Thursday, January 26, 2012

இருக்கலாம்...
















இதுவரை உனக்கென
எழுதிக்கொண்டிருந்த என் விரல்களின்
கடைசி கடிதமாகவோ அல்லது
கடைசி கவிதையாகவோ இது இருக்கலாம்..

தற்காலிகத் தண்டனையாக
பூட்டப் பட்டிருக்கும்
உன் இதயத்தில் என் வாசம்
மனமுவந்து ஏதொ ஒரு நாள்
நீ திறக்கும் நேரம்...

உனை ஆச்சரியமூட்டும் பெயர்
அறியாததொரு அழகிய பூ
வாசத்துடனோ...

அல்லது அதிர்ச்சியூட்டும் அழுகிய
பிண நாற்றத்துடனோ இருக்கலாம்...

புரிந்து கொள்ள முடியாத அல்லது
புரிந்து கொள்ளப்படாத எனதன்பு
கீறல்கள் விழுந்து தன் பிரியத்தின்
ரத்தங்களைச் சொட்டிக் கொண்டிருக்கலாம்...

கூட்டுப் புழுவெனத் தோன்றி
சிறகுகள் முளைக்க
வண்ணத்துப் பூச்சியென்று நினைக்கையிலேயே
ஒரு மரங்கொத்தியாகிப் பறந்துவிட்டிருந்தது
என் கூட்டின் ஒற்றைப் பறவை...

இப்படித்தான் தோற்றுவித்திருந்தாய்
உன் வரவையும் இருத்தலையும்
சற்று நேரம் முன் இதயம் கொத்திச்
சென்றுவிட்டிருந்த உன் பிரிதலையும்...

வெகு இயல்பாகவே நடத்திவைத்தாய்
சந்திப்பையும் துண்டிப்பையும்...

இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்
பழக்கியும் வைத்தாய்
எதிர்ப்பின்றி வெட்டுப்படும்
மரத்தைப் போல...

எப்படி?!...
எப்படிப் புரியவைக்கத் தவறினேன்
என் கவிதைப் பொருளல்ல
நீ
உயிர்க் கரு என்று...

Monday, January 23, 2012

என் கவிதைகளின் கதை...













தனிமை தின்று கொண்டிருக்கும்
நிசிப் பொழுதில்

அரவமற்ற நாழிகையில்
ஆரவாரத்தோடு ஒவ்வொன்றாக

சறுக்கி வெளியேறுகின்றன
என் மன ஏட்டின்
எழுத்துகள் யாவும்

வழியில் ஒன்றுக்கொன்று
முட்டி மோதி முந்தி
முண்டியடித்து நகர்கின்றன

சில உன் வாசல் அடையும் முன்பே
உயிர் விட்டு விடுகின்றன

சில உன் படுக்கையின் முன்பு
படுகாயமடைந்து
மயக்கமுற்று விடுகின்றன

உன் மீதேறி உன் இதயம்
தொட்டுத் திரும்பி
எனைச் சேர்ந்த
எழுத்துக்கள் மட்டும்

சப்தமில்லாமல் நுழைந்து
எனது பக்கங்களில்
கவிதைகளாக பதிந்துவிடுகின்றன...

Thursday, January 19, 2012

காணாமல் போனவள்....















நீ அறிமுகமான நாளுக்கும்
உனை அறிந்த நாளுக்கும்
இடையே
நான் காணாமல் போயிருந்தேன்...

நீ தொடுதல் தொடங்கிய கணத்துக்கும்
உன் ஸ்பரிசம் உணர்ந்த கணத்துக்கும்
இடையே
நான் காணாமல் போயிருந்தேன்...

உன் உதடுகள் வார்த்தைகள்
உதிர்த்த நிமிடத்துக்கும்
முத்தங்கள் உணர்த்திய நிமிடத்துக்கும்
இடையே
நான் காணாமல் போயிருந்தேன்...

என் கூச்சம் நிறைந்த தழுவலுக்கும்
உன் தயக்கமற்ற அணைப்பிற்கும்
இடையே
நான் காணாமல் போயிருந்தேன்...

உனைத் தெரிந்து கொண்ட
மணித்துளிக்கும்
உனைப் புரிந்து கொண்ட
மணித்துளிக்கும் இடையே
நான் காணாமல் போயிருந்தேன்...

அந் நேரங்களில் நான் எங்கிருந்தேன்?
எப்படியிருந்தேன்?..
எத்தனை யோசித்தும்...

உற்றது துறந்து மற்றது மறந்து
ஒரு அர்ப்பணிப்பாய் ஒரு சரணாகதியாய்
உன்னில் கரைந்திருந்தது தவிர
வேறேதும் நினைவுக்கு வரவில்லை...

Wednesday, January 18, 2012

குறுங்கவிதை...












உடைந்த நிலவு
தவ்விக் குதித்திருந்தது
குளத்தில் தவளை

Wednesday, January 11, 2012

தீக்குளிக்கவில்லை சீதை...















அண்ட பேரண்டத்தை எல்லாம்
ஒரு துளியாக்கி உறிஞ்சிவிட்டது
போன்றதொரு வெறுமை
சூழ்ந்திருந்தது

காலத்தை கரைத்துவிட்ட
கனத்த மௌனம்
இருவரிடையே வியாபித்திருந்தது..

ஏன்? ஏன்? இந்த முடிவு?
ஏன் இம்முறை முரண்டுபிடித்தல்?
முன்பு எப்போதைக்குமல்லாத
பிடிவாதம்?
உன் இயல்புக்கு பொருத்தமல்லவே?

அங்கு அவர்களின் இதழ் பேசவில்லை
மொழி வசப்படவில்லை
விழியும் நேர்ப்படவில்லை
அவற்றின் பேரமைதியில் மனங்கள்
உரையாடியது இல்லை இல்லை
உணர்ந்தது தம் மொழிகளற்ற உணர்ச்சிகளை

கேட்காமலேயே அன்று தீயில்
விழுந்தெழுந்தாயே?
இன்று கேட்டும் ஏன் மறுதலிக்கிறாய்
இத்துனை பிடிவாதத்தோடு!...

வசதி இழந்து சுகம் மறுத்து
ராஜ வாழ்வு துறந்து
என் இருப்பிடமே சுவர்கம் என
காடு வரை வந்தவள் நீ...

நான் மீட்பேன் என நம்பி
உயிர் தேக்கி நின்றவளே
இன்று சூல்கொண்டு நம்
கரு தாங்கி நிற்கும் வேளையில்
ஏன் விட்டு விலகுகிறாய்?

நான் அறிவேன் உன் பதிவிரதம்
எனக்காகவா கேட்கிறேன்
ஊருக்காக கண்மணியே
இன்னுமொருமுறை குளித்தால் என்ன?

கண்களில் நீர் நிரப்பி உதிரத்தை வடித்தனள்

கேள்வியும் நீயே பதிலும் நீயே...
என் உலகம் நீ, என் உயிர் மூச்சு நீ
எனை அசைவிக்கும் சக்தி நீ
என் வாழ்வும் நீ மரணமும் நீ
சகலமாய் எனக்குள் நிறைந்தவன் நீ

ஒரு முறை என்ன? ஓராயிரம் முறை
தீக்குளிக்க சம்மதம் உனக்காக
என் பவித்திரம் உனைச் சேர்ந்தது
நீ உணர்வது நீ உணர்ந்தது
ஊருக்கு அல்ல ஊருக்காகவும் அல்ல..
புரிந்தவுடன் அழைக்க வா..

இப்போது விடை கொடு அன்பே

வணங்கிப் பிரிந்தாள்..

விளங்கி நின்றான் கனத்த மனத்தோடு
கலங்கி நடந்தாள் கனத்த வயிரோடு

இவர்கள் ராமனும் சீதையும்...

Thursday, January 5, 2012

வசந்தம் தப்பி....













வசந்தம் தப்பி மொட்டு விட்டது
என் தோட்டத்து மரம்
காலம் கடந்து ஏற்பட்ட
காதல் போல...

பற்றற்ற...
சதைப் பற்றற்ற காதல்
வசந்தம் கடந்துதான் மலர்கிறது...

எந்தச் ஸ்ருதியிலும் சேர்வதில்லை
வண்டியோட்டியின் வாய்ப்பாட்டு
நம் பிரியத்தைப் போல...

உனைக் கடந்துவிட்டதாய்
எக்களிக்கிறது மனம்
கடைசி வரை உன் நினைவுகளால்
துரத்தப்படப் போவதை அறியாமல்...

நிலவு மட்டும் விழித்திருக்கும்
நிசிக்கு துணையாக என் விழிகளும்
உன் திசை தேடியபடி...

Tuesday, January 3, 2012

மெய் தொலைத்த...












நிஜங்களைப் பூசி வேடமிட்ட
பொய்கள்

திரை மூடியதும் தன்
உடல் தேடி

உயரே உயரே உயரே
பறந்து அலைந்து

தன் போலவே
மெய் தொலைத்த நிஜங்களின்
வெப்பத்தில் வறண்டு

தாகம் தணிக்க தடாகம் '
விழுந்த நேரம்

எங்கிருந்தோ கரிய இறகுகளை விரித்து
வந்த பெரிய பறவை ஒன்று

தன் கூரிய செவ்வலகுகளால்
கொத்திச் சென்றது...