Saturday, February 23, 2013

சொல்வதற்கு ஒன்றும் இல்லை..



விரிந்த நதியில்
சென்று கொண்டிருந்த என்னை
இழுத்துச் சுழற்றிவிட்டாய்...

தனித்து ஓடத்தில்
சென்று கொண்டே இருக்கிறேன்
கரையில்லாத நீர்ப்பரப்பில்
கானல் நீரான உனை நோக்கி...

உன் நாவால் தீர்மானிக்கப்படும்
சொல்லாக எனை ஆக்கியபின்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
என் பேசாத சொற்களின் ங்களை.

அதிகாலைப் பூவின் பரிசுத்தம் போல
உன் மீதான அன்பு
மலர்ந்து கொண்டே இருக்கிறது
பிடித்தலும் பிடிக்காமல் இருத்தலுமான
இரு முரண்களின் நடுவே...

பல சமயங்களில் மிகக் கவனமாக
என் மீது படரும்
வெறுமையாகிவிடுகிறாய்...

இரவின் குளிருடன் உனக்காக
சேமிதிருந்த சில மௌனங்களும்
இரங்கிக் கொண்டே இருக்கின்றன
ஒளி மறைந்த இருளுக்குள்
உனைத் தேடியபடியே...

Tuesday, February 12, 2013

ஒரு கவிதை...



ஒவ்வொரு முறையும் எதையாவது
கொடுத்துவிட்டே செல்கிறாய்
ஒரு மிட்டாய் ஒரு மயிலிறகு
ஒரு புத்தகம் ஒரு புன்னகை
குறைந்தபட்சம் ஒரு முத்தமாவது...

இதற்கு ஈடாக என்னால்
எதைத் திருப்பித் தர முடியும்?

கட்டுப்பாடான தழுவல்???
மண் திண்ணும் மெய்???
உச்சகட்டப் பொய்
என் உயிர்???

ஒத்திகையின்றி இயல்பாக
எதைத் தருவது?

அதிகபட்சம்

சொற்களுக்கு முன்னும் பின்னும்
உனக்கு மட்டுமே புரியும் மௌனத்தை
புதைத்து வைத்துள்ள
ஒரு கவிதையைத் தவிர!!!...

Tuesday, February 5, 2013

எனது நாள்..



எனது நாளின் 
இருபத்து மூன்று மணிகளும்
ஐம்பத்து ஒன்பது நிமிடங்களும்
கேள்விக்குறியாகக் 
காத்திருக்கின்றன

உனது அழைப்பு என்கிற
ஒற்றைப் புள்ளி 
முடித்து வைக்கும்
அக் கடைசி வினாடிக்காக...

Sunday, February 3, 2013

நீயும்.. நீ அற்ற கோடிகளும்...



அடுப்படியில் அவியல் சமைப்பது முதல்
அம்மா வீட்டுக்கு போவது வரை

என் மூக்கு கண்ணாடி உடைஞ்சிருச்சு
குளியலரைக் குழாயில் தண்ணீர் வரலை

இந்தமாத அரிசி என்ன ரகம் வாங்கறது
பூஜைக்கு இந்தமுறை பொடி சாம்பிராணியா
கம்ப்யூட்டர் சாம்பிராணியா?

துணிக்கடையில் நிற்கையில்
எந்த நிறத்தில் எந்த விதத்தில் எடுத்து
நான் உடுத்தினால் உனக்குப் பிடிக்கும்?

உன் முகம் நோக்கி பதிலுக்கு
நிற்பது முதல்

என் உருண்டை முகத்துக்கு
நீளப் பொட்டிடாமல்
உனக்குப் பிடிக்கும் என
வட்டப் பொட்டிடுவது வரை

ஆதியும் அந்தமுமாய்
உனக்காகவே, உனைக் கேட்டே
உன் பொருட்டே உனை ஆதாரமாக்கியே
சுழன்றுவிட்ட எனக்கு

உனைப்பிரிந்து நான் வருந்தக் கிடைக்கும்
கோடிகளின் பூஜ்ஜியம் கூட
நீயின்றி எண்ணத் தெரியாதே!!!..

அதற்காகவேணும் பிரியாதிரு...