதந்திரமாய் அனுமதி
முதல் பாதி நிறைத்த‌
88% உள்ளே நிழ‌லில்
முக்கால் நிர்வாண‌த்தில்

திருமணம் முன் குழந்தை
கலாச்சார சீர்கேடு _ தடுப்பு
கருச்சிதைவு மருத்துவத்தில்
பெற்றெடுத்தால் தானே பிரச்சனை..

ப‌டிப்ப‌தென்ன‌வோ " அக்னிச் சிற‌குக‌ளும்"
"அக‌தா க்றிஸ்டியும்"
க‌ண்ணாடி அல‌மாரியின்
அல‌ங்கார‌ அணிவ‌குப்பில்

இடிப்ப‌தென்ன‌வோ மிட் நைட் ம‌சாலாவும்
சிந்து ச‌ம‌வெளியும்..
அல‌ங்கார‌த் திரைக்குப் பின்னே
அழுக்கு நாட‌க‌ங்க‌ள்...

எங்கெங்கு காணிணும் ச‌க்திய‌டா
அந்த‌ ச‌க்தி இழ‌க்குது இங்கே புத்தியைடா...

பாருக்குள்ளே ந‌ல்ல‌ நாடு
பாடிய‌ பார‌தியே இன்று
நீ வ‌ந்து பாரு....

Thursday, February 17, 2011

வாசனை தீண்டிடும்....

சில சமயம் வானவில்லாகவும்
சில சமயம் வண்ணங்களற்றும்
சில சமயம் கருப்பு வெள்ளையாகவும்
நினைவுத் திரையில் வந்து போகிறது
உனைப்பற்றிய நினைவலைகள்...

காற்றடித்துக் கலைய நேர்ந்தாலும்
மேகம் விட்டு மண் சேரும் மழை போல
உனை மட்டுமே சேர்கிறது எனது காதல்

இன்னமும் உறைந்தே உள்ளது
குளிர்ந்த இதழ்களில் உன்
சூடான முத்தம்...

நீ சிந்தும் ஒவ்வொறு புன்னகையும்
எனக்காகத்தான் என்று
மூச்சிழுது நுரையீரல் விரிக்கின்றேன்
முழுவதுமாய் சேமிக்க...

ஊமையாய் கிடந்த மூங்கிலுனுள்
காற்றாய் நுழைந்து
காதலிசைத்துச் செல்கிறாய்.

தென்றல் தழுவும் போதெல்லாம்
உன் வாசனை தீண்டிடும் முயற்சியில்
காதல் காமம் இரண்டும் அற்று
கண்கள் மூடி உனை உணர்கின்றேன்..

Thursday, February 10, 2011

குறுங்கவிதைகள்....

என் பழைய டைரியிலிருந்து...


1.
நான் விளக்குதான்
என்னில் திரியும் இல்லை
எண்ணெயும் இல்லை
ஆனாலும் எரிகின்றேன்
உன் நினைவால்

2.
ச‌ந்த‌னமாக‌ இணைந்திருந்தோம்
நீராக‌ப் பிரிந்தாய்
உல‌ர்ந்துவிட்டேன் நான்

3.
த‌ப்பித் த‌வ‌றி த‌ட்டிவிடாதே
உன் மேல் ஒட்டியிருப்ப‌து
ம‌ண் அல்ல‌ என் ம‌ன‌து...

4.
என் கண்ணாடிக் கனவில்
கல் எறிந்தவன
உனக்கு நன்றி _ உடைத்ததற்கல்ல‌
ஒன்றை நூறாக்கியதற்கு..

5.
தெளிந்த மனதில் கல்லை
நீ எறிந்த்துவிட்டு
என்னை குழப்பவாதி என்றுவிட்டாயே...

6.
கைவ‌லிக்க‌ நான் எழுதிய‌
க‌விதைக்கு அவ‌ன்
என் க‌ர‌ங்க‌ளில் முத்த‌மிட்டான்
அட‌ நான் பாட‌கியாக‌ப்
பிற‌ந்திருக்க‌க் கூடாதா?...

Sunday, February 6, 2011

யுகம் யுகமாய்....

சின்னஞ்சிறு சிரிப்புதிர்க்கும்

உன் உதட்டுப் பிளவுகளில்

புதைந்து போகிறேன் நான்

உன் கருவிழிச் சிறையில் சிக்கி

காணாமலே போகிறேன்

விடுதலை மறந்து

உன் சுட்டு விரல் தீண்டலில்

பனியாய் உறைந்து

சுண்டு விரல் தொடுதலில்

நுரையாய் கரைகிறேன்

என் உயிர் குடிக்கும்

உன் ஓரப் பார்வையில்

எகிறும் என் இதயத் துடிப்பு

அன்று நீ பேசி உதிர்த்த வார்த்தைகளில்

இன்றும் பன்னீர்ப்பூ வாசனை

நாள் ஒன்று கூடி வர வருடம் நான்கு

தவமிருக்கும் மாதம் போல

என்னுள் உனக்கான தவங்கள்

யுகம் யுகமாய்

சிற்பமாக இருந்த என்னை

சிரிக்க வைத்து சிலிர்க்க வைத்து

மீண்டும் பாறையாக்கிப் போய்விடாதே...

Saturday, February 5, 2011

யாராவது?!....

அவசரமாக சாலை கடந்த நேரம்

அடிபட்டுத் துடிக்கும் நாயைப் பார்க்கையில்

உடல் நடுங்க சாலையைக் கடக்க

துணைக் கையை எதிர்பார்க்கும்

மூதாட்டியைப் பார்க்கையில்

பச்சை விளக்கு எரியும் முன்பே

அவசர கதியில் முந்திப் போகும்

கார்களைப் பார்க்கையில்

நீள் கம்பி வெளியில் சரிந்து

கூர் முனையில் பெயருக்கு

சிவப்புத் துணி எச்சரிக்கைப் பறக்க

அசைந்தாடிச் செல்லும் முச்சக்கர

வண்டியைப் பார்க்கையில்

இடப் பக்கம் இண்டிகேட்டர் போட்டு

வலப் பக்கம் கை காட்டி

நேராக விரைந்தோடும்

புல்லட் புலிகளைப் பார்க்கையில்

கருப்பு நிலவில் கால் பதித்தது போல்

நான்கு சக்கரங்களும் குதித்து குதித்து

குண்டும் குழியுமான தார் ரோட்டில்

தத்துவதைப் பார்க்கையில்

எரிச்சலுடன் கண் சுருக்கி உதடு சுழித்து

பல் கடித்து

கேட்கத் தோன்றியது...

“யாராவது இதற்கு ஒரு முடிவு கட்டக் கூடாதா?”

அலுத்துக் களைத்து வீடு வந்து, சோர்ந்து

பசி கிள்ளும் வயிற்றுக்கு எனக்கு நானே

சுடு சோறு இட்டுக் கொள்கையில்

தோன்றவே இல்லை இந்த “ யாராவது” ஆதங்கம்...

Friday, February 4, 2011

மன‌ம்....


நான் நின்று கொண்டிருந்தேன்

அது நடந்து கொண்டிருந்தது

நான் அமர்ந்து கொண்டிருந்தேன்

அது ஓடிக் கொண்டிருந்தது

நான் படுத்துக் கொண்டிருந்தேன்

அது பறந்து கொண்டிருந்தது

நடந்தது, ஓடியது பறந்ததெல்லாம்

அதுதான் _ ஆனால்

களைத்ததென்னவோ நான்....