Wednesday, May 30, 2012

இசைக் குறிப்பு...













கடலில் இருக்கும் மீன்
கடலைத் தேடிக் கொண்டிருப்பதை போல
என்னில் உன்னை வைத்துக் கொண்டே
வெளியே தேடுகின்றேன்....

இரவைப் பகல் தொடரும்
இயல்பு போல
நான் உன்னில் இருந்தபடியே
உன்னைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்...

ஓடை நீரில் மலரை
பொத்திவைப்பது போலவே
உன் நினைவுகளை மறைத்து
தோற்றுப் போகிறேன்

பூட்டி வைத்திருந்த எனது கூடங்களில்
வாத்தியங்கள் எல்லாம்
எட்டிப் பார்த்து நீ
இழுத்து விடும் சுவாசத்தையே
குறிப்பாகக் கொண்டு
இசைக்கத் தொடங்கி விடுகின்றன..

நீ எப்போதும்
எனது இலக்காய் அல்ல
முடிவாகவே இருக்கிறாய்...

Tuesday, May 15, 2012

வேராய்.... வேறாய்












எனது கிளைகள் உனக்கான பூவை
ஒவ்வொருமுறை மலரச் செய்யும் போதும்
எனது வேர்கள் வென்னீரில் மூழ்குகின்றன

உனக்கான என் ஒவ்வொரு
புன்னைகையும்
ஒரு துளி கண்ணீரில் நனைந்தே
விரிகின்றது...

தேன் சொரியும் என் பூக்களின்
மகரந்தங்கள் யாவும்
ஊமத்தம்பூவின் கசந்த மௌனத்தை
தடவியே வருகிறது..

என் நந்தவனத்தில் விருட்சத்தின்
விதையாய் விழுந்தவன் நீ

உனக்கும் எனக்குமான பந்தம்
உனது கிளைகளை அழகு படுத்தும்
மலராகவோ
படர்ந்து தழுவும் கொடியாகவோ
துளிர்த்துத் தவழும் இலையாகவோ அல்ல

உன்னிலிருந்து மண் புதையும் வேராய்
வேறாய் மட்டுமே

என் மாலைகளின் மரணங்களின் முடிவில்
இருளில் நான் தடுமாறித் தவிக்கையில்
உயிர்த்தெழும் காலையாய்
நீ வருகிறாய்

துளித் துளியாய் மழைத்துளியாய்
என்னில் நிரம்புகிறாய்
நீ நிரம்ப நிரம்ப
நான் காலியாகிக் கொண்டே இருக்கிறேன்

Tuesday, May 1, 2012

முற்றத்து வெய்யில்...




உன் சிக்கலான கையெழுத்தை
என் சிக்கலவிழ்த்த
கூந்தலில் போடுகிறாய்....

வேண்டாம் என்ற என் கெஞ்சல்கள்
அனைத்தையும் உன் இதழ் எனும்
அழிப்பான் கொண்டே
அழித்துவிடுகிறாய்...

செய்யாத தவங்களுக்கு கிட்டிய
கேட்காத வரமாய் நேர்ந்துவிட்டது
உன் உறவு...

என் சமையலில் உப்பைப் போல நீ
அதிகம் சேர்க்கவும் முடியவில்லை
தவிர்க்கவும் முடியவில்லை...

மாற்றம் இல்லாதது மாற்றங்கள் மட்டுமே
உனது ஒவ்வொரு செயலாலும்
என் பருவங்களில் மாற்றங்களை
தலைகீழ்விகிதமாக்கியவன் நீ...

தெரிந்தே சக்கிரவியூகத்தில்
மாட்டியவள் நான்
எனது ஏற்பும் தோற்பும்
உனதாகிவிட்டது....

மழை நீர் போல் தேங்கி
இதயக் கேணியில் ஊற்றாக
பெருகுகின்றாய்...

நீ என்றேனும் ஒரு நாள் 
எனைக் கடந்துவிடக்கூடும்
எந்த முற்றத்திலும் நிற்காத
வெய்யிலைப் போல...

என் நிழலையும் பறித்துக் கொண்டு...