Saturday, March 26, 2011

வசந்த காலம்....

பள்ளி மணியடித்தும் பிரிய மனதில்லாமல்
ஊர்ந்து ஊர்ந்து திரும்பும் நத்தை வேகம்

மொட்டை மாடியில் கூட்டுப் படிப்பு
வாரக் கடைசியில் கூட்டாஞ்சோறு

தாவணிக்கு பின் தானம் தந்து
பின் திருப்பிக் கேட்டதில் செல்லக் கோபம்

அம்மா கட்டிய புளியோதரை
இரண்டு பங்காய் அவளுக்கும் சேர்த்து

திகட்டத் திகட்டப் பேசிச் சிரித்தும்
வழியனுப்ப வந்து வாராவதியிலும்
திகட்டாமல் தொடர்ந்த சில மணி நேரம்

காரணமற்றே பொங்கிய
சிரிப்பின் ஒலிகள்
காரணமின்றியே போட்ட
சண்டையின் வலிகள்

படிக்க மறந்தும் டிசம்பர் பூ
வாங்க ஓடிய மார்கழி விடியல்கள்

சித்திரை வெய்யிலிலும்
ரைட்டோ கொய்ட்டா
ஆடிய நாட்கள்

புத்தகத்தின் நடுவே மயிலறகு வளர்த்து
குட்டியைத் தேடிய குழந்தைத் தனங்கள்

பிறந்த நாள் பரிசாய்
கொலுசு மணி கொடுத்து
பத்திரமாய் வச்சுருக்கியா? என‌
வருடம் முழுதும் சோதித்த
அன்புத் தொல்லைகள்

நட்பாய் கிடைத்து நட்பில் கிடைத்து
நட்புடன் கிடைத்த
வருடம் முழுதும் என் வசந்த காலம்

இன்றும் தொடர்கிறது என் மகளின் மூலம்....

கல்லறைப் பூக்கள்....

நான் தான் உன்னை மறந்துவிட்டேன் என்றேனே...
பின் ஏன் கனவில் வந்து கவிதை உரைத்தாய்?
கணமும் உன்னை நினையேன் என்றேனே...
பின் ஏன் கண்ணுக்குள் புகுந்து கண்மை கலைத்தாய்?

மறத்து போன உணர்வுகளையும்
மறந்து விட்ட நினைவுகளையும்
தட்டி எழுப்பி மனதில் ஏனோ மயக்கம் தந்தாய்.

நீ கொடுத்த நினைவுகளை அழித்துவிட
மனதின் ஆழத்தில் தள்ளிப் புதைத்தேன்
அதையே உரமாக்கி வேர் கொண்டு
விருட்சமாய் வளர்ந்தாய்!...

என் செய்து உன் வசம் விட்டு
என் வாசம் அடைவது?

உயிர் துறந்து மண்ணில் புதைந்த வேளையிலும் - ஐயோ!...
கல்லறைப் பூக்களாய் பூத்ததடா....
உன் ஞாபகம்!.......

Saturday, March 19, 2011

உன் நினைவுகள் தின்று...




உடைந்த நிலவிலும் முழுதாய் உன் முகம்
தேயும் பிறையிலும் நிறையும் உன் நினைவு
கலையும் மேகத்திலும் சிதையாமல் உன்னுருவம்
காமச் சுவடுகள் அற்ற என் காதல் பாதையில்
தேவனாய் உன் வரவு
உன் காதல் துளி ஒன்று
என் இதயம் தொட்டு சிதறி

உனைச் சேர்ந்தது நூறாக
உதிரும் மழைச் சரங்களில்
நீ தட்டிவிட்ட சாரல் எது?
கால் நனைக்கும் அலைகளில்
எனை முத்தமிட்ட உனதலையின்
அடையாளம் எது?
தனிமையில் தேடுகின்றேன்
தனியாகத் தேடுகின்றேன்
தணியாமல் தேடுகின்றேன்
என் தனிமையையும் எனக்கு
அன்னியமாக்கி உன் நினைவுகளால் கொல்லுகிறாய்

பசி அடக்க விரல் சப்பும் குழந்தையாய் நான்
உன் நினைவுகள் தின்று .....

Wednesday, March 16, 2011

மரிக்க மறுத்த.....

மரிக்க மறுத்த ஞாபகங்கள்
மறுத்தும் மறந்து போகாமல்
ஒரு துளிக் கண்ணீரில் நீந்தி
கரை சேர்கிறது மரத்த மனதோரம்....

சிதறி ஓடிய காதல் துளிகளை
சேர்க்க முயல்கிறேன்
உயிரின் கோடிட்ட இடத்தை,
உறவின் விடுபட்ட வெளியை நிரப்ப ....

துடுப்பு தொலைத்த பரிசலாய்
உன் நினைவுச் சுழலிலே
சுழன்று கொண்டேதான் இருக்கிறது
உன் காதல் தடம் பதிந்த
என் காலச் சக்கரம்....

Saturday, March 12, 2011

மீண்டும் மீண்டும்...










இதழ்களில் அஹிம்சயை போதித்து
கண்களில் வன்முறை ஏன் செய்தாய்

தூரத்தில் நீ நின்றாலும்
உன் சுவாச வெப்பம் போதியதே
என் மனதில் தீப்பிடிக்க

சற்றே புருவம் சுருக்கிய
உன் குறு குறு பார்வை
போதியதே என் இதயத்தில் குளிரடிக்க

எனைத் திட்டுவதற்கான
உன் கத்தல்களில்
ஒளிந்திருந்த காதல் போதியதே
என் மனதை வருடிச் செல்ல

அனைத்தும் துறந்து
அணை உடைத்த வெள்ளமாய்
நீ பாய்ந்து சென்ற பின்னும்

என் இதயப் பள்ளங்களில்
அங்கங்கு தேங்கி நிற்கிறது
உன் நினைவு நீர்த் தேக்கங்கள்

பாசம் படர்ந்த உன் நினைவுக்கரை
கடக்க முயன்று முயன்று
முடியாமலேயே மீண்டும் மீண்டும்
சறுக்கி விழுகின்றேன்

"உன் ஞாபக குளத்துள்ளேயே".....

Saturday, March 5, 2011

நீ வருவாயென....

ஆகாயம் இரண்டாக மண்மீது
உன் கண்ணின் கரு நீலம்
நான் கண்ட போது
உயிர் தூண்டும் மின்னல்கள்
உன் பார்வையோடு
உறங்க வைக்கும் பூங்காற்றும்
உன் வார்த்தையோடு....
காதலில் அஹிம்சை பேசி
கனவுகளில் இம்சிக்கிறாய்
ஊமைக்கொரு வார்த்தைபோல் வந்து
மௌனங்கள் சப்திக்கிறாய்
நீளும் இரவுகளையும்
மீளா நினைவுகளையும்
நீலக் கண்களில் நிரந்தர கர்பமாக்கி
என் தூக்கங்களைத் தூக்கிக் கொண்டு
தொலைதூரம் சென்றுவிட்டாய்.
காத்திருக்கிறேன்...
கழன்றுவிழும் காலத் துளிகளில்
ஏதோ ஒன்றில்
"நீ வருவாயென"...