Saturday, July 28, 2012

அங்கே நீ...














உனை நோக்கிய நெடுந்தூரப் பயணம்

வழியில்
வண்ணத்துப்பூச்சி ஒன்று
தன் இறகுகளின் வண்ணத்தை எல்லாம்
என் மேல் உதிர்த்துச் சென்றது...

தென்றல்
பூக்களின் மகரந்தத் துளிகளைத்
தாங்கி வந்து எனைத் தழுவிச் சென்றது...

புல் நுனியில் தவமிருந்த பனித்துளிகள்
என் பாதம் தொட்டவுடன்
முக்தியடைந்தன...

மரக்கிளைகள்
என் வெயில் வெளியில்
தாழ்ந்து வந்து குடை பிடித்தன...

சில் வண்டுகள்
பண் பாடி வாழ்த்துச் சொல்லின..

இதை எதையுமே ஏற்கும்
மனநிலை தவிர்த்து

உனை மட்டுமே கண்கள் தேட
நீண்ட சாலைகளில் தனித்து அலைந்து
உனைக் காணாமல் மிகச் சோர்வுற்று
எனதறைக்குத் திரும்பினேன்...

அங்கே நீ...
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள் ஏந்தி
மகரந்தத்தின் வாசம் பூசி
என் பாதத்தில் பதித்த
உன் முத்தத்தின் ஈரத்துடன்
எனக்கான ஒரு பாடலை இசைத்துக் கொண்டு
கருணையின் குடை பிடித்து அமர்ந்திருந்தாய்...

Thursday, July 19, 2012

ஒரு நடிகையின் பேட்டி...














அது ஒரு நடிகையின் பேட்டி..

நடு நடுவே அப் பெரிய நடிகரைப் பற்றிய
சிலாகிப்பும் நெகிழ்ச்சியுமாக
ஆனந்தக்?!.. கண்ணீருடன்
அவரின் எளிமையும்
தயாள தாராள குணமும்
பத்தி முழுவதும் விரவிக் கிடந்தன..

அக்கண்ணீருக்குப் பின்னே
உறைந்திருந்த ரத்தத் துளிகள்
மறைக்கப் பட்டு
புனைவாக ஒரு சரித்திரம்
அச்சாக்கப் பட்டிருந்தது...

Monday, July 16, 2012

மொழிபெயர்ப்பு.....














என் மௌனங்களை
மொழிபெயர்த்தவன் நீ ...

நீ விதைத்த மௌனங்கள்
இன்று என்னுள் முளையாகி
கொடியாகி பூத்துக் கொண்டிருக்கிறது
கவிதைகளாக...

வேரில் உன் வாசம்
இலைகளில் உன் சுவாசம்
கிளைகளில் உன் நேசம்
என வளர்த்து...

அரும்புகளில் என் உயிர் சேர்த்து
உனக்கென மலர்விக்கிறேன்...

என் கவிதைக் கொடியில் பூக்கும்
ஒவ்வொரு பூக்களும்
உனைச் சேரும்
ஜென்மங்கள் தோறும்...

Monday, July 9, 2012

உரிமை???..




















சித்தார்த்தன் புத்தனான்
இல்லறம் துறந்து...

வெங்கட வரதன் ராகவேந்திரனானன்
இல்லறம் துறந்து...

வர்தமானன் மாஹாவீர் ஆனான்
இல்லறம் துறந்து...

இல்லறம் என்பது இருவர்
சார்ந்தது என்றால்..

முடிவின் உரிமையை
ஒருவர் மட்டும் எடுப்பது ஏன்????...

Sunday, July 8, 2012

உனக்குப் புரியும் என...














பிறந்த நாள் பரிசுடன்
கவிதையும் தர நினைத்தேன்
உனைப்பற்றி நினைத்தவுடன்
முட்டி நின்ற வார்த்தைகளுள்
எதை வடிக்க? எதை விடுக்க?
தெரியவில்லை?!..

எழுதாமலே விட்டுவிட்டேன்
வழக்கம் போல்
என் மௌனம்
உனக்குப் புரியும் என...

Tuesday, July 3, 2012

நினைவுக்கடன்...












பழைய நினைவுகளை
அசை போடும் போதெல்லாம்
பக்கத்து வீட்டு பர்வீன் அம்மா
முகத்துக்கு பதிலாக
15 வருடங்கள் முன் அவள் கடன் வாங்கி
கொடுக்க மறந்த 500 ரூபாய் தாளே
நினைவுக்கு வந்து தொலைகிறது...