Thursday, September 15, 2011

மிஸ்டர்.பொது ஜனம்.....


செய்தித்தாள் மடித்துக் கொண்டே
“ அப்பப்பா எப்படி வெலவாசி
ஏறிக்கெடக்கு?...

சாமான் வெல ஏறிப்போச்சு?..
கறிகாய் வெல ஏறிபோச்சு?..

ச்சட்... இந்த பெட்ரோல் வெல
மாசா மாசம் ஏறி
நம்ம BP யும் இல்ல ஏத்துது?..

நாடு எங்க போயிட்டு இருக்கோ?..
மனுஷன் வாழறதா? வயித்த சுருக்கி சாவறதா?

யாருக்கும் அக்கறை இல்ல..
கொஞ்ச நாளாவது வண்டிகள எடுக்காம
பெட்ரோலும் வாங்காம
ஸ்டிரைக் பன்னனும்...”

புலம்பிக்கொண்டே எதையோ
தேடிக்கொண்டிருந்த
என்னவரிடம் கேட்டேன்..

என்னப்பா வேணும்?
எத தேடறீங்க?..

இல்ல.... பைக் சாவி எங்க வச்சேன்?
அடுத்த தெரு நாராயணன்
வீட்டுக்குப் போகனும்...
சரி... அந்த கார் சாவியாச்சும் கொடு..

என்றவரைப் பார்த்து
காற்றில் ஆடிய செய்தித்தாள்
சிரித்தது போலவா இருந்தது?!..

Wednesday, September 14, 2011

சிரிப்பற்றவள்.....


உன் வானத்தில் மேகமாய் நான்
என் வானத்தில் நீலமாய் நீ..

நீ தூவிச் சென்ற நட்சத்திரங்கள்
நம் காதல் வானவில்லின்
க்ரீடங்களாய்
நிறமிழந்த என் வானத்தில்
இன்றும்...

அனிச்சையாய் நீ எப்போதும்
என் உறக்கத்திலும் விழிப்பிலும்
கனவாகவும் நினைவாகவும்...

மணல் வெளியில் ஓடிக் களைத்த
குதிரையாய் நான்
உன் மனவெளியில்
அன்பைத் தேடி...

இரக்கமற்ற என் இரவுகளில்
இமை மூட நீ
முட்களைப் பரிசளிக்கிறாய்..

சிரிக்கும் இதழ்கள் இருந்த போதும்
நான் சிரிப்பற்றவள் ஆகின்றேன்..

Saturday, September 10, 2011

தங்கைக்கோர் கவிதை....
என் பிறந்த நாளுக்காக என் தங்கை எழுதிய இக் கவிதைக்கு,

உடன்பிறப்பவள்...உயிரின் மறுபிறப்பவள்....

என் உறவாய் மலர்ந்த உடன்பிறப்பவள்
என் உயிரின் மறுபிறப்பவள்....

மலரிதழில் மழைத்துளியாய்
என்னை மண்ணில் விழாமல் காப்பவள்...

பூவாசம் முள்ளிற்கும் ஒட்டிக்கொள்வதுண்டு
எனக்காக முள்ளாய் சில நேரம் நீ மாறியதுமுண்டு....

விழியோரம் வழிந்திடும் கண்ணீரும் உன்னால்
அன்பின் மழையாய், மகிழ்ச்சியின் சாரலாய் கரைந்ததுண்டு

நீ நீறு பூத்த நெருப்பாய் நிலைத்திருக்கின்றாய்
உன் கதகதப்பில் என்றும் நான் குளிர்காய்வதற்கு....

கைக்கெட்டிய தூரத்தில் வானவில்
நாம் கைகோர்த்த நேரத்தில் சிரிக்கும்....

இனியும் நினைவில் வைப்பதற்கு நிறைய நிஜங்கள்
காத்திருக்கின்றன...
வாழ்நாள் போதாது உன் நிழலாய் நான் தொடர்வதற்கு.

****************************************

பதிலாக நான் எழுதிய வரிகள் இதோ...தங்கைக்கோர் கவிதை....


கண் வாசிக்கும் முன்னே என்
கண்ணீர் வாசிக்க
தளும்புதே கண்ணே...

வரிகளில் பாசம் நிரப்பி
அன்பெனும் வாசம் பரப்பி
வாழ்த்துப் பா படைத்திட்டாய்

வார்த்தையில்லை என்னிடத்து
மூழ்கி நிற்கிறேன் உன் அன்பிடத்து

பெற்றதினால் தாயானது பின்னாள்
பெறாமலே தாயானது உன்னால்

எத்தனைப் பெற்றாலும்
என் முதற்பிள்ளை நீ
என் பிள்ளைக்கும்
தாய்ப்பாசம் தந்தவள் நீ

கவிதை தந்தாய் என்
பிறந்தநாள் பரிசாக
கடவுள் தந்தார் உனை
என் பிறப்புக்கும் பரிசாக...

Sunday, September 4, 2011

ஏதேதோ......ஏதேதோ பேசிச் செல்கிறாய்...

பர பரக்கும் அலுவல் நேரத்திலும்

அமைதியான நிலவு நேரத்திலும்

உனக்கு எபோதேனும் கிடைக்கும்

தனிமைப் பொழுதுகளிலும்

என்னை எப்போதும் நிறைக்கும்

உன் நினைவுப் பொழுதுகளிலும்

நான் சொல்லில் மறைத்த காதலையும்

நீ சொல்ல மறந்த காதலையும்

கவனமாகத் தவிர்த்துவிட்டு

ஏதேதோ பேசிச் செல்கிறாய்...

Friday, September 2, 2011

மெது மெதுவாய்......ஆழ் கடலில் எப்போதோ ஒரு பறவை
உதிர்த்துச் சென்ற சிறகைப் போல
இப்போது என் தனிமையில்
மிதக்கும் உன் நினைவு...


மரம் உதிர்த்த வரண்ட இலைகளை
பசுமையாக்கும் முயற்சியில்
மீண்டும் மீண்டும் நனைத்துக் கொண்டிருக்கும்
மழைத்துளியாய் உனில் சொட்டும்
நீ மறந்த என் ஞாபகம்

கல்லெறிந்து நீ போனபின்னும்
முன்னிலும் தெளிவாய் உன் பிம்பம்
என் மனக்குளத்தில்...

ஏதேச்சையாக என்றோ
உள் நுழைந்துவிட்ட உன் நினைவு
எனைப் பற்றி... சுற்றி...
மெது மெதுவாய் ஆட்கொள்கிறது
இன்று ஆட்கொல்லியாக....