Thursday, January 26, 2012

இருக்கலாம்...
















இதுவரை உனக்கென
எழுதிக்கொண்டிருந்த என் விரல்களின்
கடைசி கடிதமாகவோ அல்லது
கடைசி கவிதையாகவோ இது இருக்கலாம்..

தற்காலிகத் தண்டனையாக
பூட்டப் பட்டிருக்கும்
உன் இதயத்தில் என் வாசம்
மனமுவந்து ஏதொ ஒரு நாள்
நீ திறக்கும் நேரம்...

உனை ஆச்சரியமூட்டும் பெயர்
அறியாததொரு அழகிய பூ
வாசத்துடனோ...

அல்லது அதிர்ச்சியூட்டும் அழுகிய
பிண நாற்றத்துடனோ இருக்கலாம்...

புரிந்து கொள்ள முடியாத அல்லது
புரிந்து கொள்ளப்படாத எனதன்பு
கீறல்கள் விழுந்து தன் பிரியத்தின்
ரத்தங்களைச் சொட்டிக் கொண்டிருக்கலாம்...

கூட்டுப் புழுவெனத் தோன்றி
சிறகுகள் முளைக்க
வண்ணத்துப் பூச்சியென்று நினைக்கையிலேயே
ஒரு மரங்கொத்தியாகிப் பறந்துவிட்டிருந்தது
என் கூட்டின் ஒற்றைப் பறவை...

இப்படித்தான் தோற்றுவித்திருந்தாய்
உன் வரவையும் இருத்தலையும்
சற்று நேரம் முன் இதயம் கொத்திச்
சென்றுவிட்டிருந்த உன் பிரிதலையும்...

வெகு இயல்பாகவே நடத்திவைத்தாய்
சந்திப்பையும் துண்டிப்பையும்...

இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்
பழக்கியும் வைத்தாய்
எதிர்ப்பின்றி வெட்டுப்படும்
மரத்தைப் போல...

எப்படி?!...
எப்படிப் புரியவைக்கத் தவறினேன்
என் கவிதைப் பொருளல்ல
நீ
உயிர்க் கரு என்று...

No comments: