Sunday, November 22, 2015

நேச மழை...

கொட்டித் தீர்க்கிறது
இடைவிடாது
சரம் சரமாகப் பெய்கிறது
முற்றாக மூழ்கடிக்கிறது
வெயிலோடு சற்றே தூரி
வானவில்லை அழைக்கிறது
உன் நேசம் போல்தான்
இம் மழையும்....

Sunday, November 15, 2015

தேவதை...

அம்மா நீ தேவதை மா
கழுத்தைக் கட்டிக்கொண்டு
சொல்லிய எட்டு வயது
மகனைப் பார்த்து முறைத்தேன்
ஏண்டா கிண்டலா
உதைக்கிறேன் பாரு உன்ன
என்றேன்
நெஜமாத்தாம்மா நீ தேவதை தான்
தேவதைன்னா
அழகா சிவப்பா நீள முடியோட
பின்னாடி இறக்கையோட இருக்கனும்னு அவசியம்
இல்லையாம்
அன்பா இருக்கற
அடுத்தவங்களுக்கு
உதவி செய்யற
யாரையும் புண்படுத்தாத
யாரும் தேவதைதான்னு எங்க
மிஸ்ஸு சொன்னாங்க
அம்மா நீ எனக்கு தேவதை தாம்மா
சொல்லிய மகனை நோக்கி
இறக்கைகள் நீளத் தொடங்கியது..

Saturday, October 31, 2015

மழைத் துளிகள்...

தார்ச்சாலையில்
விழுந்து தெறிக்கும்
மழைத்துளிகள்
தரையில் முளைத்த
நட்சத்திரங்கள்...

Friday, October 30, 2015

இன்றைய ஞாயிறுகள்...

ஏனைய நாட்களைப் போலவே
இன்றைய ஞாயிறு பொழுதும்
சத்தம் இல்லாமல்
சந்தடி இல்லாமல்
கூச்சல் இல்லாமல் குழப்பம் இல்லாமல்
கூடிப் பேசாமல் கும்மாளம் இல்லாமல்
அவரவர்  லேப் டாப்பிலும்
வாட்ஸப்பிலும் ஃபேஸ் புக்கிலும்
யூ ட்யூபிலும்  இனிதே
கழிந்தது

அழைப்பு….

மழையில்லாத ஒரு
குளிர்கால மாலையில்
நீண்ட பயணத்தில்
கிடைத்த ஜன்னலோர 
இருக்கையாய்
உனதிந்த அழைப்பு….


காதல்ராட்சசன்...

ஒரு முழப் பூவுக்கு
முழு நீள முத்தம்
கேட்கும்
ராட்சசன் நீ...

வருத்தம்...

ஒவ்வொரு முறை நீ
சுகவீனப்படும் பொழுதும்
சொல்லமுடியாத
வார்த்தைகள்
தொண்டையில் சிக்கிய
விக்கலாய்
தவித்துப் போகின்றன
ஆற்றுதலின்றி…


Thursday, October 29, 2015

நினைவுப் பூக்கள்....

கடந்த வழியெங்கும்
நினைவுகள்
விதைத்து வந்தேன்
நீ முளைத்துப் பூத்திருந்தாய்...


Wednesday, October 28, 2015

மீண்டும் ஒரு வாய்ப்பு - மல்லிகை மகள் டிசம்பர் 2014 இதழில்

2014 டிசம்பர் மாதத்தில் மீண்டும் எனது கவிதைகள் மல்லிகை மகள் இதழில் வெளியானது. நம் வரிகளை நாம் அச்சில் பார்ப்பதே ஒரு தனி சுகம் தான். 
நன்றி திரு. சிவஞானம் சார். 




மறக்க முடியாத மே 2014.


மே மாதம் 2014 மறக்க முடியாத மகிழ்வான தருணங்களைக் கொடுத்தது. இம்  மாதத்தில் தான் எனது கவிதை முதன் முதலாகபுத்தகத்தில் அச்சேறியது. மல்லிகை மகள் மாத இதழில். அச்சேற்றிய மல்லிகை மகள்  இதழ் ஆசிரியர்
 திரு. சிவஞானம் சாருக்கு எனது மகிழ்வான நன்றிகள்.





இதே மாதத்தில் மீண்டுமொரு ஆச்சரியம். முன்னனி வார இதழான குமுதத்திலும்(28.05.2014 தேதியிட்ட) குழந்தைகளைப் பற்றி எழுதிய கவிதைகள் பிரசுரமாகின. 
பிரசுரித்த குமுதம் இதழ் ஆசிரியர் திரு. ப்ரியாகல்யாணராமன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.





Monday, October 26, 2015

பிரசுரமான கவிதை - தினமணி -”மது ஒழிப்பு”

தினமணி மின் நாளிதழில் “ மது ஒழிப்பு” என்ற தலைப்பின் கீழ் எனது கவிதை.
பிரசுரித்தமைக்கு நன்றி தினமணி மற்றும் திருமதி. உமா சக்தி.

மது ஒழிப்பு

மது மது மது
அன்பைக் கெடுக்குமது
மரியாதைக் குலைக்குமது
குடும்பம் தவிர்க்குமது
உயர்வைக் தடுக்குமது
மனதைக் கலைக்குமது
பண்பைக் தொலைக்குமது

குளிர்ந்த நிலையில் கசந்த திரவம்
உடனே செய்யுமே உபத்திரவம்
மதுவில் தொடங்கி
மாதில் தொடர்ந்து
வாழ்வைக் குடித்து
மரணத்தில் முடிக்கும்
மதுவுக்கு
விலக்கும் வேண்டாம்
ஒழிப்பும் வேண்டாம்
முற்றிலும் செய்வோம் மது அழிப்பு
அரசு செய்யட்டும்
அமைச்சர் செய்யட்டும்
ஆண்டி செய்யட்டும்
குப்பம் சுப்பன் பெருமாள் பேராண்டி
யாரோ தொடங்கட்டும்
என்ற எண்ணம் தவிர்த்து
தனிமதன் தன் ஒழுக்கத்திலிருந்து
துவங்கட்டும்

மது ஒழிப்பும் மது அழிப்பும்…

Sunday, October 4, 2015

ஜன்னல் இதழில் (01 - 14.10.2015)

இம் மாதம் 01.10.2015 - 14.102015 தேதியிட்ட ஜன்னல் இதழில் எனது கவிதைகள் பிரசுரமாகியுள்ளதை நட்புகளுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
நன்றி ஜன்னல்.









Wednesday, September 9, 2015

பரிசு...

எப்போதுமே உனை நினைக்கும் நேரம்
துளிர்க்கும் ஈரம்
நனைக்கும்
என் இமைகளின் ஓரம்

இன்றென்னவோ
மேலிருந்து 
பள்ளம் நோக்கி 
வீழும் அருவியாய் 
கண்களிலிருந்து  இறங்கி
நெஞ்சுக் கூட்டில் ததும்பி
நாபிச் சுழி நிரப்பிய 
விழி நீரை 
வீழும் நீரை 
தடுக்க முயலவில்லை 

சிறு துளியோ பெரு மழையோ
என் கண்ணீர் என்றுமே உனை
தூற்றாது பதில் கேட்காது

எனக்கு உன் மீது 
புகார்கள் இல்லை
கோபங்கள் இல்லை 
வருத்தங்கள் இல்லை

இவை எல்லாம் எப்போதோ
எனைக் கடக்க வைத்துவிட்டாய்

நீ கொடுக்கும் பிறந்த நாள்
பரிசாக நான் இறக்கும் நாள் வரை
ஏந்திச் செல்வேன்
பொழுது போக்காக
நீ மீன் பிடிக்க ஆரம்பித்திருக்கும்

என் கண்ணீர் துளிகளை..

Monday, September 7, 2015

தாய்ப் பறவை....

என்னால் குழந்தைகள்
இருக்கும் அறையை
சாத்தி வைக்கவே இயலாது
அப்படிச் செய்தால்
எனக்கும் அவர்களுக்குமான
தொடர்பு விடுபட்ட
உணர்வு வருகிறது கூடவே
அவர்களைப் பற்றிய
ஒரு பாதுகாப்பின்மையும்
கோழி தன் குஞ்சுகளைக்
சிறகுக்குள்
காப்பது போலவே தான்
எனக்குள் அவர்களை
பொத்தி வைத்துக் கொள்கிறேன்
வரக்கூடும் ஒரு நாள்
குஞ்சுகள் பருந்தென
சிறகு விரித்து பறந்துவிடக் கூடும்
அப்போதும் நான் கோழியாகவே
அவர்கள் உதிர்த்துவிட்டுப் போன
இறகுகளை சேமித்துக் கொண்டு
அன்னாந்து பார்த்திருப்பேன்
கவலைகள் மறைத்த பெருமிதத்தோடு...

சொல் அடுக்கும் கவிதைக்காரி...

கண்ணீரின் தடம் எங்கும் பாசியென
நீ படிந்திருக்கிறாய்
உன் நினைவுகளில் நிரம்பித் ததும்பும்
என் மனதில் வெற்றிடமே இருப்பதில்லை
பிரிவின் ஏக்கம் இளைக்க வைக்கவில்லை
அசாதாரணமாக எடை கூடியிருக்கிறேன்
சதா உன் நினைவுகளைத் தின்று
உடைந்துவிடும் சாத்தியக் கூறுகள்
அதிகமிருக்கும் நம்பிக்கையின்
அந் நாள் நெருங்குவதை
நாட்காட்டியில் வெறிக்கிறேன்
என் பாடல்களில் இப்போதெல்லாம்
துள்ளல்கள் இருப்பதில்லை
வற்றிப் போன உன் காதலைப் போல
நீ புறக்கனித்த சொற்களை கவிதையாக்கி
வைக்கிறேன்
பிரிதொரு நாள் தேவைப் படும்
நீ குத்திக் காண்பிக்கவேணும்
நான் சொல் அடுக்கும் கவிதைக்காரி
நீ சொல்லெறியும் ஜென்மம்...

Friday, September 4, 2015

விதியால் தீர்மாணிக்கப்படும்…

அன்றைக்கான
அந்தச் சம்பவத்துக்குப் பின்
எனக்குத் தெரிந்துவிட்டது
இனி நீ எனக்கு
அப்பாவாக அம்மாவாக
காதலனாக கணவனாக
தோழனாக துரோகியாக
தேவனாக சாத்தானாக
கடவுளாக மிருகமாக
இன்ன பிற எது எதுவாகவோ
இருக்கப் போகிறாய் என
ஆனால் எது எதுவாக
எப்போதெல்லாம்
என்பது நமது

விதியால் தீர்மாணிக்கப்படும்…

Thursday, August 27, 2015

நகை முரண்...

இறந்த பின்பும்
உனக்காக
துடித்திருப்பேன்
என்று சொல்பவர்களால்
மட்டுமே
நம்மை
உயிருடன் சாகடிக்கவும்
முடிகிறது.

Tuesday, August 25, 2015

எடை குறைவு....

கடைசியாக உனைப் பார்த்தது
உனதறையில் நீ
நடைபயிற்சி இயந்திரத்துடன்
மூச்சு வாங்கப் போராடிக்
கொண்டிருந்த போதுதான்
நான் வந்து போன சுவடுகளை
பிரிதொரு நாள்
நீ யார் மூலமேனும்
அறிந்திருக்கக் கூடும்
ஆனால் அறிந்திருக்க
வாய்ப்பில்லை
சற்றே கூடுதலாக
குறைந்துவிட்டிருக்கும்
என் உடலின் எடையை..

Monday, August 24, 2015

வசந்தகாலம்.... வசம் இழந்த காலம்...

விடியலில் நினைவுக்கு
வந்தே தொலையாத

தொலைந்திடும்
நள்ளிரவின் கனவு போல
மீண்டு வராமலேயே

காட்டுத்தீயில் அகப்பட்ட
காய்ந்த சருகுகளாய்
சட சடவென கருகிவிட்டது
நம் வசந்தகாலம்
நாம் வசம் இழந்த காலம்...

ஒரு வார்த்தையில் தொடங்கி
சில வார்த்தைகளில் தொடர்ந்து
இப்போது வார்த்தைகள்
தொலைத்த ஊமையின் வெறுமையுடன்
வெளியேறிவிட்டாய்...

எப்போதும் வாதங்களுடனும்
வார்த்தைகளுடனும்
போர் புரிந்து கொண்டிருக்கும் 
நீ
ஒருபோதும் 
அறியப் போவதே இல்லை
என் காதலையும்
இக் கவிதையையும்…

Saturday, August 22, 2015

நிறம் உதிர்த்த.....

பிடித்திருந்த கைகளை
உதறிக் கொண்டாய்
பறத்தலின் திசை
தெறியாது நகர்கிறேன்
என் நிறங்களை
உன் உள்ளங்கைளில்
உதிர்த்துவிட்டு....

Friday, August 21, 2015

கண்ணாம்மூச்சி....

எப்போதும் அழைப்புப்
பதிவுகளில்
மேலிருக்கும் உனது எண்
இப்போதெல்லாம்
மேலெழுப்பப் படுகிறது
வந்து போன அழைப்புகளை
அழித்துப் பார்க்கையில்...

Wednesday, August 5, 2015

இரட்டைச் சந்தோஷம்....


எனது கவிதைகள் இந்த வார 
குமுதம் இதழிலும்
இம் மாத 
மல்லிகை மகள் இதழிலும்..







Friday, July 10, 2015

காதல் சமைப்போம் வா...

கடிகார முட்களாய்
சுற்றி வருகிறது
உன் நினைவுகள்
நெஞ்சுக் கூட்டில்

பெண்டுலமாய் ஆடுகிறது
விழிகள் நீ நகரும்
திசை நோக்கி

அலாரமாய் அதிர்கிறது 
இதயம்
உன் விரல் நுனி
தீண்டலில்

பன்னிரு முறையல்ல
பன்னிரண்டிலாவது சேர்ந்து
காதல் சமைப்போம் 
வா...

ஏதோ ஒரு துளியில்...

உனை 
நனைத்துக் கொண்டிருக்கும்
அம் மழையின்
ஏதோ ஒரு துளியில்
கரைந்து கொண்டிருக்கிறேன்
நான்....

Thursday, June 25, 2015

......

புள்ளிகளுக்குள் அடங்கிவிடாத
கோட்டுக் கோலத்தின்
மையப் புள்ளியாய்
நீ...

Sunday, June 14, 2015

சமாதானம்....

ஆயிரம் இசைகள் இருந்தாலும்
உன்னோடு இசைந்திருக்கும்
இந்த ஒற்றைக்  குறிப்பின்
உயிர் கசிவு
போதுமானாதாய் இருக்கிறது
நம் சண்டையை
சமாதானத்துக்கு இழுத்து வர.

Saturday, May 30, 2015

வரம்..

பேசாத என் வார்த்தைகளை
கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது
உன் மௌனம்
மீள் சந்திப்பில்
பதம் பார்க்காமலிருக்க
மறதியை வரமாக்கித் தரட்டும்
உன் கடவுள்..

Wednesday, May 27, 2015

நேசக் காடு...

நேசக் காடுகளில்
காமத்தீ மூட்டுவது
காதல் சதுரங்கத்தில்
ராணியை இழப்பதாகும்...
____________________


சொல்லுறுவிய மௌனத்தில்
எஞ்சி நிற்கிறது
பெருங்காற்றின்
பேரிரைச்சல்.

Monday, April 13, 2015

அன்று பெய்த அப்பெரு மழையில்..


பெய்த மழையில்
முதல் துளி எது
விழுந்து முடித்த
கடைசி துளி எது

உன் இதழ்களில் தேடிக் கொண்டிருக்கிறேன்

முத்தங்களின் ஈரத்தில்
ஒளிந்துகொண்டு
போக்கு காட்டியபடி இருக்கிறது

நாம் சுவைத்த முதலும்
கடைசியுமான அத்துளி...

Monday, February 23, 2015

எனக்கு நீ...

எல்லாருக்கும் ஒரு நட்பு இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு காதல் இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லருக்கும் ஏதோ ஒன்று
எதுவாகவோ இருக்கிறது
என் எல்லாமாகவும்
எனக்கு நீ இருக்கிறாய்.

நானாகிய தோட்டம்....

எனது பெருவெளியில்
தோட்டம் ஒன்று வரைந்தேன்
சில பூக்களையும்
கூடவே சில வண்ணத்துப் பூச்சிகளையும்

வந்து பார்க்கவும்
வாசங்கள் நுகரவும்
சில மனிதர்களையும் வரைந்து வைத்தேன்

விடியலில்
பூக்களின் நிறங்களும்
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளும்
காணாமல் போயிருந்தன

உதிர்ந்து கிடந்தன சில முகமூடிகள்…

காதல் துளி...

தீராத் தனிமையின்
பெருந்தாகத்தை
தீர்க்க வந்ததுன்
காதலும்
ஒவ்வொரு துளியாகவே…

காத்திருக்கும் ....



சுற்று முற்றும்
எத்தனை பேர் இருந்தாலும்
தெரியாத முகங்களுடன்
என்ன பேசுவது???..
அலைபேசி நிறைய எண்கள் 
இருந்தாலும் தனிமைகாத்திருக்கும் 
சாயங்கலாப் பொழுதுகளில்
தெரிந்தவருடனும் என்ன பேசுவது??...

Monday, February 16, 2015

சீண்டல்கள்…

உறக்கத்தில் உதிக்கும்
உதட்டோரப் புன்னைகைக்குப் பின்
சிணுங்கிக் கொண்டிருந்தன
உன் சீண்டல்கள்…

நீ...... நான்... நீ...



நீ
நான்
சில கவிதைகள்
சொல்வதற்கும்
சொல்லும் போதே மறப்பதற்கும்

நீ நான் சில நினைவுகள்
நினைப்பதற்கும்
நினைக்கும் போதே
மறப்பதற்கும்…

நான்
கொஞ்சு...ம் சாபம்
நீ 
கொஞ்சம்... வரம்


பரிசு....

அன்றலர்ந்த மலரை நுகர்வதையும்
இந்நொடிப் பிறந்த குழவியை
ஏந்துதலையும்
முதல் துளி உள்வாங்கி
பரப்பும் மண்ணின் வாசத்தையும்
முதல் முத்த ஈரத்தையும்
ஒவ்வொரு தாளிலும்
உணர்த்திச் செல்கிறது
நீ பரிசளித்த புத்தகங்கள்....

சாபம்..


ஆணி கீறிய தழும்புகளுக்கு
களிம்பிட வரும்
உன் கைகளுக்கு
சுத்தியல்கள் கிடைக்காமல் போகட்டும்...
_________________________________________________

இதழும் இதயமும்
பற்றி எரியும் வரை
நீ அணைப்பாய் என
நம்பியிருந்தேன்..