Saturday, March 31, 2012

வெற்றுப் படகு...


தனிமையிலே இனிமை கண்டு
வெள்ளி நிலவின் வெளிச்சத்திலே
நீல நதியை தழுவிச் சென்று
யோக நிலையை எட்டியிருந்ததது
படகில் இருந்த என் மனது...

சட்டென்ற அதிர்வில் படகின் குலுக்கலில்
தடுமாறி இடம் மாறி
கட்டுக் கடங்கா கோபத்துடன்
சகட்டு மேனிக்கு வசவுச் சொற்களை
நுனி நாக்கு வரை உற்பத்தி செய்து
பொங்கி எழுந்த கோபப் பிழம்பு
ஆயாசமாய் அடங்கியது...

வெளிப்படுத்தாத அவ்வார்த்தைகள்
அயர்ச்சியின் உச்சத்தில்
மன அழுத்தம் கூட்டி விட்டு
தன்னைக் கழித்துக் கொண்டது
சுழித்துச் சென்ற நீரலையில்
இடித்துச் சென்ற
வெற்றுப் படகைப் போல...

Friday, March 30, 2012

தலைப்புக்கேற்ற கவிதைகள்- கண்களை வருத்தும் கண்மணிகள்..இருட்டரைக்குள் நான் இருந்தேன்
இருள் நிறந்தான் பார்த்திருந்தேன்

வெளிச்சமென நீ வந்ததாலே
விழியிழந்தும் உன் அன்பு வழி
நான் பார்த்திருந்தேன்...

பார்வையற்றும் உன் வரவாலே
பல கனவு சுமந்திருந்தேன்..

ஆண்டவன் எடுத்த கருமணியை
பெற்றது எனை ஆண்டவன்
உன் தயவாலே...

ஆசை தீர பார்க்க வந்தேன்
என் முதல் பார்வை
உன்னில் பதிக்க வந்தேன்...

பாவி பார்த்த பார்வையிலே
பூ மால போட்ட உன் படம் தான்
கண்ணில் வந்து விழுந்ததய்யா
கண்மணிகள் இப்போ வருந்துதய்யா...

Friday, March 23, 2012

ஒரு புத்தகத்தின் விண்ணப்பம்...
அமைதியும் பேரழிவும்
மென்மையும் வன்மையும்
எங்களில் அடக்கம்...

உன்னதமும் சீர்கேடும்
விடுதலையும் வேட்கையும்
உண்மையும் கபடமும்
வழிகாட்டலும் நெறிப்பிறழல்களும்
கூட எங்களில் ஐக்கியம்...

உயிரற்ற பொருளானாலும்
உயிரெழுச்சி செய்யும் வித்தை அறிந்தவர் நாங்கள்

உங்களின் சோம்பல் நேரப் புரட்டலிலும்
காத்திருப்பு அலுப்புகளில் அக்கறை அற்ற
ஒற்றைவிரல் திருப்புதலிலும்
எங்கள் முனகல் குரல் கேட்டுள்ளீரோ?..

உங்கள் எச்சை விரல் ஸ்பரிசத்திலும்
எச்சில் கோப்பை சொட்டலிலும்
நனைந்த போது எங்களின்
அழுகுரல் கேட்டுள்ளீரோ?..

ஆர்வக் கோளாறில் வெடுக்கென்று
பக்கம் புரட்டி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நுனிப்புல் மேய்ந்து
பாதி படித்த பக்கத்தை பிளந்து வைக்கும் போது
எங்களின் கதறல்கள் கேட்டுள்ளீரோ?..

உயிரற்ற ஜடம்தான் என்றாலும் உயிர்
எழுத்து சுமந்த எங்கள்
வலி அறிவீரோ?..

கவிதையோ கதையோ நாடகமோ நாவல்களோ
கட்டுரையோ வாழ்வியலோ
உயர்நிலையாய் இருந்தாலும்
கடைநிலையில் கவிழ்ந்தாலும்

நிகழ் நிலை உரைக்கும் தூதுவராய்
உங்கள் கையில் தவழ்வது
உங்கள் பிரயத்தனத்தால்..

நாங்கள் சுமந்த எழுத்துக்கள்
நரம்புகளில் பின்னப்பட்டவை
உயிர் ரத்தம் பாய்பவை
வார்த்தைகளின் இடைவெளிகள்
அதிர்வுகளால் நிரம்பியவை...

உங்களின் யாரேனும் ஒருவரது
மொட்டாய் இருக்கும்
ரசனையையும் கனவுகளையும்
பூக்கச் செய்பவை...

உங்களின் யாரேனும் ஒருவரது
ஏக்கக் குமுறல்களை
எரிமலையாய் வெடிக்கச் செய்பவை...

இனி புத்தகங்களை அவசரமாய் அல்ல
அன்போடு புரட்டுங்கள்
மெத்தனமாய் அல்ல மென்மையாய்
கையாளுங்கள்...

வரிக்கு வரி அதன் அதிர்வுகளை
விரல்களால் காணுங்கள்
கண்களால் ஸ்பரிசியுங்கள்...

புத்தகங்களை ஜடமாய் அல்ல
ஜ்வாலையாய் அணுகுங்கள்...

Wednesday, March 21, 2012

குறுங்கவிதைகள்...

நட்பு:
எல்லாரும் சிலாகிப்பது
பாலினம்
மாறாதவரை...

இரவு:
வளர்ந்த பின்னும்
வெம்மை தரும்
மற்றுமொறு கருவறை...

மேகம்:
எரியும் சூரியனையும்
நொடிபொழுது அணைத்து
குளுமை தரும் போர்வை...

காதல்:
ஒரு நொடியாவது
நானக நீ இருந்து பார்
நீ எனக்கு யார் என்பது புரியும்

முத்தம்:
இதழில் தென்றல் முத்தம்
இதயத்தில்
புயலின் சத்தம்...

Monday, March 19, 2012

உன் மீதான காதல்...எல்லா எச்சரிக்கை உணர்வுகளையும் மீறி
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...

எந்நேரமும் சந்திக்கக் கூடிய
ஏமாற்றங்களைக் கடந்து
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...

எப்போதும் நடக்கக் கூடிய
துரோகத்தின் எதிர்பார்ப்புகளைத் தாண்டி
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...

எக் கணமும் நேரக் கூடிய பிரிவின்
சாத்தியங்களைத் தள்ளிவிட்டு
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன் மீதான காதல்...

இவற்றை எல்லாம் நீ இல்லை என்று
சாதித்தோ
ஆமாம் என்று ஆமோதித்தோ
எனை உதறிச் செல்லும் போது...

என்னிடம் மிஞ்சப் போவது
துரோகத்தின் முட்களோ
கோபத்தின் கத்திகளோ
க்ரோதத்தின் வலிய கயிறுகளோ அல்ல...

கண்களை இழந்தபின் கைகளில் பெற்ற
உன் உருவம் பொறித்த
அழகிய ஓவியம் மட்டும்..

என் உயிரின் ரத்தத் துளிகளைப்
பூசிக் கொண்டு...

Friday, March 16, 2012

கண(ன)ங்கள்.....

கணங்கள் கடந்து கொண்டிருக்கின்றன
கனங்களாக...
நினைவுகளைக் கீரிக் கடந்து கொண்டு

உனை அடைந்ததின் கர்வமாக...
உன் பிரியத்தின் துளிகளாக...
உன் விலகலின் சாபமாக...
உன் துரோகத்தின் முட்களாக...
இதயத்தைக் கிழித்துக் கொண்டு
உதிரும் ரத்தமாக...

பல சமயங்களில் என் ஏமாற்றத்தின்
கண்ணீர்த் துளிகளாக..

இன்னமும் கணங்கள்
கடந்து கொண்டுதான் இருக்கின்றன
கனங்களாக..

Saturday, March 10, 2012

மௌனங்களை மௌனங்களாகவே....
சில மௌனங்களை மௌனங்களாகவே
இருக்கவிடுவதில் இருக்கும் சுதந்திரம்
வார்த்தை வடிவம் கொடுக்கையில்
சிறைப்பட்டு விடுகின்றது...

அந்தியில் நீண்டு வளரும்
நம் நிழல்களுக்கு மத்தியில்
முன்பு உருகிய பாறை
இப்போது உருக முடியாத ஐஸ் கட்டியாக
மாறிவிட்டதை வார்த்தைச் சிதைவு பெற்ற
மௌனம் உறைக்கிறது...

நம் நாவுக்கடியில் கசந்து கொண்டிருக்கும்
நிசப்தத்தின் கசிவுகளில் வழுக்கி
ஓடிக் கொண்டிருக்கிறது
நாம் சேர்ந்திருந்த மணித்துளிகள்...

முடிவு செய்யப்பட்ட நிகழ்வுகளில்
ஒருபோதும் ஏற்படுவதேயில்லை
காத்திருத்தலின் சாத்தியங்கள்...

தன் பசிக்கு வார்த்தைகள் அகப்படாததால்
தன்னைத் தானே புசிக்கத் தொடங்குகிறது
நம் இருவருக்கும் இடையேயான
மௌனம்...

Wednesday, March 7, 2012

கைம்பெண்....
இது உன் பிரிவுக்குப் பின் வந்த
என் தூய சோகம்
என் வாழ்நாள் முழுமைக்குமான
நித்ய விரதம்...

இதை மென் வண்ண உடை உடுத்தி
மையெழுதா கண் வழியே
தூய சந்தனப் பொட்டிடையே
சப்தமிடா கொலுசிடையே
தளரக் கட்டிய சடை வழியே
நம் தாம்பத்தியத்தின் மோனச் சின்னமாய்
வெளிபடுத்துகிறேன்...

கைம்பெண் பொட்டிடுதல்,
பூ வைத்தல் அலங்கரித்தல்
காலத்தின் கலாச்சார மாற்றம்...

மறுக்கவில்லை
மறுதலிக்கவுமில்லை...

இப் புரிதலும் பிரிதலும்
உறவும் இத் துறவும்
நமக்கான அந்தரங்கம்...

இதை மடமை என்போரும்
பேதமை என்போரும்
பழமை எனப் பழிப்போரும்
பழித்துவிட்டுப் போகட்டும்...

இது உனைச் சேர
நான் செய்யும் தவம்
உனக்கு மட்டும் புரிந்தால் போதும்...

Thursday, March 1, 2012

மயக்கும் ஒலியாக.....அனிச்சையாகவே
உன் செயல்கள் யாவையும்
எதிர்ப்பின்றி ஏற்கின்றேன்..

உன் கொஞ்சலும் கெஞ்சலும்
வசவுகளும் வாஞ்சைகளும்
அதட்டலும் அரவணைப்பும்...

நீ பேசும் அனைத்துமே
வாத்தியத்தின் நாதம் போல்
சொற்களை உதிர்த்துவிட்ட
மயக்கும் ஒலியாக என்னைச்
சேர்கின்றன...

உயிரற்ற குரல்
சொற்களைத் தேடுவது போல
உன் முன் இருக்கையில்
பேச்சு மறந்து தவித்துப் போகிறேன்...

மனிதத் தன்மையின்
அழகையெல்லாம் சுமந்து
விரிகிறது உன் உதட்டுப் புன்னகை...

என் ஆத்மாவின் ஆனந்தம் நீ
நோய்க்கு மருந்தாக வந்த நீயே
இன்று நோயாகி
என்னை வாட்டுகின்றாய்...

உன்னால் ஏற்பட்ட மனதின்
இரைச்சல் சப்தம் கூட
இப்போது என் நிசப்தத்தின்
அங்கமாகவிட்டது...

நீ இளைப்பாற அல்லவோ
பொத்தி வைத்துள்ளேன்
என் இதயத்தின் கதகதப்பை
வெறும் உடற்சூட்டில் நம் காதல்
பொசுங்குவதோ?...