Friday, April 29, 2011

சாக்கடை நிலவுகள்....


சாக்கடைக்குள் மூழ்கி முத்தெடுத்துப் போனபின்ன்னே
சந்தனம் பூசிக் கொண்டு
சீச்சீ... அது சாக்கடை என்போரே?..

விலை பேசி சதை புண‌ர்ந்து போனவரே
அவர்கள் கதை உணர்வீரோ?....

ஒரு ஜான் வயிறு நிறைக்க
எண் ஜான் உடம்பை பந்தி வைத்த
பாலியல் தொழிலாளி...

நித்தம் நித்தம் உணர்வுகள் கொன்று
உணர்ச்சிகள் விற்று தன்
பாலினம் மரத்த தொழிலாளி...

இரப்பைக்கு உணவளிக்க கருப்பையை
தீயிலிட்ட கொடுங்குற்றவாளி...

செல்வத்தின் எச்சத்தால் அவளுடன் நீ..
வறுமையின் உச்சத்தால் உன்னுடன் அவள்...
கற்புச் சாயம் வெளுத்த மிச்சத்தில் பெண்மை...

உன் தேவை தீர்த்தும்
த‌ன் தேவை தீரா வெறுமையில் அவள்..

உடையைக் களைந்து உதட்டில்
புன்னகையை ஒட்ட வைத்தாள்

உணர்வுகள் களைந்து உடம்பில்
உணர்ச்சி மட்டும் ஒட்ட வைத்தாள்

கண்களின் ஈரம் களைந்து
காமம் மட்டும் ஒட்ட வைத்தாள்

ஒட்ட வைத்து ஒட்ட வைத்து
ஒட்டாத மனம் மட்டும்
பந்தி முடிந்தும் பசி தீராமல்...

காத்திருக்கிறாள்...
சாக்கடைக்குள் நிலவாக
த‌ன் தொழில் முடிவது
வயதிலா? வியாதியிலா! என...

ஆதலால் தவிர்க்காதே......


நீ இழுத்துவிடும் மூச்சிலிருந்தும்
உன் சின்னக் கண் துடிப்பிலிருந்தும்
உன் உதட்டுச் சுழிப்பிலிருந்துமே
என் கவிதைக்கான வார்த்தைகளைக்
கண்டு கொண்டுவிடுகிறேன்...

எழுதிய வரிகள் உன்னால் வாசிக்கப் படுகையில்
பிரத்தியேக வாசனை தாங்கி
கவிதையாக உதிர்கின்றது...

எத்தனையோ வரிகள் சேர்த்து நான்
முட்டி மோதி எழுதிய போதும்
உன் ஒரு நொடி ஓரப் பார்வை
எனைத் தீண்டிச் சிந்திச் செல்லும்
வார்த்தைகளுக்கு ஈடாவதேயில்லை...

நாம் சந்திக்கும் பொழுதுகளில்
உனைப் பார்ப்பதை விட
படிப்பதுதான் இயல்பாக நடக்கின்றது...

தொடுதல்கள் காட்டிலும்
தொலைவிருந்தாலும் உன் சுவாசம்
ஸ்பரிசிப்பதே சுவாரசியமாகிவிடுகிறது...

எனக்கு எப்போதும் சுவாரசியமான
கவிதைகள் எழுதவே பிடிக்கிறது
ஆதலால் தவிர்க்காதே......

Wednesday, April 27, 2011

மௌனத்தின் சத்தத்தில்.....



அது ஒரு மழைக்கால மாலை
உனக்கும் எனக்குமாய் என
இரு தேநீர் கோப்பைகள்
உனக்கும் சேர்த்து என் உதடுகளே
இரண்டையும் பருகும்.....

மேசையில் அடுக்கிய கண்ணாடிச் சதுரங்கம்
உனக்கும் சேர்த்து என் விரல்களே
காய் நகர்த்தி உன் வெற்றியை நிர்ணயிக்கும்....

ஜன்னல் கம்பிகளில் அணிவகுத்த
மழை முத்துக்களை என் விரல் கோர்க்க
இடைவெளி நிரப்பும் உன் கைகளாய்
இன்று என் இரண்டாம் கை.....

டெலிபோன் மணி அடிப்பதாய் எண்ணி
உனக்கும் சேர்த்து நானே
பேசிச் சினுங்கும் ஓரங்க நாடகமாய்
நகரும் நத்தை வாழ்க்கை....

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
என இருந்த காலம் கடந்து - இன்று
இரு போர்வைக்குள் என் ஒரு
துக்கம் மட்டுமே மிச்சம்....

புயலும் பூகம்பமும் இடியும்
தாங்கிப் பழகிய என் இதயம்
இன்று நீ இல்லா மௌனத்தின்
சத்தத்தில் அதிர்கின்றதே........

Monday, April 25, 2011

கல்லரை ஜன்னல்கள்.....

இறந்தபின் என் கல்லரையை

ஜன்னல் வைத்துக் கட்டிவிடு

எனைத் தேடும் உன் சுவாசம்

எளிதாக என் இதயம் சேரட்டும்

என் இதயச் சுவர்களின்

உன் பிம்பம் மூச்சு முட்டாமல் இருக்கட்டும்

என் மூடிய கண்களின் உன் கனவுகள்

இருட்டடிக்கப்படாமல் தொடரட்டும்

ஆதலால் இறந்தபின் என் கல்லரையை

ஜன்னல் வைத்துக் கட்டிவிடு....

Friday, April 15, 2011

என் நொடிகள்....
















உன் விழி வீச்சு எனைத் தொட்ட நொடி
அசைவற்று நின்றன என் கடிகார முட்கள்...

உன் பார்வைகள் எனைக் கடந்த நொடி
காற்று தொட்ட நீர் குமிழியாய்
உடைந்து போனது மனது...

எனக்காக நீ உதிர்த்த மணித்துளிகளில்
பூமிப் பந்தை சுழற்றி அடித்தது யார்?...

நீ உதிர்ந்த என் வெறுமைப் பொழுதுகளில்
ஆணியடித்து அதை நிறுத்தியதும் யார்?

என் எண்ணங்களின் கர்பம் தாங்கிய
வார்த்தை ஒன்று உனைச் சேரும் முன்னே
பிரசவித்து விடுகிறது ஒவ்வொரு முறையும்
வெட்கமாக....

நீ விதைத்தது ஒரு காதல் விதைதான்
எப்படி ஓராயிரம் விருட்சங்கள்?
என்னுள் இன்று....

Wednesday, April 13, 2011

காதல் ரசனைகள்...

எத்தனை முறை நினைத்த போதும்
அலுக்கவே இல்லை
உனைப் பற்றிய எண்ணங்கள்...

எத்தனை வார்த்தைகள் கொண்டு
வடித்த போதும் என்
கவிதைப் பக்கங்களில் இன்னமும்
புனையப்படாத புலப்படாத
வார்த்தையாகவே இருக்கிறாய் நீ...

உனைப் பற்றிய நினைவுகள்
வரும்போதெல்லாம் மேகங்கள்
என் மீது மட்டும் பொழிகிறது
பூஞ்சாரல்கள்...

உன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம்
இதழில் தேன் தடவிச் செல்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள்...

காற்றில் உன் சுவாசம் தீண்டும்
போதெல்லாம்
எனக்காகவே மொட்டு விரிக்கிறது
மலர்க் கொடிகள்...

என்றேனும் உணர்ந்திருக்கிறாயா?
அதிகாலையில் பயணிக்கும்
மகரந்தத்தோடு என் காதலையும்
கலந்து நான் அனுப்பியதை...

எப்போதேனும் கண்டிருக்கிறாயா?
உன் வீட்டைச் சுற்றும்
மின் மினிப் பூச்சியுடன்
உனக்கான என் கனவுகளும்
சேர்ந்து மின்னுவதை...

எத் தருணமாவது முகர்ந்திருக்கிறாயா?
உன் தோட்டத்து ரோஜாக்களில்
என் வாசமும் கலந்திருப்பதை...

எப்போதாவது சேகரித்திருக்கிறாயா?
உன் முற்றத்தில் சிதறும் மழைச் சரங்களில்
என் முத்தங்களும் சிந்தியிருப்பதை...

இனிமேல் இவைகளைத் தேடாதே
நீயாக உணர வேண்டியதை
நான் சொல்லித் தேடுகையில்
காயப்பட்டுப் போகும் காதல் ரசனைகள்...

Tuesday, April 5, 2011

நீ.. நீயாக....

வேலைக்கு நடுவே தொலைபேசி செய்து
தொல்லைகள் கொடுத்தாய்
நொடிக்கொரு தரம் குறுஞ்செய்தி அனுப்பி
கோபத்தைத் தூண்டினாய்
ஏன் லேட்டு? சாப்பிட்டயா? இன்னுமா கிளம்பல?
கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்தாய்...
பேசினால் முகம் தூக்கி
பேசாதே போ என்றாய்
பேசாதிருந்தால் உதடு சுழித்து
பேசவே மாட்டியா? என்றாய்
என் அலுவல்கள் புரியாமல்
அவஸ்தைகள் தந்தாய்
ஐயோ! புரிஞ்சுக்கவே மாட்டியா? -அன்று
என் கடுங்கோபக் கத்தலில்
அடங்கித்தான் போனாய்
இன்று எனக்கான உனதனுசரிப்பில்
வெறுமை தெரியுதடி
நான் கேட்ட புரிதலில்
உயிர்ப்பு இல்லையடி
உன் கொஞ்சல்கள் குறைந்த பக்குவத்தில்
ஜீவன் இல்லையடி
வார்த்தைகள் வழித்த
உன் மௌனங்கள் வலிக்கச் செய்யுதடி
எனக்காக நீ வேண்டாம்
நீ.. நீயாக எனக்கு வேண்டும்
மீண்டு வருவாயா? மீண்டும் வருவாயா?...
காத்திருக்கிறேன்...

குறுங்கவிதைக‌ள்...

"என் பழைய பக்கங்களில் இருந்து"

1. வீடு...

வளைத்து வளைத்து சேர்த்துப் பின்னி

அழகாகத்தான் கட்டுகிறாய்

அடித்து அடித்துக் கலைத்தாலும்

மீண்டும் மீண்டும் உன் வீட்டை

என் வீட்டில் ஒட்டடையாக.....


2. 500 ரூபாய் நோட்டு....

காந்தியே...

இன்னும் ஏழையைச் சேராமல்

உனக்குமா ஏளனச் சிரிப்பு?!...


3.வெய்யில்...

சற்றே வெயில் அதிகம் தான்

வியர்த்துத்தான் போகிறது

ஐஸ் வாட்டர் பாட்டிலுக்கும்...


4.சிகரெட்...

அவள் இடை

என் இரு விரல்களுக்கு இடையில்

எங்கள் 18 வருட தாம்பத்தியத்தில்

பிறந்தது கேன்சர் குழந்தை...


5.தன் மானம்...

இறக்கும் போதும்

இரக்க விருப்பமில்லை

வாய்க்கரிசி போடாதே....