Saturday, October 29, 2011

சொந்த வீட்டின் அகதிகள்....


















சொந்த வீட்டின் அகதிகளாய்
சுயம் இழந்து சுகம் துறந்து

முட்கம்பி வேலி நடுவே
முட்கள் கீறிய ரோஜாக்களாய்

பசுமை போர்த்திய பூமியின்
வறண்ட நிலத்தில்

உதிர்ந்து கொண்டுதான் உள்ளது
இன்னமும்

எதிர்பார்த்து ஏமாறும்
ஏக்க இதயங்கள்

தண்ணீருக்கு ஆசைப்பட்ட‌
உப்புக் கற்களாய்...

Friday, October 28, 2011

நீயும் நானும்...
















எப்போதோ படித்த புத்தகத்தை
சும்மா இருக்கையில்
புரட்டியது போல...

மனதாழத்தில் புதைந்திருந்த வரிகள்
மேலெழுந்து வந்தது போல...

என்றோ என் ஆழ்மனதால்
உருவகிக்கப்பட்ட நீ
இன்று மேகமென
மிதந்து வந்தாய்...

மீள் வாசிப்பின் சுகத்தை
உனை நேசிக்கையில்
உணரவைத்தாய்...

புத்தகமும் நீயும் ஒன்று
எப்போதும் நினைவடுக்குகளில் மட்டும்
சஞ்சாரம் செய்வதால்..

அதன் வரிகளும் நீயும் ஒன்று
எப்போதும் எனை மீட்டுச் செல்வதால்

என்றும் நான் உனது வாசகியாய்
கற்பனை எல்லைகளைக்
கனவுகளில் மட்டும்
கடந்து செல்பவளாய்...

Thursday, October 27, 2011

காதல்...









பாறையாய் இருந்தேன்
உளியாய் செதுக்கினாய்
பூவாகிவிட்டேன் நான்..














இமைகளை காணிக்கைக் கேட்டு
தூக்க வரம் தரும்
கொடூரக் கடவுள் நீ...

Monday, October 24, 2011

ஏற்ற இற‌க்கம்...














மிரட்டி உருட்டி
அடிமாட்டு விலைக்கு
நிலம் வாங்கி

உண்டியலில் லட்ச ரூபாய்
காணிக்கை போட்டு

கோயில் படி இற‌ங்கியவனின்
கணக்கில் ஏறியது
மேலும் ஒரு பாவ மூட்டை

Thursday, October 20, 2011

மௌனம் போதுமானது...










பருவங்களின் நிறமாற்றத்தில்
தோன்றிய வானவில்
உன் வரவு

இப்போதெல்லாம் என் கவிதைகள்
உன் கைதட்டலுக்கோ சிலாகிப்புக்கோ
ஏங்குவதில்லை

உன்னின் இந்த நிமிட வாசிப்புக்கும்
அடுத்த நிமிட வேலைகளுக்கும் இடையே
உனை நிறுத்தி வைக்கின்ற
ஒரு நொடி மௌனம்
போதுமானதாகி விட்டது

விரல்களின் அழுத்ததில் இமை மூடி
நீ இழுத்து விடும் ஒற்றை மூச்சுக் காற்றில்
நிரம்பி விடுகிறது என்
வார்தைகளுக்கு இடையேயான
இடைவெளிகள்

உற்ற உணர்வுகளை பதியம் போட்டு
உயிர்ப்பித்து கவிதைச் செடியாக
வளர்க்கிறேன்..

பாலைவனப் புல்லின் மேல்
விழுந்த பனித்துளியாய்
என் ஒவ்வொரு கவிதையும்
உன் பார்வைப் பட்டு
சிலிர்க்கின்றது...

ஒரு நிமிடத்தில் எத்தனை முறை
சுவாசிக்கிறேன் என்பது தெரியாது
என் சுவாசித்தலை விட
உனை நேசித்தலே அதிகம்....

எனக்கான காற்றை உன் சுவாசத்தில்
கண்டுகொள்கிறேன்

Wednesday, October 19, 2011

காத்திருக்கிறேன்....



















நீ காதோடு செய்த சத்தம்
காதலோடு தந்த முத்தம்
என் நெஞ்சோடு செய்யும் யுத்தம்
உன் நினைவோடு நித்தம் நித்தம்

என் மூக்குத்தி ஸ்பரிசங்களை
நீ மூக்கால் உணரும் போதெல்லாம்
மூர்ச்சையாகிப் போகின்றது
நான் முடிந்து வைத்த
வார்த்தைகள் எல்லாம்

பாதைகள் தூரம் தான்
பயணங்கள் நீளம் தான்
உன் நினைவு நிழலாய்
தொடரும் மட்டும்
குறுகும் சாலை மாயம் தான்

கனவுகள் தின்று நினைவுகள் மென்று
காத்திருக்கிறேன்
காதலில் கொஞ்சம் காதலோடு கொஞ்சம்...

Monday, October 10, 2011

கர்வம் பூசிய....










உனக்கென பிறந்தேன் இல்லை

உனக்கென வளர்ந்தேன் இல்லை

உனக்கென வாழ்வதுவும் இல்லை

ஆனால்

உனக்கென நொடிகளை செலவிட்டு

உனக்கான வரிகளைச் சேமிக்கிறேன்

வார்த்தைகளின் இடைவெளியை

உன் நினைவு கொண்டு நிரப்புகிறேன்

நிழல் நேரங்களின் நினைவுப் பதிவுகளை

காகிதப் பதியமாக்கிப் பொக்கிஷமாய்

பொத்தி வைத்துப் பார்க்கிறேன்

காமம் கலக்காத காதலின்

உடைந்த துகள்களை இன்னமும்

ஈர்த்துக் கொண்டிருக்கும் கர்வம் பூசிய

உன் நினைவலைக் காந்தங்கள்....

Saturday, October 8, 2011

பேதமை என்று...













படித்தவையும் பிடித்தவையும்
ஒன்றின் மீதேறி

வெறுமையின் வெற்றிடங்களில்

சேர்த்துவைத்த வார்த்தைகள்
சிதறியபின்

பக்குவமும் பகுத்தறிவும்
முரணாகி

கடைசியில் தான் தோன்றியது

காமதேவன் தோட்டத்தில்

அன்பு விதை தூவி

காதல் செடி வளர்த்துவிட்டு

நட்பு மலர் எதிர்பார்ப்பது

பேதமை என்று...

Saturday, October 1, 2011

சுயநலம்...















உனை என்னுள்ளேயே
இருத்தி வைக்க
நினைக்கிறேன்...

என் சுயநலத்தின்
தண்டனையாய் நீ
வெளியேறிக் கொண்டே
இருக்கிறாய்...

பல நேரங்களில்
கண்ணீராகவும்..
சில நேரங்களில்
கவிதையாகவும்...

உனது கிளை தேடியே...














வரம் வேண்டிப் பெற்ற
சாபமாகிவிட்டது நம் காதல்
யுகங்களில் சொட்டிய
நிமிடங்களைப் போல

நெல் வயலில் ரோஜாக்களாய்
உன் ஞாபகங்கள்
மணம் பரப்பினாலும்
களைகளாய்

இலையுதிர் காலத்திலும்
வெற்றுக் கிளையில் அமர்ந்து செல்லும்
பறவையின் உறவு போல
எங்கு சஞ்சரித்தாலும் நினைவுகள்
உனது கிளை தேடியே..

ஈர உடையில் ஒட்டிக்கொள்ளும்
மணல் நீ
அத்தனை விரைவில் நீங்குவதில்லை
அதனாலேயே வெயில் தவிர்க்கிறேன்

மனதாழத்தில் உனை நிரப்பியிருக்கும்
மானசரோவர் நான்
கலங்கல்கள் பல இருந்தாலும்
களங்கமற்று பிரதிபலிக்கின்றேன்
உனை மட்டும் ...