Wednesday, November 9, 2016

ரசனை...

முகநூலில் வெளிநாட்டுக் குழந்தை ஒன்று
தூங்கிவிழுந்து கொண்டே
முகமெங்கும் ஐஸ்க்ரீமை
ஈஷிக்கொண்டு சாப்பிjடுவதை
ரசித்த  லட்சுமி
பட்டென்று தன் ஒன்றரை வயது
மகனின் முதுகில் வைத்தாள்
அடி ஒன்றை
பருப்பு சாதத்தை வாயில் போடாமல்
கன்னத்தில் அப்பிக் கொண்டிருந்ததால்…

கவனம்...

உன் வார்த்தைகள் என்ன
திருவிழாக்கூட்டமா?
பேசிக்கொண்டிருக்கும் போதே
தொலைகிறேன்!..
ஆனால்
நான் தொலையக் கூடாது
என்பதில் நீ மிகக் கவனமாகவே
இருக்கிறாய்
அளந்தே பேசுவதால்..

கொக்கின் நாஸ்டால்ஜிக்..

ஓடுமீனும் ஓடவில்லை
உறுமீனும் வரவில்லை
ஆனாலும் வாடி நிற்கிறது
கொக்கு
நீர் வறண்ட ஆற்றில்…

இடப்பெயர்ச்சி..

நகரத்தின் நடுவே இருக்கும்
அரசு பள்ளியை நோக்கி
குடிசை மாணவர்களும்
குடிசைப் பகுதியின்
ஓரத்தே ஓங்கி நிற்கும்
தனியார் பள்ளியை நோக்கி
நாகரீக மாணவர்களும்…

Wednesday, July 20, 2016

பிச்சையல்ல பிரியங்கள் …

காரணங்கள் எதுவாகவோ
இருந்துவிட்டுப் போகட்டும்

அவகாசம் எதுவுமற்ற
கைவிடப்பட்ட பொழுதொன்றில்
உன் மீதான நம்பிக்கையை
தேர்ந்த கறிக்காரன் போல்
ஒரே வெட்டில் நீ
அறுத்தெறிந்த போது
வன்மத்தின் சாயல்களைக் கொண்டிருந்ததன
உன் நேசங்கள்

அலட்சியங்கள் துளைத்த
என் முதுகை
உன் புறக்கனிப்பின் சுவற்றில்
சாய்க்கிறேன்
ஊடறுத்துச் சென்று ருசி பார்க்கிறது
இரத்தவாடை நிரம்பிய
என் ஆதிக் காதலின் இரைஞ்சுதல்களை

என் பிரியத்தை பிய்த்தெடுக்கும்
உரிமையை யார் தந்தது உனக்கு?
சொற்கள் எறிந்து தீர்ந்தாகிவிட்டதென்றா
மௌனத்தை எறிகிறாய்?

சூல் கொண்ட வெட்டுக்கிளியின்
அடி இறகை விலக்கி
உன் பல் குத்தும் குச்சியால்
முட்டைகளை நிரடுவது போலவே
நம் நேசத்தையும் நிரடுகிறாய்
பிச்சையென்று நினைத்துவிட்டாயோ
பிரியங்களை!!?..

பிடிமானங்களைத் தகர்த்தபின்
துக்க வீட்டில் சிதறிக் கிடக்கும்
பூக்களின் வாசனையைப் பற்றி
எதற்கினி ஆராய்ச்சி?

Sunday, June 26, 2016

துரோகத்தின் முதல் கத்தி..

இதழ் முத்தம் காயும் முன்னே
நீ பிடி தளர்த்தி
தள்ளிச் சென்ற
குருதி ஒழுகிய
என் அடி வயிற்றுக்
குறுங்கத்தியின் பிடியை
இறுகப் பற்றியபடி
நினைவு தப்பினேன்
கண்ணில் உறைந்த காதலோடும்
உன் வெள்ளைச் சட்டையில்
அப்பிக் கிடக்கும்
சிவப்புக் கறையை
எதைக் கொண்டு நீக்குவாயோ
என்ற கவலையோடும்…

Monday, May 23, 2016

முதல் கவிதைத் தொகுப்பு - “மௌனத்தின் சப்தங்கள்”


தலைப் பிரசவத்தின் பின்னான என் முதல் பிரசவம், ஆம்  எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும் உயிர் சேர்த்து நான் பிரசவித்த என் கவிதைக் குழந்தை “மௌனத்தின் சப்தங்கள்” ஆக இன்று என் கைகளில். 11.05.2016 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள். இரண்டு விசேஷ சம்பவங்களை கொண்டிருக்கும் நாள். ஒன்று எங்கள் மகன் அத்வித்தின் உபநயன விழா. மற்றொன்று, அதே நாளில் விழாவின் தொடர்ச்சியாக எளிய முறையில் அரங்கேறிய என் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.

சந்தியா பதிப்பகம் திரு. நடராஜன் அவர்கள் கவிதைத் தொகுப்பை வழங்க, தொழிலதிபரும், கரூர் அரவிந்-ஏ-டிரேடர்ஸ்  ன் உரிமையாளருமான
திரு.வி. தங்கவேலு அவர்கள் பெற்றுக் கொண்டார். பங்கேற்று, வாழ்த்தி விழாவினை சிறப்பித்த இருவருக்கும் எனது பணிவான வணக்கங்கள் மற்றும் அன்று நடந்த இரு விழாக்களிலும் பங்கு கொண்டு, தொகுப்பை பெற்றுக் கொண்டு வாழ்த்தி உற்சாகமளித்த உறவுகள் மற்றும் நட்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  

பதட்டம், அவசரம் காரணமாக சிற்சில தவறுகளை கொண்டுள்ள போதும், கைகளில் தவழும் புத்தகம் பார்க்கையில், இளம் சிசுவை  நுகருவதைப் போன்ற ஒரு நெகிழ்வும் உற்சாகமும் ஏற்படாமல் இல்லை.
கலாப்ரியா, கல்யாண்ஜி என மேலும் பல ஜாம்பவான்களின் படைப்புகளை வெளியிட்டிருக்கும், வெளியிட்டுக் கொண்டே இருக்கும் சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக என்னுடைய தொகுப்புமா?!...நினைக்கையிலேயே பரவசத்துடன் கூடிய ஒரு வித பயமும் பதட்டமும் கலவையாக தோன்றுகிறது.

இத் தொகுப்பு எந்த அளவு உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் எனத் தெரியாது. நான்கு சுவற்றுக்குளான என் உலகத்தில் நான் எழுதிய கிறுக்கல்களை கவிதைகள் எனக் கொண்டு, நம்பிக்கையுடன் ஊக்கமளித்து, மிகக் குறுகிய கால அவகாசத்தில் பிரசுரித்து தந்த சந்தியா பதிப்பகத்தாருக்கும், முழு முனைப்புடன் இதை செயல்படுத்தி, சாத்தியமாக்கிய என் கணவர் பாலாஜிக்கும் நன்றிகள் பல.
  

Sunday, March 6, 2016

கூடடையும் நினைவுகள்...

எத்துனை தூரத்தில்
கொண்டு விட்டாலும்
திரும்பி விடும்
பூனைக் குட்டியாய்
புதிய வண்ணங்களை
அப்பிக் கொண்டு
கூடடையும்
உன் நினைவுகள்..


Saturday, February 27, 2016

காதல் பாடம்..

சந்திக்கும் முதல் 
நொடியிலேயே
கண்களை 
விழுங்கி விட்டால்
பிறகெப்படி உனை படிப்பது 
என்கிறாய்
ம்ம்....
அடுத்த சந்திப்பின் போது
ப்ரெய்லி முறை கற்று வா
என் அசட்டுக் காதலனே...

Thursday, February 11, 2016

நினைவில் மிதக்கும் என் வீடு...

வெள்ளம் புகுந்த என் வீடு
மூழ்கிய கட்டில் மெத்தை சோபா
உடைந்துவிட்டிருந்த
நாற்காலி மேசை
பழுதடைந்திருந்த டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங்மெஷின்
நனைந்து போயிருந்த
தலையணைகள் புத்தகங்கள்
ஊறிப்போயிருந்த
அலமாரிகள் பலகைகள்
மிதந்து கொண்டிருந்த
பாத்திரங்கள் சிலிண்டர்கள்
அடித்துப் போய்விட்ட உப்பு புளி
பருப்புப் பொட்டலங்கள்
வெள்ளம் வடிந்து சுவடு தேய்ந்த பின்னும்
நினைவில் மிதக்கும்
என் வீடு போலவே
வெள்ள நீரும்
தான் இருந்திருந்த
தாய் நிலத்தை நினைவு கூர்ந்து
வந்து போயிருக்குமோ?!!!...

வெள்ளம் புகுந்த வீடு...

இத்தனை நாட்களாக
தன் அம்மாவை
பூனை குட்டி வளர்க்கலாம்மா..
நாய் குட்டி வளர்கலாம்மா
மீன்குட்டியாவது வளர்கலாமேம்மா..
என நச்சரித்துக் கொண்டே இருந்த
சிறுவனுக்கு
மிகுந்த மகிழ்ச்சி
வெள்ளத்தில் அடித்து வந்து
ஒதுங்கிய அத்தனையும்
அவனது மாடி அறையிலும்

மடியிலும் பாதுகாப்பாய்…

மல்லிகை மகள் இதழில்...


இம் மாத  (பிப்ரவரி 2016) மல்லிகை மகள் புத்தகத்தில் என்னுடைய மூன்று கவிதைகள் வெள்ளம் புகுந்த வீடு எனும் தலைப்பில் பிரசுரமாகியுள்ளன. 
மகிழ்வும் நன்றியும் மல்லிகை மகள் மற்றும் ஆசிரியர் திரு. சிவஞானம் சார்.Thursday, February 4, 2016

கொஞ்சம் பிடிக்கும்....

உன் பாதம் பதிந்த
என் வாசல் மண்ணை
ஈரம் காயாமல்
பொத்தி வைத்திருக்கிறேன்
என் வீட்டு அஞ்சறைப் பெட்டி
அடுக்கின் மறைவில்
ஹா!!....
உன் மீது தீரா காதல்
என்றெல்லாம் இல்லை
உன்னைக் கொஞ்சம்
பிடிக்கும் அவ்வளவே…


Thursday, January 21, 2016

என் கேள்விகளும் உன் பதில்களும்....

உன்னிடம் கேள்விகள்
கேட்கத் தெரிந்தளவு
பதில்களைப் பெறத் தெரியாது எனக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட எனது
தொடர் கேள்விகளில்
எனக்குத் தேவையானதை
நயமாகத் தவிர்த்துவிட்டு
உனக்குச் சாதகமான கேள்விகளை மட்டுமே
தேர்ந்தெடுத்து விடுகிறாய்
எப்போதும்….


Saturday, January 16, 2016

பிரியங்கள்...

ஏற்றி வைத்த மெழுகின்
வெளியில்
இறங்கியபோதே
உருகி
வழியத் தொடங்கியிருந்தது
நம் பிரியங்கள்...

Sunday, January 3, 2016

வெள்ளம் புகுந்த வீடு...

வெள்ளம் புகுந்து பாழ் அடைந்த வீடுகளில்
நாற்காலிகளும்
முக்காலிகளும்
கட்டில் கால்களும்
தட்டிக் கொட்டி
சரி செய்யப்படுவது போல
எட்டுக்காலியும் தனது
சிதைந்தறுந்த வீட்டை
ஒவ்வொரு மூலையிலும்
குறுக்கும் நெடுக்குமாய்
செப்பனிட்டுக் கொண்டிருக்கிறது...

மழை....

கொட்டித் தீர்த்த மழை
கழுத்தளவு தண்ணீர்
அப் பள்ளி அறையில்
ஒண்டியிருந்த
கூட்டத்தின் நடுவே
"அம்மா"... என்றதொரு கேவல்

அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு
கரைபடிந்த பாவாடையும்
கலங்கிய கண்களுமாய்
பதின்வயதுச் சிறுமி...

சுற்றியிருந்த அத்தனை
கைகளும் கிழிக்கத் தொடங்கின
தத்தம் சேலை நுனிகளையும் துப்பட்டாத் துணிகளையும்
வேட்டி முனைகளையும்
திகைத்து நின்ற
"அம்மாவைத்" தவிர...