Tuesday, November 29, 2011

கழைக்கூத்தாடி....












வார்த்தைகளாய் இருந்த என் கவிதை
வண்ணத்துப் பூச்சியாய் மாறியது
உன் பார்வை தொட்ட நேரங்களில்..

மழைக்கால மாலைகளில் எல்லாம்
வந்துவிடுகிறது உன் ஞாபகங்கள்
சாரல்களாய் எனை நனைத்த
உன் காதலை நினைவுபடுத்தி..

வெயில் காயும் உச்சிப் போதுகளிலும்
வந்து அடிக்கிறது உன் நினைவலைகள்
உன் வரண்ட மௌனங்கள் சுமந்த
சுடுகாற்றாய் எனைத் தொட்டு

விரும்பினாயா?
விரும்பியது போலிருந்தாயா?
வெறுக்கிறாயா?
வெறுப்பது போலிருக்கிறாயா?

கழைக்கூத்தாடி போல்
நம் காதல் மேல் நடக்கிறேன்
கழியாக உனைப் பற்றியபடி
வீழ்வேனோ?!.. வாழ்வேனோ?!..

என் தத்தளிக்கும் கேள்விகளுக்கு
உன் ஊசிமுனை மௌனத்தில்
ஒளித்துவைத்திருக்கிறாய்
வாழ்க்கைப் புதிரின் விடையை..

Sunday, November 27, 2011

என் வீடு....













என்னுடைய வீடு
சந்தோஷங்களால் ஆனது...

அன்பினால் அமைத்த வாசல்
பாசத்தினால் வேய்ந்த கூரை
நேசங்கள் நிரம்பிய ஜன்னல்கள்
காதல் முகிழ்த்த முற்றம்
சிரிப்புகள் பூக்கும் தோட்டம்
உறுத்தாத கட்டுபாடுகளாய் வேலிகள்..

தகர்த்து நுழைந்தன
விலையேற்றங்கள்..

ஒட்டுப் போட வந்ததன
இலவசங்கள்..

வருவாய் சுருங்கிய வாசல்
தேவைகள் சுருக்கிய ஜன்னல்கள்
பட்ஜெட் கட்டிய கூரை
கணக்கால் நிரம்பிய முற்றம்
சிக்கனம் பூக்கும் தோட்டம்
பணத் தட்டுப்பாடுகளே வேலிகள்..

இன்று என் வீடு

விலைவாசியால் ஆனது...

Friday, November 25, 2011

ஓர் இரவு.. ஒரே இரவு...









முள் ஒடித்த தீர்ப்பின் முடிவில்
என் ஆயுள் முடிவு ஆரம்பித்த இரவு

குற்றமும் பாவமும் கொலைகளும் துரத்த
என் விழிகள் உறக்கம் தொலைத்த இரவு

கண்களின் வழியே திரவம் கசிந்து
அமிலமாய் மாறி சுட்ட இரவு

பசியில் அலையும் இரப்பையின் இரைச்சல்
பாவ இறைச்சி புசித்த இரவு

பன்னிய பாவங்கள் பட்டியல் இட்டு
பட்டிணத்தாரை படித்த இரவு

அரக்க புத்தனும் புத்த அரக்கனும்
மாறி மாறி யுத்தம் செய்த இரவு

கம்பிகள் வழியே தப்பித்த அரக்கம்
வெற்றுத்தரையில் தவழ்ந்தது புத்தம்

ஒவ்வொரு இரவும் இருக்க இறுக்க
பாவமுடிச்சுகள் நெகிழ்ந்தது கண்டேன்

இக் கடைசி இரவின் இறுக்கத்திலே
இம்மை துறந்து இன்மை உணர்ந்தேன்

பிறப்பால் பெற்ற மனித இடத்தை
இறப்பு நிரப்ப

மரணம் பரிசாய் தந்த
மனிதத்துவத்தில்

கடைசி முடிச்சும் கழுத்தை இறுக்க
பாவங்கள் அவிழ்ந்து புத்தனாய் இறந்தேன்..

காலத்துளிகள்...













கால நதியில் கலந்துவிட்ட
மழைத்துளிகளை தேடுவது போல
தேடிக் கொண்டே இருக்கிறேன்...

என் நிகழ்காலத்தில்
தொலைந்து விட்டிருந்த
உன் இறந்தகால நினைவுகளை...

சுடும் வெயிலை விட சுட்டு விட்ட
உன் நிழலின் உக்கிரம்
அதிகமாத்தான் இருக்கிறது...

இன்னும் ரசம் பூசாத என் வீட்டின்
பழைய கண்ணாடியில்
ரசனையோடு பார்க்கிறேன்
பழகிய உன் பிம்பத்தை...

சிக்கலான பின்னல் வலையின்
நுனி முடிச்சு போல் பிடிபடாதது
என்னுள் நீ நுழைந்த நிமிடம்...

என் மூச்சுப் பயிற்சியில்
உள்ளிழுக்கும் வேகம்
வெளிவிடுவதில் இல்லை..

காற்று வெளியில் ஏதோ ஒரு துளியில்
கலந்திருக்கும் உன் “சுவாசம்”

Thursday, November 24, 2011

நீ...














தவிர்க்கவும் முடியாத
பார்க்கவும் முடியாத
மாற்றம் நீ...

விடவும் முடியாத
விழுங்கவும் முடியாத
தவிப்பு நீ...

வார்த்தைகள் சுமந்து நிற்கும்
ஆழ்ந்த மௌனம் நீ...

மௌனங்கள் பேசுகின்ற மொழி நீ...

என் இலையுதிர் காலத்தே வந்த
வசந்தம் நீ...

என் பலமான பலவீனம் நீ..
பலவீனமான பலமும் நீ...

என் முகம் மறைத்து
உன் முகம் மட்டுமே காட்டிய
மாயக் கண்ணாடி நீ...

காட்டாறாய் பெருக்கெடுத்து
சட்டென்று வற்றிவிட்ட
நதி நீ...

முடிவில் தொடங்கி
முதலிலேயே முடிந்துவிட்ட
புதிர் நீ....

Wednesday, November 9, 2011

சலனம்....








ஒவ்வொரு புழுவிற்கும்
தப்பிய மீன் சிக்கியது
வெற்றுத் தூண்டிலில்..

Friday, November 4, 2011

நான் க‌ட‌வுள்...













போர்க்குற்றங்கள் ஆக்கிரமிப்புகள்
அத்துமீறல்கள் குண்டுமழைகள்
துரோகங்கள் படுகொலைகள்..

தாள் முழுவதும்
எங்களின் நாள் முழுவதும்
எத்தனை எத்தனை நம்பிக்கைச் சிதறும்
அவலக் கோலங்கள்..

ஏ!?... ஈசனே...
எதற்காக எம் குலம் படைத்தாய்?
எதைக்காக்க எம்மறிவு வளர்த்தாய்?
ஏனிப்படி எம்மினம் அழிக்கிறாய்?

பொங்கியெழுந்த கேள்விகளுக்கு
இடையே என் அலைபேசியில்
மின்னியது ஒரு குறுஞ்செய்தி..

பெண்ணே!..
சற்றே பொறுத்திரு..

இந்நொடி நான் இமயமலை உச்சியின்
ஓரத்தே ஒரு ப‌துங்கு குழியில்

என்னைக் க‌டக்கும் இப்போர் விமான‌ம்
குண்டு பொழியாம‌ல் இருந்தால்
அடுத்த‌ நொடி உன் கேள்விக‌ளுக்கு
ப‌தில‌ளிக்கிறேன்...

இப்ப‌டிக்கு
-நான் க‌ட‌வுள்

தொட‌ர‌ட்டும் இனியும்...













உனைப்பற்றிய படிமங்களை
சற்றே உரசிப் பார்த்தேன்..

ஒரு ஓவியம் போல்
மனதில் வழிந்திருக்கிறாய்
ஒரு சிற்பம் போல
நெஞ்சில் நிறைந்திருக்கிறாய்
காதல் செய்து இதயத்தில்
கசிந்திருக்கிறாய்
புகை போல என்னுடல்
தீண்டியிருக்கிறாய்...

எனக்குப் பிடித்த பலவும்
உனக்கும் பிடித்திருக்கிறது

மழை மண்ணின் வாசம்,
மிளகாயின் நெடி
பட்டாசுப் புகை
வைரமுத்து கவிதைகள்
மழைக்கால இரவுகள்
இளஞ்சூரிய விடியல்கள்
குளிர்காலத் தூக்கம்
நீண்டதொரு ரயில் பயணம்
பூரி சட்டினி
சூடான ஃபில்டர் காபி
இப்ப‌டி எத்த‌னையோ....

ஒத்திருந்தாயோ?
ஒத்திருப்ப‌து போலிருந்தாயோ?!...

அந்ந‌ம்பிக்கையில் எந்த‌ ஆணியும்
அறைந்த‌தில்லை நான்
இதுவ‌ரை..

நீயும் நானும் இந்த‌க் க‌விதையும் போல‌
சொல்லிவிட்ட‌ வார்த்தைக‌ளுட‌னும்
சொல்ல‌ ம‌ற‌ந்த‌ நினைவுகளுட‌னும்
தொட‌ர‌ட்டும் இனி வ‌ரும் கால‌மும்

Thursday, November 3, 2011

மழைக்காட்டில்....













பூவாய் வருஷிக்கும் மழை
உடல் சூட்டை தொட்டுச் செல்லும்
குளிர்த்தென்றல்
அங்கங்கே முளைத்திருக்கும்
திடீர்க் குளங்கள்...

மொத்தமும் உள்வாங்கி
மழை கழுவிய கருந்தார்ச் சாலையில்
வெண்பாதம் பதிய‌
மென்மையாய் நடக்க ஆசைதான்...

உடல் ஒட்டும் ஆடையின் வசீகரம்
ஆபாசக் கண்களில் வக்கிரமாகி
பெண்களும் உறுத்திடும் வேளையில்...

சட்டென்று ஓட்டுக்குள்
ஒ(து)டுங்கித்தான் போனேன்
மானசீகமாய் மழைக்காட்டில்
தொலைந்து கொண்டே.....