Wednesday, September 9, 2015

பரிசு...

எப்போதுமே உனை நினைக்கும் நேரம்
துளிர்க்கும் ஈரம்
நனைக்கும்
என் இமைகளின் ஓரம்

இன்றென்னவோ
மேலிருந்து 
பள்ளம் நோக்கி 
வீழும் அருவியாய் 
கண்களிலிருந்து  இறங்கி
நெஞ்சுக் கூட்டில் ததும்பி
நாபிச் சுழி நிரப்பிய 
விழி நீரை 
வீழும் நீரை 
தடுக்க முயலவில்லை 

சிறு துளியோ பெரு மழையோ
என் கண்ணீர் என்றுமே உனை
தூற்றாது பதில் கேட்காது

எனக்கு உன் மீது 
புகார்கள் இல்லை
கோபங்கள் இல்லை 
வருத்தங்கள் இல்லை

இவை எல்லாம் எப்போதோ
எனைக் கடக்க வைத்துவிட்டாய்

நீ கொடுக்கும் பிறந்த நாள்
பரிசாக நான் இறக்கும் நாள் வரை
ஏந்திச் செல்வேன்
பொழுது போக்காக
நீ மீன் பிடிக்க ஆரம்பித்திருக்கும்

என் கண்ணீர் துளிகளை..

Monday, September 7, 2015

தாய்ப் பறவை....

என்னால் குழந்தைகள்
இருக்கும் அறையை
சாத்தி வைக்கவே இயலாது
அப்படிச் செய்தால்
எனக்கும் அவர்களுக்குமான
தொடர்பு விடுபட்ட
உணர்வு வருகிறது கூடவே
அவர்களைப் பற்றிய
ஒரு பாதுகாப்பின்மையும்
கோழி தன் குஞ்சுகளைக்
சிறகுக்குள்
காப்பது போலவே தான்
எனக்குள் அவர்களை
பொத்தி வைத்துக் கொள்கிறேன்
வரக்கூடும் ஒரு நாள்
குஞ்சுகள் பருந்தென
சிறகு விரித்து பறந்துவிடக் கூடும்
அப்போதும் நான் கோழியாகவே
அவர்கள் உதிர்த்துவிட்டுப் போன
இறகுகளை சேமித்துக் கொண்டு
அன்னாந்து பார்த்திருப்பேன்
கவலைகள் மறைத்த பெருமிதத்தோடு...

சொல் அடுக்கும் கவிதைக்காரி...

கண்ணீரின் தடம் எங்கும் பாசியென
நீ படிந்திருக்கிறாய்
உன் நினைவுகளில் நிரம்பித் ததும்பும்
என் மனதில் வெற்றிடமே இருப்பதில்லை
பிரிவின் ஏக்கம் இளைக்க வைக்கவில்லை
அசாதாரணமாக எடை கூடியிருக்கிறேன்
சதா உன் நினைவுகளைத் தின்று
உடைந்துவிடும் சாத்தியக் கூறுகள்
அதிகமிருக்கும் நம்பிக்கையின்
அந் நாள் நெருங்குவதை
நாட்காட்டியில் வெறிக்கிறேன்
என் பாடல்களில் இப்போதெல்லாம்
துள்ளல்கள் இருப்பதில்லை
வற்றிப் போன உன் காதலைப் போல
நீ புறக்கனித்த சொற்களை கவிதையாக்கி
வைக்கிறேன்
பிரிதொரு நாள் தேவைப் படும்
நீ குத்திக் காண்பிக்கவேணும்
நான் சொல் அடுக்கும் கவிதைக்காரி
நீ சொல்லெறியும் ஜென்மம்...

Friday, September 4, 2015

விதியால் தீர்மாணிக்கப்படும்…

அன்றைக்கான
அந்தச் சம்பவத்துக்குப் பின்
எனக்குத் தெரிந்துவிட்டது
இனி நீ எனக்கு
அப்பாவாக அம்மாவாக
காதலனாக கணவனாக
தோழனாக துரோகியாக
தேவனாக சாத்தானாக
கடவுளாக மிருகமாக
இன்ன பிற எது எதுவாகவோ
இருக்கப் போகிறாய் என
ஆனால் எது எதுவாக
எப்போதெல்லாம்
என்பது நமது

விதியால் தீர்மாணிக்கப்படும்…