Sunday, April 22, 2012

தெரியாத முகவரியில்...சில நேரங்களில் வார்த்தைகளை விட
வாக்கியங்கள் உணரவைப்பதற்கு
சுலமாகிவிடுகிறது..

என் வார்த்தைகளை ஆட்கொண்ட
வாக்கியம் நீ
உன்னை உணரவைத்தல் எனக்கு
என்னை உணர்வதைப் போல...

தெரியாத முகவரி ஒன்றில்
எனக்கானதொரு அழகிய
வீட்டைக் கட்டுகிறாய்....

உனைப் பற்றிய கனவின்
வண்ணங்களில் மூழ்கி
எண்ணங்களில் கரைகிறேன்...

காதலை ஊனமாக்கிவிட்டாய்
அதனாலேயே நான்
மாற்றுத்திறனாளி ஆகிவிட்டேன்...

நீ பரிசளித்த கைக்கடிகாரத்தின் முட்கள்
நகர்ந்து கொண்டே
காலத்தை நகர்த்திக் கொண்டே
எனை கேலி செய்கிறது...

கனவுகளில் எப்போதும்
அலை தொடாத மணற்பரப்பில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
எதைத் தொலைத்தேன் என்பது
தெரியாமலேயே...

Saturday, April 21, 2012

எப்படிப் பகிர்ந்து கொள்வதென்று...

கண்ணீர் சோகம் வெறுமை
ஏமாற்றம் கோபம் அழுகை அறற்றல்
இதில் எதிலுமே அடங்கிவிடாமல்

தனித்து நிற்கிறது உன்
பிரிவைச் சொல்லிய மௌனம்..

சகலத்தையும் உன்னுடன்
பகிர்ந்து பழகிய பின்

உதிர்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவுகளைப்
பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கும்
எனக்குத் தெரியவில்லை...

நீ அற்ற தனிமைகளை உன்னுடன்
எப்படிப் பகிர்ந்து கொள்வதென்று..

Friday, April 20, 2012

உன் விரல்கள்....

காலன் போல மெல்ல நகர்கிறது
இப் பகல்
மரணம் போல சட்டென்று
ஆட்கொள்கிறது இரவு...

இருளின் அகண்ட மௌனத்தில்
ஆரம்பித்துவிடுகிறது உன் பிம்பங்களின்
ஒளி இரைச்சல்கள்...

பழைய தொடுதல்களினூடே
புதிய கதை எழுதி நகர்கின்றன
உன் விரல்கள்...

புதிரைப் போல சிதறிக்கிடக்கும்
உன் விரல் உதிர்த்த சொற்களை
வரிசைப் படுத்தி
வாக்கியமாக்குவதற்குள்ளாகவே...

அடுத்த கதையை
எழுதத் தொடங்கிவிடுகிறாய் நீ...

Tuesday, April 17, 2012

பகிரப்படாமலேயே....


நாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
நிறைய சொற்களை
நிறைய உணர்ச்சிகளை
நிறைய செய்திகளை...


இன்னும் பகிரப்படாமலேயே இருக்கின்றன
ஒரு சில உணர்வுகளும்
மிகச் சில மௌனங்களும்...

சொக்கட்டானில் காய்கள்
நகர்த்துவதைப் போலவே
என்னிடம் உன் சொற்களை
நகர்த்துகிறாய்....

இழப்புகள் தெரிந்தும்
இசைவாகவே வெட்டுப் படுகிறேன்..

உன் ஒரு முத்தத்தில் உயிரிழந்து
மற்றொன்றில் உயிர்த்தெழுகிறேன்...

தடுமாறுவதும் தடம் மாறுவதுமான
தருணங்களின் ஏதோ ஒரு துளியில்
நீ வராமலேயே தொடங்கலாம்
என் இறுதி யாத்திரை...

யாருமற்ற தனிமையில்
சில்லிட்ட என் உடலுள்
உன் அணைப்பின் கத கதப்பைச்
சுமந்து கொண்டு....

Sunday, April 8, 2012

கொஞ்சம் காதலும்.. கொஞ்சக் காதலும்...


1. என்ன இது?!...
எந்தச் சாலையில் நான் நடந்தாலும்
உன் இருப்பிடத்திற்கே
கொண்டுவிடுகின்றதே?..

2. என் தனிமைக் கதவின்
தாழ் நீக்கிவிட்டு
உன் இதயச் சிறையில் எனைப்
பூட்டிவிட்டாயே?

3. வேதனைக் கூட்டிடும் மாலையில்
சோதனையாக உன்
நினைவு...

4. இது என்ன?!..
என் இதழ்களைச் சுற்றி
தேனீக்கள்?
ஓ!.. சற்றுமுன் நீ
முத்தமிட்டுச் சென்றாயோ!?..

5. எத்தனை முறை கடலாய் மாறி
நீ எனைக் கொண்டாலும்
உன் நினைவுகளால் குளிர்ந்து
மழையாகி மீண்டும் உனையே அடைகிறேன்..

6. தேனாகி பெயர் தெரியாததொரு
அழகிய பூவில் நான்
மறைந்திருக்கிறேன்
முடிந்தால் வண்டாகி மிகச் சரியாக
எனைத் தேடி எடுத்துக்கொள்...

Friday, April 6, 2012

தலைப்புக்கேற்ற கவிதைகள் - கையற்ற பொம்மைகள்...


கால்களற்றவன்
கைகள் ஏந்தி வருகையில்
நின்றிருந்த பேருந்து
நகரும் வரை
சில்லரை தேடுவதாய்
பாவனை செய்தன
நீட்சிகள் மட்டுமே பெற்றிருந்த
கையற்ற பொம்மைகள்...

Tuesday, April 3, 2012

மரணம் எனப்படுவது!!!...


எப்போதும் கூச்சலுடனும் குழப்பத்துடனும்
எதைத் தேடுகின்றோம்
என்பதே அறியாத மனதை
அமைதியுறச் செய்வது மரணம்...

உடலைத் தள்ளி நின்று பார்க்கும் ஆத்மாவாக
உடல் உள் நோக்குகையில்
இத்தனை நாள் கோபமும் தாபமும்
சுயநலமும் அகங்காரமும்
அதிக அழுத்தமுடன் நாளங்களில்
ரத்தத்துடன் ஓடியிருப்பதைப்
புரிய வைப்பது மரணம்..

அன்பின் துளிகளை கண்ணீர் வழி வடித்து
வாக்கியமாக இருக்கும் பலவையும்
வாக்குகளாக மாற்றி தன் தொடு உணர்வால்
உணரச் செய்வது மரணம்...

இரவுமற்று பகலுமற்று இருக்கும்
சந்தியா காலம் போல
மொழிகளற்று கற்பிக்கப்படும்
உன்னத பாடம் மரணம்...

மரணம் பயத்தின் கடைசி கட்டம்
அமைதி மரணத்தின் உச்ச கட்டம்
ஆன்மாவுக்கு ஆனந்தம் எழுதும்
சிநேகக் கடிதம் மரணம்...

கோபமும் பிரியமுமாய் நடக்கும்
வாழ்க்கை துவந்த யுத்தத்தின்
முற்று மரணம்...

உடலைப் போற்றிய அசுரத்தனம் துறந்து
ஆன்மாவைப் போற்றும்
தேவ நிலை மரணம்...

பிறப்பின் துக்கமல்ல
துறப்பின் தெய்வநிலை மரணம்
ஆன்மாவின் அடுத்த அத்தியாயம்
இந்நீள் தூக்கம்...

சுக்கிலத்தில் பிறந்த உடலை
சுட்டெறித்துத் தொடரும்
புனிதப் பயணம் மரணம்...

Monday, April 2, 2012

தலைப்புக்கேற்ற கவிதைகள்- கோடிகள் குவித்திடுமோ குதூகலம்..
உடல் மறைக்க உடை கேட்டேன்
பட்டாடை தருவித்தாய்

பசியாற உணவு கேட்டேன்
பாலண்ணம் படைத்திட்டாய்

உறைவிட மனை கேட்டேன்
மாளிகையில் வாசம் தந்தாய்

படுத்து எழ பாய் கேட்டேன்
பஞ்சனை மேல் தஞ்சம் தந்தாய்

பட்டாடை உடுத்திக் கொண்டு
பால் கிண்ணம் கையில் ஏந்தி
பத்தடுக்கு மாளிகையில்
பஞ்சனை மேல் தனித்திருக்கேன்

ரசிக்கக் கற்றுக் கொடுத்தவனே
நீ ருசிக்காமல் போனதெங்கே?..
மனம் மயங்க வைத்தவனே
என் மணம் மறந்து போனதெங்கே?

பாதி நாட்கள் ஊடலிலும்
பாதி நாட்கள் தேடலிலும்
கூடல் குறைந்து மீதி வாழ்க்கை போனதெங்கே?..

கடல் முடிவாய் நானிருக்க‌
தொடுவானமாய் நீ இருக்க‌
தொடர்பிருந்தும்
தொடத் தொடத் தொலைந்து போனதெங்கே?..

கட்டியணைக்க நீயும் இல்லை
கட்டியழுத உடலும் இல்லை
கட்டு கட்டாய் பணம் மட்டும்
கட்டையிலும் வேகாமல்
கல்லாய் மாறிக் கனக்குதிங்கே....