Monday, August 29, 2011

என் செல்லமே....











மழை பெய்யும் நாட்களில் எல்லாம்
நான் செய்து கொடுக்கும்
காகிதக் கப்பலுக்காய்
என் கன்னத்தில் உன் முத்தத்தின் ஈரம்
மழைத்துளியைவிட குளிர்ச்சியாய்....

கண்ணெதிரே கொடியில் காயும்
என் புடவையின் பின்னே ஒளிந்து
அம்மா!.. என்னைக் கண்டுபிடி....
அழைக்கும் உன் குரல்
தேனைவிட இனிமையாய்...

வீடு வந்து சேரும் முன்பே
உன் மிச் குட் சொல்லி
கையில் ஸ்டார் போட்ட கதையையும்
ரோஷினி கன்னத்தை நீ கிள்ளிய
கதையையும் சொல்லி முடிப்பது
காற்றை விட வேகமாய்...

குடிக்காமல் பாலை செடிக்கு
கொட்டிவிட்டு
பாவம்மா செடி ஒல்லியா இருக்குல்ல..
உன் தயாள குணம்
கர்ணணனையே மிஞ்சியதாய்...

இரவெல்லாம் சொல்லிய காக்கா கதையும்
தேவதைக் கதையும்
பகலில் காக்காதேவதைக் கதையாய்
மாற்றிய உன் கற்பனை
நிஜத்தைவிட அழகானதாய்...

எறும்புக்கு வழி தெரியல
அதான் நானே
சக்கர டப்பாக்குள்ள
போட்டுட்டேன்...
ஈரம் நிறைந்த உன் குறும்புகள்
சக்கரையினும் தித்திப்பாய்....

அடுத்த வருட பிறந்த நாளுக்காய்
இன்றிலிருந்தே நாட்களை எண்ணும்
உன் குழந்தைத்தனம்
பாலினும் வெண்மையாய்...

கொஞ்சலிலும் மிஞ்சலிலும்
உதடு சுழித்து விரல் நீட்டி
நீ சொல்லும்
ச்சீ ப்போ... உன் பேச்சு கா..
அப்படியே என் மறு பதிப்பாய்...

Saturday, August 20, 2011

நம் காதல்.....









வானிலையைப் போலத்தான்
இருக்கிறது நம் காதல்
சில நேரங்களில் மழைச் சாரலாய்
பொழியும் உன் அன்பு..
மறுகனம் சுட்டெரிக்கும் வெயிலாய்
உன் நிராகரிப்பு...
நடுவே தோன்றும் வானவில்லாய்
உனைப்பற்றிய என் கனவுகள்..

Tuesday, August 16, 2011

நீ எனது....












வாழ்வின் கசப்பான சங்கடங்களின்
தீர்வானதொரு நொடிப் போழ்தில்
நிகழ்ந்துவிட்டது நம் அறிமுகம்..

நட்பாகி நெகிழவும் இல்லை
காதலாகி கசிந்துருகவும் இல்லை
காமத்தில் சுயம் இழக்கவும் இல்லை

இன்னதென்றே புரிய முடியாததொரு
உறவின் மீட்சியாய் நீள்கிறது
நம் சந்திப்புகள்...

சில நேரங்களில் மலராக,நிலவாக
வானவில்லாக தேவதையாக
உருவகமாகிறேன்
நான் உனக்கு...

எப்போதும் வாசமாக ஒளியாக
நிறமாக தெய்வத்துவமாக
உணர்வாகிறாய்
நீ எனக்கு...

நீ எனது ராமன்

நான் சீதையல்ல
கௌசல்யை அல்ல
தசரதன் அல்ல
லக்ஷ்மணனும் அல்ல...

உன் இருப்பை புறவெளி தவிர
அகவெளியிலும் உணர முடிந்த
ஆழ்ந்த அன்பும் அளப்பறிய
நம்பிக்கையும் நிறைந்துள்ள
அனுமன் நான்...

உனது பெயரின் உச்சரிப்பு
போதுமானது
என் சுவாசத்தில்
வாசனை கூட்ட...

உன் நினைவுகளின்
சிறு துளி போதுமானது
எனதுயிரில் பூ பூக்க...

Sunday, August 14, 2011

கதை சொல்லி...









காக்காய் வடை சுட்ட கதை
சிங்கராஜாவை முயல் அழித்த கதை
குரங்கும் குல்லாக் காரானும் கதை
க்ருஷ்ணனும் காளிங்கனும் கதை

அத்தனைக் கதைகளையும்
குழந்தைகள்
அரங்கத்தினுள் ஆன்ட்டி
சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்க

வெளியில் 1000 ரூபாய்
கட்டிய பெருமையில்
அம்மாவும் அப்பாவும்

கதை கேட்க ஆளில்லா
வெறுமையில்
முதியோர் இல்லங்களில்...
தாத்தாவும் பாட்டியும்

திருப்பிக் கொடுக்க....










நேற்று என்னுடைய
எந்த அழைப்புகளையும்
நீ எடுக்கவில்லை

எந்த குறுஞ்செய்திகளுக்கும்
உன்னிடமிருந்து
பதில் இல்லை

இரவு முழுதும்
தூக்கத்திலும் துக்கத்திலுமாக
அழுது உனைத் திட்டி

எழுதிய வரிகள் யாவும்
காலை விழிப்பில்
காணாமல் போயிருக்க

எத்தனை யோசித்தும்
அத்தனையும்
மறந்த எரிச்சலில்
கிளம்பிவிட்டேன்

அன்று நீ கொடுத்த
ஒற்றை முத்தத்தை
உனக்கே திருப்பிக் கொடுக்க....

Saturday, August 13, 2011

உணர்வாயா?!...










திறக்கப்படாமல் இருக்கும் கதவு

தூசிகள் மட்டும் சுவாசித்த
மூடிய அலமாரியின் புத்தகங்கள்

யாரும் அமராமல் கிடக்கும்
மூன்றுகால் நாற்காலி

மீட்டப்படாமல் விட்ட வீணை

இவைகளை ஒத்திருக்கிறது
உன்னால் வாசிக்கப்படாத
என் கவிதைகள் பல...


என்றேனும் நீ அவைகளை
ஸ்பரிசிக்க நேர்ந்தால்
மக்கிய டயரியின் பக்கங்களில்
காய்ந்துவிட்ட எழுத்துக்களினூடே

என் உயிர் இன்னமும்
உனக்காக ஈரமாய் இருப்பதை
உணர்வாயா?!...

யோசித்தவனும் யாசித்தவனும்.....

முன் மாலை பொழுது - அது
கவிஞனுக்கான பொன் மாலைப் பொழுது
வானம் தன் பூமிக் காதலிக்குத் தரும்
முத்த மழைக்கு பயந்து
எல்லோரும் வீட்டினுள் ஒளிந்திருக்க

நான் மட்டும் பூங்காவில் மரக்குடையின் கீழ்
எஞ்சிவிழும் மழை முத்தம் என் மேலும்
சில சிதறட்டுமே என்று கவிதை தாகத்தோடு
வார்த்தை நீரைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

இயற்கையின் இறகுகளில் பறந்து
இரண்டொரு வரிகளை என்
விரல்கள் வரித்திருக்க- முடிவுரை
தேடி முட்டி நின்ற எண்ணங்களுக்கு நடுவே

அபஸ்வரமாய் ஒரு குரல்
" ஐயா! பசிக்குது காசு கொடுங்க"
சட்டென்று தடைபட்ட எண்ணத்தோடும்
சுள்ளென்ற கோபத்தோடும்- எழுதிய
காகிதத்தை கசக்கி எறிந்துவிட்டு

அடுத்த மரம் தேடி என் கவிதைக்கு
வார்தைகளை யோசித்திருந்தேன்....
மறுபடியும் அதே குரல்
யாசித்தவன் கையில் கசங்கிய காகிதம்
என் கவிதைக்கான முடிவுரையோடு

"செவிக்கு உணவில்லாத போது
சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்"
"இயற்கையின் அதிசயங்களில் பசிகளும்
மறந்து போகும்"
சரிதான் ஐயா!....

இங்கே மூன்று நாள் பட்டினியில்
இரப்பையின் இரைச்சலில் இயற்கையின்
இசைகளும் என்னைப் பொறுத்தவரை
இரண்டாம் பட்சம் தான்....

"நீங்கள் இயற்கையை ரசித்து வாழும் ஜாதி
நாங்கள் இயற்கையை புசித்து வாழும் ஜாதி"

Tuesday, August 9, 2011

நானும் மழையாகிறேன்....













தூரத்தில் நீ இருந்தாலும்
என் இதயத்தில்
உன் நிழல் பரப்புகிறாய்...

மயிலிறகு வார்த்தை கொண்டு
என் அன்பை
எனக்கே சொல்லுகிறாய்...

சோர்வுகள் நனைத்த
என் புன்னகையை
நீ மட்டுமே
அடையாளம் காண்கிறாய்...

முகமூடி மனிதர்கள் நடுவே
மூச்சு முட்டுகிறது எனக்கு
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்

உன் குளிரிதழ் கொண்டு
என் நுனிவிரல் முத்தமிடு
நானும் மழையாகிறேன்....

Sunday, August 7, 2011

நம்பிக்கை...
















வெற்றிகள் அதிசயங்கள் அல்ல
அவை முயற்சிகளின்
கிரீடங்கள்..

தோல்விகள் கேவலங்கள் அல்ல
அவை யாவும் வெற்றியின்
முதற்படிகள்...


தோல்விகள் அவமானம்
எனும் எண்ணத்தை
உன் மரபு அணுக்களிலிருந்து
வெட்டி எடு...

வாழ்க்கை அநேக
அதிசயங்களைத் தாங்கியுள்ளது
துன்பங்களை மட்டும் பிடித்துக் கொள்ளும்
பிடிவாதம் தவிர்...


கஷ்டப் பட்டுச் செய்வதை
இஷ்டப் பட்டுச் செய்து பார்
இலக்கு உனை நோக்கி நகரும்..


புலம்பல்கள் தவிர்த்து
புரிதல்கள் பழகு
மனம் வண்ணத்துப் பூச்சியாய்
சிறகடிக்கும்...

பணங்களைக் காட்டிலும்
மனங்களை நேசம் செய்
வாழ்தலின் சுவை கூடும்...

அச்சம் தவிர்
உன் வாழ்வு பிறர் வசமாகும் போது...

நாணம் தவிர்
நீ குழந்தையாய் மாறும் போது...

உண்மை தவிர்
மற்றவர் மனம் நோகும் போது...

எதிர் பாலரை மட்டுமல்ல
வாழ்வையும் காதலித்துப் பார்
சங்கடங்கள் தவிர்க்கப் படும்
சம்பவங்களில் சுவாரசியம் கூடும்....

Saturday, August 6, 2011

ஸ்பரிஸம்.....












வெற்றுத் தொடுதல் மட்டுமல்ல
ஸ்பரிஸம்
ஒரு மந்திரம்...
உணர்வுகளின் யாகம்

தாய்மையின் ஸ்பரிஸம்
குழந்தையின் ஸ்பரிஸம்
சகோதர ஸ்பரிஸம்
நட்பின் ஸ்பரிஸம்
காதலின் ஸ்பரிஸம்

ஒவ்வொன்றும் தனித்துவமான
உணர்வுகளால் உச்சரிக்கப்படும்
உள் அதிர்ந்து உயிர் தொடும்
மந்திரம்...

ஸ்பரிஸம் எனும் புனிதம்
தவறான உச்சரிப்பில் தடம்மாறி
வக்கிரப் படும் பொழுது

முரண்கள் பிறழும்
உண்மைகள் ஒப்பனைக்குத் தயாராகும்
முடியும் முன்னே திரைமூட வைக்கும்

ஸ்பரிஸங்கள்
கொச்சையாக அல்ல
கவனமாக
உணர்த்தப்பட வேண்டியவை..

குடை பிடித்தவள் ....














உன் நினைவு

ஒழுகும் வீட்டில்

குடை பிடித்தவள்

ஆகிறேன்

நம் காதலில்

மூழ்கிக்கொண்டே.....

உயிரோடு.....









இமைப் பறவை இடம் மாறி

இதயங்கள் தடம் மாறி

உயிரோடு உயிர் பேசும் போது

இதழ் மட்டும் ஒட்டிக் கொள்ளும்

மௌன பாஷை பேச.....