Saturday, October 19, 2013

உறங்க வைக்க முடிவதில்லை...

பேசிய வார்த்தைகளை
உதைத்து உருட்டிக்கொண்டே
மௌனத்தால் முற்றுப் புள்ளியாக்கிவிட்டாய்
நம் நினைவுகளை...

விளையாட்டு முடிந்த மைதானத்தில்
திக்கற்று அலையும் வெற்றுக் காகிதமாய்,

அகால வேளையில்
பழுதடைந்த தண்டவாளத்தில்
கைவிடப்பட்ட ஒற்றை ரயில் பெட்டியின்
தனிமையோடு அலைகிறது மனது..

எரிமலையின் ஆழத்தில்
நிச்சலனத்தில் உறைந்திருக்கும்
உனக்கான சொற்களை என்னால்
ஒருபோதும் உறங்க வைக்க முடிவதில்லை...

நீ வீசி எறிந்த சொற்களின் மாபெரும்
த்தில் நசுங்கிக் கிடக்கின்றன
நமதான ஒரு ஒற்றைக் கனவும்
அதன் பெருவெடிப்பில்
கருகிச் சிதறிய இக் கடைசிக் கவிதையும்...

Monday, October 14, 2013

பக்கங்களற்ற புத்தகம்...


பக்கங்களற்ற புத்தகம் ஒன்று
சொல்லையும் பிம்பத்தையும் பிரித்து
சொற்களின் மீது மனக் கசப்பை
ஏற்றி விட்டு பிரிந்து கிடக்கிறது..

கடைசி நட்சத்திரம் வரை
நீண்டு கொண்டிருக்கும் இரவில்
என் நிலவு உதிர்ந்து கொண்டிருக்கிறது
சென்னிறமாக...

காலியான சத்திரத்தில் எஞ்சி இருக்கும்
பயணியின் நினைவு போல...

Thursday, August 22, 2013

ஆ(கா)தலால்.....

மழை நேரத்தில் நாம் சந்தித்ததில்லை
மழை நனைத்த சாலையில் நாம்
கை கோர்த்து நடந்ததில்லை..

மழைத்துளிகளின் இடைவெளியில் நாம்
ஒதுங்கி நனைந்ததில்லை...
சாரல்களில் ஓரத்தில் 
உடல் ஒட்டி நின்றதில்லை..

இருந்தும் மழை வரும் போதெல்லாம்
நீ வருவதாகவே நினைக்கிறேன்
ஆ(கா)தலால் நனைகிறேன்...

Wednesday, June 19, 2013

இன்று பள்ளி...


கையசைத்துக் கொண்டே நிற்கிறேன்
முதுகில் புத்தகச் சுமையையும்
இடக்கையில் சாப்பாட்டுப் பையையும்
சுமந்து கொண்டு
கண்களில் கலவரத்துடன்
இரண்டாம் மாடியின் தடுப்பு வழி
வலக்கை அசைத்து டாட்டா காட்டும்
எல்லாக் குழந்தைகளிலும்
என் குழந்தையின் சாயல் கண்டதால்
பள்ளிக் கதவருகே
கையசைத்துக் கொண்டே நிற்கிறேன்
திரும்பிச் செல்ல மனமின்றி

Friday, June 14, 2013

நேசிக்க மட்டும்...


 

உன்னைப் போல
பேசத் தெரியவில்லை
நேசிக்க மட்டும் தான்
தெரிகிறது எனக்கு.

Saturday, June 1, 2013

சிறிய விஷயம்?!?!...

சிறிய விஷயம் தான்!
நம்மை சிறகடிக்க வைக்கிறது
சிறிய விஷயம் தான்!!
நெஞ்சை சிதறடிகவும் செய்கிறது

சிறிய விஷயம் தான்!
அழகான சுவடாய் இதயத்தில் பதிகிறது
சிறிய விஷயம் தான்!!
அழியாத சோகமாய் மனதில் படிகிறது

சிறிய விஷயம் தான்!
புன்னகையை உயிர்ப்பிக்கிறது
சிறிய விஷயம் தான்!!
தீராத ரணத்தை பரிசளிக்கிறது

சிறிய விஷயம் தான்!
சுமைகளை சுகமாக்குகிறது
சிறிய விஷயம் தான்!!
அன்பைக் கீரிப் போகிறது

சிறிய விஷயம் என்பதெல்லாம்
உண்மையில்

சிறிய விஷயமே அல்ல!!!...

நமக்கானதொரு!!..


உனை அழைக்க நேரும்போதெல்லாம்
உனைப்பற்றிய நினைவுகளில்
மூழ்கும் போதெல்லாம்
என் தோட்டத்து குயில்
நமக்கானதொரு பண்னை
இசைக்க ஆரம்பிக்கிறது..

Thursday, May 9, 2013

நீ!.. நான்!!.. ஒரு கோப்பை!!!...


தண்ணீரில் செதுக்கிய சிற்பம் போல
நெளிந்து நெளிந்து சேர்கின்றது
உன் பிம்பம்...

என் காதோரம் சுருண்டிருக்கும்
முடிக்கற்றைகளை நீளமாக்குகையில்
நீண்டும்

கண்களைச் சுருக்குகையில் சுருங்கியும்
என் உதடுகளைச் சுழிக்கையில் சுழித்தும்
என் இதழோரச் சிரிப்பில் விரிந்தும்

உலகை தேக்கி வைத்துள்ள
மதுக் கிண்ணத்தின் வழியே
ததும்பித் ததும்பி வழிகிறது...

நான் குலுங்கிச் சிரித்துக் கொண்டேயிருக்கிறேன்
என் கோப்பையை ஏந்தியபடி...

Friday, April 12, 2013

உன் புன்னகை..
விழலுக்கு இரைத்த நீர்
வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் பொசிவது போல

போகிற போக்கில்
உனைக் கடக்கும் தோழிக்கு
நீ சிந்திய புன்னகை

அடுத்த நொடியும் விரிந்து
நீ கடந்த எனை
கவிழ்த்துச் சென்றது

Saturday, February 23, 2013

சொல்வதற்கு ஒன்றும் இல்லை..விரிந்த நதியில்
சென்று கொண்டிருந்த என்னை
இழுத்துச் சுழற்றிவிட்டாய்...

தனித்து ஓடத்தில்
சென்று கொண்டே இருக்கிறேன்
கரையில்லாத நீர்ப்பரப்பில்
கானல் நீரான உனை நோக்கி...

உன் நாவால் தீர்மானிக்கப்படும்
சொல்லாக எனை ஆக்கியபின்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
என் பேசாத சொற்களின் ங்களை.

அதிகாலைப் பூவின் பரிசுத்தம் போல
உன் மீதான அன்பு
மலர்ந்து கொண்டே இருக்கிறது
பிடித்தலும் பிடிக்காமல் இருத்தலுமான
இரு முரண்களின் நடுவே...

பல சமயங்களில் மிகக் கவனமாக
என் மீது படரும்
வெறுமையாகிவிடுகிறாய்...

இரவின் குளிருடன் உனக்காக
சேமிதிருந்த சில மௌனங்களும்
இரங்கிக் கொண்டே இருக்கின்றன
ஒளி மறைந்த இருளுக்குள்
உனைத் தேடியபடியே...

Tuesday, February 12, 2013

ஒரு கவிதை...ஒவ்வொரு முறையும் எதையாவது
கொடுத்துவிட்டே செல்கிறாய்
ஒரு மிட்டாய் ஒரு மயிலிறகு
ஒரு புத்தகம் ஒரு புன்னகை
குறைந்தபட்சம் ஒரு முத்தமாவது...

இதற்கு ஈடாக என்னால்
எதைத் திருப்பித் தர முடியும்?

கட்டுப்பாடான தழுவல்???
மண் திண்ணும் மெய்???
உச்சகட்டப் பொய்
என் உயிர்???

ஒத்திகையின்றி இயல்பாக
எதைத் தருவது?

அதிகபட்சம்

சொற்களுக்கு முன்னும் பின்னும்
உனக்கு மட்டுமே புரியும் மௌனத்தை
புதைத்து வைத்துள்ள
ஒரு கவிதையைத் தவிர!!!...

Tuesday, February 5, 2013

எனது நாள்..எனது நாளின் 
இருபத்து மூன்று மணிகளும்
ஐம்பத்து ஒன்பது நிமிடங்களும்
கேள்விக்குறியாகக் 
காத்திருக்கின்றன

உனது அழைப்பு என்கிற
ஒற்றைப் புள்ளி 
முடித்து வைக்கும்
அக் கடைசி வினாடிக்காக...

Sunday, February 3, 2013

நீயும்.. நீ அற்ற கோடிகளும்...அடுப்படியில் அவியல் சமைப்பது முதல்
அம்மா வீட்டுக்கு போவது வரை

என் மூக்கு கண்ணாடி உடைஞ்சிருச்சு
குளியலரைக் குழாயில் தண்ணீர் வரலை

இந்தமாத அரிசி என்ன ரகம் வாங்கறது
பூஜைக்கு இந்தமுறை பொடி சாம்பிராணியா
கம்ப்யூட்டர் சாம்பிராணியா?

துணிக்கடையில் நிற்கையில்
எந்த நிறத்தில் எந்த விதத்தில் எடுத்து
நான் உடுத்தினால் உனக்குப் பிடிக்கும்?

உன் முகம் நோக்கி பதிலுக்கு
நிற்பது முதல்

என் உருண்டை முகத்துக்கு
நீளப் பொட்டிடாமல்
உனக்குப் பிடிக்கும் என
வட்டப் பொட்டிடுவது வரை

ஆதியும் அந்தமுமாய்
உனக்காகவே, உனைக் கேட்டே
உன் பொருட்டே உனை ஆதாரமாக்கியே
சுழன்றுவிட்ட எனக்கு

உனைப்பிரிந்து நான் வருந்தக் கிடைக்கும்
கோடிகளின் பூஜ்ஜியம் கூட
நீயின்றி எண்ணத் தெரியாதே!!!..

அதற்காகவேணும் பிரியாதிரு...

Wednesday, January 30, 2013

என் அப்பாவின் அன்பு..


அரைக்கிலோ இனிப்பும்
அரைக்கிலோ காரமும்
சாமிக்கு கதம்பமும் எங்களுக்கு
மல்லிகையுமாக
அப்பா வீட்டுக்குள் நுழைந்தாரென்றால்
முதல் தேதி சம்பள நாள்...

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தாலும்
அப்பா வாங்கிவரும் என்னமாச்சும்காக
கண்கள் சொருக அரைத் தூக்கத்தில்
காத்திருந்து கட்டிக் கொண்டது 
ஒரு காலம்...

நாள் கிழமை பண்டிகையில்
கண்ணாடி வளையல்களும்
பாடர் வைத்த பாவாடை தாவணியும்
தவனை முறையில் வந்தாலும்
சித்தாடை கட்டிய சிண்ட்ரெல்லாவாய்
சிரிப்புடன் சுற்றி சுற்றி வந்தது
பொற்காலம்..

இன்றும் கிடைக்கிறது
அதைவிடவும் அதிகமாகவும் உசத்தியாகவும்
இலையின் ஓரம் இனிப்புத் துண்டுடன்
சுருட்டப்பட்டிருக்கும் என் அப்பாவின்
அன்பைத்தவிர...