Saturday, July 30, 2011

ஆடி வெள்ளி...









குடிக்காத பாம்புக்கு

குடம் குடமாய்

பால்

பசியில் அழுகிறது

தெருவோரக்

குழந்தை..


ஆதலால் உனக்குத் துணையாக.....













உன் ஒற்றை விரல் பிடித்து
நடை சொல்லித் தருகையிலே
தடுக்கிவிடுமோ என தவித்த மனது‍
இன்று வலிக்கிறது _ அதே
ஒற்றை விரலில் எனை போகச் சொல்லி
நீ வாசலை சுட்டும் போது....

ரத்தத்தை பாலாக்கி ஊட்டுகையில்
பூரித்த கடிபட்ட என் மார்பு ‍_ இன்று
அடிபட்டது அதே மார்பில்
துணி மூட்டை நீ எறிந்து
உன் பல் கடிக்கையில்...

ஒற்றைப் பிள்ளை பெற்றாலும்
விட்டுக் கொடுத்து வாழப் பழக்கினேன்
இன்று நீ என்னையே
விட்டுவிடப் போவது தெரியாமல்...

உன் பிள்ளை கைப் பிடித்து
உன் துணையின் தூண்டுதலில் __ நீ
என் கை உதறுகையில்

உன் பிள்ளை முகம் பார்த்து
பதைக்கிறது என் உள்ளம்
நாளை உனக்கும் நடக்குமோ என் கோலம்?..

கற்பனைக்கே கனக்கி்றது மனது
தனி மரமாய் உனைப் பார்க்க....

ஆதலால் விட்டு விட்டுப்
போகிறேன்
என் கைத்தடியை
உனக்குத் துணையாக.....

Tuesday, July 26, 2011

தண்டனைக்குரியவை....















வானம் நிலவு நட்சத்திரங்கள்
இருள் ஓளி நிறங்கள்..

சலனமற்ற இரவு
சந்தடியான பகற்பொழுது..

யாருமற்ற ஒற்றையடிப் பாதை
ஆயிரம் பேர் நடுவிலும்
உன் நினைவு மட்டும் சுமக்கும்
என் தனிமை...

அனைத்துமே எனக்கு மகிழ்வான
வஷயங்களாகிவிட்டது...

அவை அனைத்திலும்
நீ பொருந்தி
எனை ஈர்ப்பதால்...

உனக்குமாய்ச் சேர்த்து
சந்தோஷங்கள்
சுமந்து நிற்கிறேன்..

தவிர்ப்புகளால் தள்ளிப்போடாதே
அற்ப ஆயுளில் தருணங்கள்
குறைவு..

காதலில் தவிர்ப்புகளும்
தயக்கங்களும்
தண்டனைக்குரியவை......

Saturday, July 23, 2011

உனக்கென.....


















இனி என் கவிதைகள் எதுவும்
உனக்கு அர்ப்பணம் இல்லை...

உன்னால் உருவாகி
உனது உடமைகளாக
உன்னால் உணர்த்தப்பட்ட
வரிகளை எப்படி
உனக்கே சமர்ப்பிப்பேன்?!...

ஆதலினால் இனி
என் கவிதைகள்
உனக்கு அர்ப்பணம் அல்ல...

தேடிக் கொண்டிருக்கிறேன்
உனக்கென
களங்கமற்றதாய் தர
தூய அன்பு தவிர

வேறு என்ன என்னிடம்
உள்ளதென....

Wednesday, July 20, 2011

காதலொழித்து....



















குளக்கரையில் அமர்ந்து கொண்டு
நிலவெனத் தெரியும் உன்
பிம்பத்தில் கல்லெரிகின்றேன்
கலைத்துவிட எண்ணி...
குளத்திலும் உடையவில்லை
வானிலும் கலையவிலலை...

நெஞ்சினுள் எரியும் உன்
நினைவுத் தீ அணைக்க
உலர்ந்துவிட்ட நம் உறவினை
மொத்தாமாய் தூக்கி எறிகின்றேன்


அத்தனையும் இரையாக்கிக் கொண்டு
முன்னிலும் அதிகமாய்
கொழுந்துவிட்டு எரிகின்றாய்...

மூளை அடுக்குகளில் வெண் மேகமென
படிந்திருக்கும் உன்னை
ஊதித் துரத்திவிட விழைகிறேன்...
நீயோ கார் மேகமென
காதல் பொழிந்து
எல்லா நாளங்களிலும்
பிரவாகமாய் பரவுகின்றாய்...

எத்தனை முயன்றாலும்
உன் ஒற்றைச் சிரிப்பால்
என் முயற்சிகளனைத்தயும்
வீனாக்கி விடுகின்றாய்...

இன்று ஒட்டுமொத்த
நிராகரிப்பால்
என் கவிதைகளனைத்தையும்
விதவையாக்கிப் போகின்றாய்...

Monday, July 18, 2011

காதல் செய்கிறேன்...




















நமது ஒவ்வொரு சந்திப்பையும்
சுவாரசியமாக்க
என்னுடைய நாட்களின் நிகழ்வுகளை
ரசனைமிக்கதாக்குகிறேன்

நீ திரும்பும் மாலை வேளைகளில்
சாலையோரம் மலர் சொரியும்
மரக்கிளையாய்

நீ எழுதும் போது உன்
எழுத்தைப் படிக்கும்
மேஜையின் விளக்காய்

நீ அருந்தும் நேரங்களில்
உனைக் குடிக்கும் தாகமாய்

உனைக் காட்டும் கண்ணாடியில்
உனையே ஊடுருவும் பிம்பமாய்

எனை நினைக்கும் பொழுதுகளில்
உன் உதட்டில் மலரும்
ஒற்றைப் புன்னகையாய்

நீ படுக்கும் மெத்தையில்
உனைச் சுமக்கும் தலையணையாய்

உன் இமைகள் இணையும் நேரத்தில்
உனைத்தழுவும் கனவுகளாய்

உன் கொஞ்சல்களின் கூடலாய்
ஊடல்களின் கெஞ்சலாய்

நீ சுவாசிக்கையில் உள் சென்று
உன் உயிர் ஸ்பரிசிக்கும் மூச்சாய்

பிரிவறுத்து உன்னுள்ளே
கலந்துவிட்டேன்

நான் உன்னைவிட என் மேலுள்ள
உன் நேசத்தை
அதிகம் காதல் செய்கிறேன்...

Saturday, July 16, 2011

விடை கொடு...















சில வார்த்தைகள் எழுதப் படுவதில்லை
உணரப் படுகின்றன...
சொற்களற்றும் நீ உணர்ந்த
என் வார்த்தைகள் போல...

அதனாலேயே இன்று பிரிவோம்...

பின் என்றேனும் ஒரு நாள்
மழையின் தூறலில்
இடிகளின் சப்தத்தில்
மின்னல்களின் நடுவில்...

இருளின் ஆரம்பத்தில்
ஒளிகளின் சேர்க்கையில்
மாலையின் மயக்கத்தில்
சுட்டெரிக்கும் சூரியப் பகலில்
நிலா பொழியும் குளிர் இரவில்...

ஏதோ ஒரு தருணத்தில்
சந்திக்க நேர்ந்தால்...

மனம் நெகிழ்ந்து
குற்றவுணர்வற்ற
ஒரு புன்னகை
பரிமாறிக் கொள்வோம்...

அதற்காக இன்று பிரிவோம்...

விடை கொடு.....

Tuesday, July 12, 2011

உறவுகள்....








வாழ்க்கையின் மத்தியில்

முடிந்த பாதியாய் சில உறவுகள்...

சுடும் தென்றலாய்...

குளிரும் நெருப்பாய்...

மாற்றங்கள் நிறைந்த முரணாய்...

சில சமயம் ஈர்ப்பாய்...

சில சமயம் நிராகரிப்பாய்...

தற்செயலான தலையெழுத்தாய்...

வாழ்வின் இன்றியமையாததாய்...

ரசிக்கப் பட்டாலும்

மறைக்கப் படவேண்டிய

நிர்வாணம் போன்றதாய்...

வரையறுக்கப்படாத வரம்புகளின் மீறலாய்...

காயம் செய்யும் பூக்களாய்...

ஒவ்வொறு பகல் பொழுதையும்

இரவு நோக்கி இழுத்துச் செல்லும்

கண்களின் கனவுகளாய்...

ஏகாந்தத்தின் ஏக்கங்களாய்...

எதிர்பார்ப்புகளின் ஏமாற்றங்களாய்...

ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளாய்...

முதலும் முடிவும் தெரியாத காதலாய்...

வாழ்க்கை முழுதும்

நினைவுகளால் மட்டுமே

தொடரக் கூடியதாய்...

சில உறவுகள், விதி செய்யும் விசித்திரங்கள்....

Friday, July 8, 2011

உயிர் ஆடும் ஊசலாய்....















பன்னீர் தூவிய
என் மேகங்கள் யாவும்
இன்று தூவிச் செல்கிறது
கண்ணீரை..

உன் கனவுகள் கலைந்த
என் கண்களின் நீரில்
சாயம் போனது வானவில்...

விதையாய் நான்
தூவிய காதலை
நீ ஆணியால்
அறைந்து சென்றாய்...

என் உயிர் ஆடும்
ஊசலாய்...

நம் காதலைப் போல
நீ கழற்றி எறிந்த
உன் பழைய
சட்டைப் பொத்தானில்
சிக்கி இருக்கும்
என் ஒற்றை முடியில்....

Tuesday, July 5, 2011

யாதுமாய்....









விதையும் நீயானாய்

முளையும் நீயானாய்

வேரும் நீயானாய்

நீரும் நீயானாய்

வெப்பமும் நீயானாய்

விருட்சமும் நீயானாய்

அனைத்தும் நீயாகிவிட்டு










மலர்வதை மட்டும்

எப்படி எனையாக்கினாய்!

Saturday, July 2, 2011

வரமா? இல்லை சாபமா?....











கொடுத்தது உன்னிடமே இருக்கட்டும்
இந்த ஒரு துளிக் கண்ணீரையும் சேர்த்து
முடிந்த காதலின் முகவரியாக...

நான் எழுதிய கவிதைகளில்
இதில் தான் புள்ளி வைத்த
வார்த்தைகள் அதிகம்....

உன் உயிரை மெய்யெனச் சேர்ந்திருக்கும்
என் காதலின் புள்ளிகள் யாவும்
இன்று நம் கண்களின் நீர்த் துளிகள்...

பிரிவு உரைத்து பிரியம் உடைத்து
ஒரு செல் உயிரியாய்
உன் காதல் மட்டும் சுமந்திருந்த
என்னில் அனுவெனச் சிதறி
ஒவ்வொறு செல்லிலும்
உனை நிரப்பிச் சென்றுவிட்டாய்...

நட்பென்ற தர்மம் காக்க
காதல் சங்கடத்தைத்
தவிர்த்துவிட்டாய்...

தவிப்புகளின் விளிம்பில்
தர்மசங்கடமாய் ஒற்றை நிலவாய்
உனக்கென தவமிருந்த எனக்கு
நீ தந்தது வரமா? இல்லை சாபமா?