Wednesday, January 25, 2017

ஆதித் திமிரின் பைத்திய கணங்கள்..

காத்திருப்பின் கரம் பற்றியபடி
நெடிய பயணம்
மேல் செல்ல
பாதையில்லை
திரும்புதலுக்கான சாத்தியங்களும் 
இல்லை

பிரார்த்தனைகளை முனுமுனுப்பாக
முன் வைக்கிறேன்
விரல்களை கோர்த்தும் மடக்கியும்
மற்றுமொரு திரௌபதை என
கைகளை மேல் தூக்கியும்

இருண்ட கண்களின் காட்சி 
பிறழ்கையில்
ஒளி குறைந்த வெளிச்சத்தில் 
என் கை தொட்டுச் செல்கிறாய் நீ

பிடித்தங்கள் அற்ற போதும்
பிடிமானம் தேடியபடி
இறுகுகின்றன என் விரல்கள்

விடுபட்ட கைகளில்
உன் வியர்வையின் பிசுபிசுப்பு

ஆயுள் ரேகை அழியும்வரை
ழுந்தத் தேய்க்கிறேன்
கைவிடப்பட்டதின் பெருந்துயர் என
வீழ்கிறது என் விருட்சம்..


Wednesday, November 9, 2016

ரசனை...

முகநூலில் வெளிநாட்டுக் குழந்தை ஒன்று
தூங்கிவிழுந்து கொண்டே
முகமெங்கும் ஐஸ்க்ரீமை
ஈஷிக்கொண்டு சாப்பிjடுவதை
ரசித்த  லட்சுமி
பட்டென்று தன் ஒன்றரை வயது
மகனின் முதுகில் வைத்தாள்
அடி ஒன்றை
பருப்பு சாதத்தை வாயில் போடாமல்
கன்னத்தில் அப்பிக் கொண்டிருந்ததால்…

கவனம்...

உன் வார்த்தைகள் என்ன
திருவிழாக்கூட்டமா?
பேசிக்கொண்டிருக்கும் போதே
தொலைகிறேன்!..
ஆனால்
நான் தொலையக் கூடாது
என்பதில் நீ மிகக் கவனமாகவே
இருக்கிறாய்
அளந்தே பேசுவதால்..

கொக்கின் நாஸ்டால்ஜிக்..

ஓடுமீனும் ஓடவில்லை
உறுமீனும் வரவில்லை
ஆனாலும் வாடி நிற்கிறது
கொக்கு
நீர் வறண்ட ஆற்றில்…

இடப்பெயர்ச்சி..

நகரத்தின் நடுவே இருக்கும்
அரசு பள்ளியை நோக்கி
குடிசை மாணவர்களும்
குடிசைப் பகுதியின்
ஓரத்தே ஓங்கி நிற்கும்
தனியார் பள்ளியை நோக்கி
நாகரீக மாணவர்களும்…

Wednesday, July 20, 2016

பிச்சையல்ல பிரியங்கள் …

காரணங்கள் எதுவாகவோ
இருந்துவிட்டுப் போகட்டும்

அவகாசம் எதுவுமற்ற
கைவிடப்பட்ட பொழுதொன்றில்
உன் மீதான நம்பிக்கையை
தேர்ந்த கறிக்காரன் போல்
ஒரே வெட்டில் நீ
அறுத்தெறிந்த போது
வன்மத்தின் சாயல்களைக் கொண்டிருந்ததன
உன் நேசங்கள்

அலட்சியங்கள் துளைத்த
என் முதுகை
உன் புறக்கனிப்பின் சுவற்றில்
சாய்க்கிறேன்
ஊடறுத்துச் சென்று ருசி பார்க்கிறது
இரத்தவாடை நிரம்பிய
என் ஆதிக் காதலின் இரைஞ்சுதல்களை

என் பிரியத்தை பிய்த்தெடுக்கும்
உரிமையை யார் தந்தது உனக்கு?
சொற்கள் எறிந்து தீர்ந்தாகிவிட்டதென்றா
மௌனத்தை எறிகிறாய்?

சூல் கொண்ட வெட்டுக்கிளியின்
அடி இறகை விலக்கி
உன் பல் குத்தும் குச்சியால்
முட்டைகளை நிரடுவது போலவே
நம் நேசத்தையும் நிரடுகிறாய்
பிச்சையென்று நினைத்துவிட்டாயோ
பிரியங்களை!!?..

பிடிமானங்களைத் தகர்த்தபின்
துக்க வீட்டில் சிதறிக் கிடக்கும்
பூக்களின் வாசனையைப் பற்றி
எதற்கினி ஆராய்ச்சி?

Sunday, June 26, 2016

துரோகத்தின் முதல் கத்தி..

இதழ் முத்தம் காயும் முன்னே
நீ பிடி தளர்த்தி
தள்ளிச் சென்ற
குருதி ஒழுகிய
என் அடி வயிற்றுக்
குறுங்கத்தியின் பிடியை
இறுகப் பற்றியபடி
நினைவு தப்பினேன்
கண்ணில் உறைந்த காதலோடும்
உன் வெள்ளைச் சட்டையில்
அப்பிக் கிடக்கும்
சிவப்புக் கறையை
எதைக் கொண்டு நீக்குவாயோ
என்ற கவலையோடும்…