Friday, February 3, 2012

ஈடாக...














வெம்மை அதிகம் தாக்கிய
ஒரு வெயில் பொழுதில்
எனக்காக குடை பிடித்தது
உன் கைகள்...

பனிப் பொழிவின் உச்சத்தில்
நடுங்கிய என் உடலுக்கு
கம்பளிப் போர்த்தியது
உன் கைகள்...

மழையின் தாக்கத்தில் விண்டிருந்த
பூமிப் பள்ளத்தில் வீழ்ந்திருந்த
என் திகைப்பின் கரம் பற்றி தூக்கிவிட்டது
உன் கைகள்...


என் வீட்டின் சாளரத்தின் வழி மட்டுமே
வந்து கொண்டிருந்த தென்றலுக்கு
அடைத்திருந்த என் வாசல் பூட்டுடைத்து
சரளமாக வெளிச்சத்தையும்
நுழைய வைத்தது
உன் கைகள்...

காதலின் கைகளாய் நட்பின் கைகளாய்
கருணையின் கைகளாய்
எனை நோக்கி எப்போதும்
நீண்டு கொண்டே இருக்கின்றன
உனது கைகள்...

அதற்கு கைமாறாக
என்ன பரிசைத் தருவது நான்?

அன்பின் கரங்களுக்கு
தங்கத்தில் வளையமா?

அக் கரங்களைத் தாங்கும்
உன் தோள்களுக்கு மாலையா?

கைகளின் நீட்சியாய்
நீண்டிருக்கும் உன் விரல்களுக்கு
வைரங்கள் பதித்த மோதிரமா?

எதைத் தந்து சிறப்பிப்பேன்?..

ஈடாகவில்லை...

நீ மீட்டுத் தந்த என் இதழ்களின்
உறைந்திருந்த புன்னகைக்கும்...

நீ துடைத்ததால் கண்ணீர் மறந்து
சிரித்திருக்கின்ற என் கண்களுக்கும்...

வெறுமையில் வெளுத்திருந்து
உன் வரவால் செம்மையான
என் முகத்துக்கும்...

அவை எதுவுமே ஈடாகவில்லை...

சில நினைவுகளையும்
உன்னால் வந்த என் புன்னகையும் தவிர
வேறு எதுவும் உன் கைகளில் தர
ஏற்பாக எனக்குத் தோன்றவில்லை...

2 comments:

தமிழ்த்தோட்டம் said...

பாராட்டுக்கள்

SOS said...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தமிழ்த் தோட்டம்...