Sunday, February 26, 2012

என்ன செய்து?....










எல்லாம் எனக்காகவே
என் நன்மைக்காகவே
என கட்டியம் கூறுகிறாய்...

என் மகிழ்ச்சியே உனது முக்கியம்
என சமரசம் செய்கிறாய்...

எங்கிருந்தாலும் நான்
நன்றாக இருக்க வேண்டும்
எனக் கூறியே விலகிச் செல்கிறாய்...

என் நல்லதுக்கே எனச் சொல்லி
பிரிவை சமாதானமாக்குகிறாய்...

அது சரி!...

நான் இருந்தால் தனே
நன்றாக இருக்க
நன்மையுடன் இருக்க
மகிழ்வுடன் இருக்க...

நீ இல்லாத என் இருத்தல்
இறத்தலுக்கு சமம் அல்லவா?...

என்ன செய்து உன் வாக்கை
காப்பாற்றப் போகிறாய்?

Friday, February 17, 2012

அவன் கண் நீர் அஞ்சலி....














இருளையும் இரவையும் தன் முள் நகர்த்தி
அளந்து கொண்டிருந்தது டிக்கிட்ட கடிகாரம்

மன அந்தகாரத்தையும் விகாரத்தையும்
அழித்துக் கொண்டிருந்தது தடக்கிட்ட
அவன் இதயம்..

கடவுளைப் போல எங்கும் இருக்கும்
சில்வண்டின் ரீங்காரமும்
மூங்கைலைக் கொத்திச் சென்ற
ஊதல் காத்தும்
ரகசியம் பேசி சலசலத்துக் கொண்டிருந்த
அரசமரத்து இலைகளும்
அசைவற்ற அவனைக் கண்டு
ஒரு நொடி அடங்கித்தான் போயின...

நிலவின் மௌனத்தில் கல்
எறிந்து கொண்டிருந்தது
பொருளற்ற மாயச் சொற்களை
முனகிக் கொண்டிருந்த அவன் மனது

மனிதனாயும் இல்லாமல் மிருகமாயும் இல்லாமல்
மனித மிருகமானதொரு நிலைக்குத்
தள்ளப்பட்டிருந்தான் அவன்...

குத்தும் போது மிருகமாய்
குருதி கண்டு மனிதானாய் துடித்து

ஒரு நொடி புத்தனை தூங்க வைத்த அரக்கனாய்
மறு நொடி விழித்திருந்த அரக்கனைக்
கொன்றுவிட்ட புத்தனாய்
துவந்தமாகி போயிருந்தது அவனின்
ஆறாம் அறிவு...

இனம் புரியாததொரு துயரத்தின்
பிடியில் சிக்கி முனகிக் கொண்டிருந்தது
அவன் உயிர்...

அவனை மட்டுமே உணர்ந்த
அவனது கண்ணீர்த் துளிகள்
அஞ்சலி செய்து கொண்டிருந்தது
அவனறியாமலேயே

நேற்று இருந்த அவளுக்கும்
இன்று இறந்துவிட்டிருந்த அவனின்
நாளைக்கும்

நீ இல்லையென்றால்...















நீ இல்லையென்றால் என்ன
இறந்துவிடுவேன் என நினைத்தாயோ?..

ஒரு புத்தகம் போதும் எனக்கு
உன் நினைவை மறப்பதற்கு..

ஒரு பாடல் போதும் எனக்கு
உன் உறவை அழித்துவிடுவதற்கு...

ஒரு மழைத்துளி நனைதல் போதும்
உன் ஞாபகம் கரைத்துவிடுவதற்கு...

பாலையில் இருந்தாலும்
தனிமையில் இருந்தாலும்
மணல் அழுத்திக் கிடப்பேனே தவிர
உன் பெயர் எழுதிக் கிடக்க மாட்டேன்...

என் இதயத்தில் மீனைப் போல
நழுவிக் கொண்டிருக்கும் உன் நினைவுகளை
தூண்டில் போட்டு நிறுத்திவிடலாம்
என பார்த்தாயோ?!..

முட்டிக்கால் கட்டிக் கொண்டு
மேட்டு வளைவைப் பார்த்துக் கொண்டு
உனக்காக உருகி உருகி கவி படைப்பேன்
என நினைத்தாயோ?!...

ஹூம்.. ஒரு போதும் இல்லை

என்ன?...
நீ இல்லையென்றால் நான்..................

Monday, February 13, 2012

சேர்த்து வைத்திருக்கிறேன்....














கவிதைகள் எழுத நான்
ப்ரயத்தனப் படுவதேயில்லை
உன் நினைவு வந்த உடனேயே
வரிகளும் வந்து விழுகின்றன
தானாக வழியும் கண்ணீர் போல...

உனக்கு என்மீது
எல்லையில்லாக் கருணை
என் துரதிர்ஷ்டம் அக் கருணை
கைகளற்றதாய் இருப்பது...

காயங்களைச் சுமந்திருக்கும்
என் கவிதைகளில்
நீர் பருக வருகிறது
உன் தாகம்...

சுனைகளில் சேர்த்து வைத்திருக்கிறேன்
தெளிவான தண்ணீரை
என் கண்ணீரை
ஆழத்தில் தள்ளியபடி...

Friday, February 3, 2012

ஈடாக...














வெம்மை அதிகம் தாக்கிய
ஒரு வெயில் பொழுதில்
எனக்காக குடை பிடித்தது
உன் கைகள்...

பனிப் பொழிவின் உச்சத்தில்
நடுங்கிய என் உடலுக்கு
கம்பளிப் போர்த்தியது
உன் கைகள்...

மழையின் தாக்கத்தில் விண்டிருந்த
பூமிப் பள்ளத்தில் வீழ்ந்திருந்த
என் திகைப்பின் கரம் பற்றி தூக்கிவிட்டது
உன் கைகள்...


என் வீட்டின் சாளரத்தின் வழி மட்டுமே
வந்து கொண்டிருந்த தென்றலுக்கு
அடைத்திருந்த என் வாசல் பூட்டுடைத்து
சரளமாக வெளிச்சத்தையும்
நுழைய வைத்தது
உன் கைகள்...

காதலின் கைகளாய் நட்பின் கைகளாய்
கருணையின் கைகளாய்
எனை நோக்கி எப்போதும்
நீண்டு கொண்டே இருக்கின்றன
உனது கைகள்...

அதற்கு கைமாறாக
என்ன பரிசைத் தருவது நான்?

அன்பின் கரங்களுக்கு
தங்கத்தில் வளையமா?

அக் கரங்களைத் தாங்கும்
உன் தோள்களுக்கு மாலையா?

கைகளின் நீட்சியாய்
நீண்டிருக்கும் உன் விரல்களுக்கு
வைரங்கள் பதித்த மோதிரமா?

எதைத் தந்து சிறப்பிப்பேன்?..

ஈடாகவில்லை...

நீ மீட்டுத் தந்த என் இதழ்களின்
உறைந்திருந்த புன்னகைக்கும்...

நீ துடைத்ததால் கண்ணீர் மறந்து
சிரித்திருக்கின்ற என் கண்களுக்கும்...

வெறுமையில் வெளுத்திருந்து
உன் வரவால் செம்மையான
என் முகத்துக்கும்...

அவை எதுவுமே ஈடாகவில்லை...

சில நினைவுகளையும்
உன்னால் வந்த என் புன்னகையும் தவிர
வேறு எதுவும் உன் கைகளில் தர
ஏற்பாக எனக்குத் தோன்றவில்லை...

Thursday, February 2, 2012

கனவுகளின்...














என் வரிகளுக்கிடையேயும்
வாசிப்பவன் நீ..
வாசித்ததை நிஜத்தில் சொல்லாமல்
கனவிலேயே சொல்கிறாய்..

கனவுக்குள் ஒரு மந்திரமாய்
என் வாசகம்
உன்னால் உச்ரிக்கப்பட்டு
உச்சரிக்கப்பட்டு
வைரமாய் உருவெடுக்கின்றது..

காலையில் விழித்ததும்
ஒளி மட்டுமே மிஞ்சியதாய்
அத்தனையும் மறந்து
புகை போலவே சொற்களும்
மிதந்து போய்விடுகின்றன...

வாசகம் எனதாகினும்
கனவுகள் எனதாயினும்
வாசிப்பது நீ என்பதாலோ என்னமோ
எதுவும் என் வசப் படுவதில்லை...

உன் வரவால் முயங்குவதும்
உன் சொற்களால் மயங்குவதும் மட்டுமே
என் கனவுகளின் நீட்சியாகிவிடுகிறது
எப்போதும்.....