Showing posts with label காதல் கவிதைகள்.. Show all posts
Showing posts with label காதல் கவிதைகள்.. Show all posts

Wednesday, January 25, 2017

ஆதித் திமிரின் பைத்திய கணங்கள்..

காத்திருப்பின் கரம் பற்றியபடி
நெடிய பயணம்
மேல் செல்ல
பாதையில்லை
திரும்புதலுக்கான சாத்தியங்களும் 
இல்லை

பிரார்த்தனைகளை முனுமுனுப்பாக
முன் வைக்கிறேன்
விரல்களை கோர்த்தும் மடக்கியும்
மற்றுமொரு திரௌபதை என
கைகளை மேல் தூக்கியும்

இருண்ட கண்களின் காட்சி 
பிறழ்கையில்
ஒளி குறைந்த வெளிச்சத்தில் 
என் கை தொட்டுச் செல்கிறாய் நீ

பிடித்தங்கள் அற்ற போதும்
பிடிமானம் தேடியபடி
இறுகுகின்றன என் விரல்கள்

விடுபட்ட கைகளில்
உன் வியர்வையின் பிசுபிசுப்பு

ஆயுள் ரேகை அழியும்வரை
ழுந்தத் தேய்க்கிறேன்
கைவிடப்பட்டதின் பெருந்துயர் என
வீழ்கிறது என் விருட்சம்..


Wednesday, November 9, 2016

கவனம்...

உன் வார்த்தைகள் என்ன
திருவிழாக்கூட்டமா?
பேசிக்கொண்டிருக்கும் போதே
தொலைகிறேன்!..
ஆனால்
நான் தொலையக் கூடாது
என்பதில் நீ மிகக் கவனமாகவே
இருக்கிறாய்
அளந்தே பேசுவதால்..

Wednesday, July 20, 2016

பிச்சையல்ல பிரியங்கள் …

காரணங்கள் எதுவாகவோ
இருந்துவிட்டுப் போகட்டும்

அவகாசம் எதுவுமற்ற
கைவிடப்பட்ட பொழுதொன்றில்
உன் மீதான நம்பிக்கையை
தேர்ந்த கறிக்காரன் போல்
ஒரே வெட்டில் நீ
அறுத்தெறிந்த போது
வன்மத்தின் சாயல்களைக் கொண்டிருந்ததன
உன் நேசங்கள்

அலட்சியங்கள் துளைத்த
என் முதுகை
உன் புறக்கனிப்பின் சுவற்றில்
சாய்க்கிறேன்
ஊடறுத்துச் சென்று ருசி பார்க்கிறது
இரத்தவாடை நிரம்பிய
என் ஆதிக் காதலின் இரைஞ்சுதல்களை

என் பிரியத்தை பிய்த்தெடுக்கும்
உரிமையை யார் தந்தது உனக்கு?
சொற்கள் எறிந்து தீர்ந்தாகிவிட்டதென்றா
மௌனத்தை எறிகிறாய்?

சூல் கொண்ட வெட்டுக்கிளியின்
அடி இறகை விலக்கி
உன் பல் குத்தும் குச்சியால்
முட்டைகளை நிரடுவது போலவே
நம் நேசத்தையும் நிரடுகிறாய்
பிச்சையென்று நினைத்துவிட்டாயோ
பிரியங்களை!!?..

பிடிமானங்களைத் தகர்த்தபின்
துக்க வீட்டில் சிதறிக் கிடக்கும்
பூக்களின் வாசனையைப் பற்றி
எதற்கினி ஆராய்ச்சி?

Sunday, June 26, 2016

துரோகத்தின் முதல் கத்தி..

இதழ் முத்தம் காயும் முன்னே
நீ பிடி தளர்த்தி
தள்ளிச் சென்ற
குருதி ஒழுகிய
என் அடி வயிற்றுக்
குறுங்கத்தியின் பிடியை
இறுகப் பற்றியபடி
நினைவு தப்பினேன்
கண்ணில் உறைந்த காதலோடும்
உன் வெள்ளைச் சட்டையில்
அப்பிக் கிடக்கும்
சிவப்புக் கறையை
எதைக் கொண்டு நீக்குவாயோ
என்ற கவலையோடும்…

Sunday, March 6, 2016

கூடடையும் நினைவுகள்...

எத்துனை தூரத்தில்
கொண்டு விட்டாலும்
திரும்பி விடும்
பூனைக் குட்டியாய்
புதிய வண்ணங்களை
அப்பிக் கொண்டு
கூடடையும்
உன் நினைவுகள்..


Saturday, February 27, 2016

காதல் பாடம்..

சந்திக்கும் முதல் 
நொடியிலேயே
கண்களை 
விழுங்கி விட்டால்
பிறகெப்படி உனை படிப்பது 
என்கிறாய்
ம்ம்....
அடுத்த சந்திப்பின் போது
ப்ரெய்லி முறை கற்று வா
என் அசட்டுக் காதலனே...

Thursday, January 21, 2016

என் கேள்விகளும் உன் பதில்களும்....

உன்னிடம் கேள்விகள்
கேட்கத் தெரிந்தளவு
பதில்களைப் பெறத் தெரியாது எனக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட எனது
தொடர் கேள்விகளில்
எனக்குத் தேவையானதை
நயமாகத் தவிர்த்துவிட்டு
உனக்குச் சாதகமான கேள்விகளை மட்டுமே
தேர்ந்தெடுத்து விடுகிறாய்
எப்போதும்….


Saturday, January 16, 2016

பிரியங்கள்...

ஏற்றி வைத்த மெழுகின்
வெளியில்
இறங்கியபோதே
உருகி
வழியத் தொடங்கியிருந்தது
நம் பிரியங்கள்...

Sunday, November 22, 2015

நேச மழை...

கொட்டித் தீர்க்கிறது
இடைவிடாது
சரம் சரமாகப் பெய்கிறது
முற்றாக மூழ்கடிக்கிறது
வெயிலோடு சற்றே தூரி
வானவில்லை அழைக்கிறது
உன் நேசம் போல்தான்
இம் மழையும்....

Friday, October 30, 2015

அழைப்பு….

மழையில்லாத ஒரு
குளிர்கால மாலையில்
நீண்ட பயணத்தில்
கிடைத்த ஜன்னலோர 
இருக்கையாய்
உனதிந்த அழைப்பு….


காதல்ராட்சசன்...

ஒரு முழப் பூவுக்கு
முழு நீள முத்தம்
கேட்கும்
ராட்சசன் நீ...

வருத்தம்...

ஒவ்வொரு முறை நீ
சுகவீனப்படும் பொழுதும்
சொல்லமுடியாத
வார்த்தைகள்
தொண்டையில் சிக்கிய
விக்கலாய்
தவித்துப் போகின்றன
ஆற்றுதலின்றி…


Thursday, October 29, 2015

நினைவுப் பூக்கள்....

கடந்த வழியெங்கும்
நினைவுகள்
விதைத்து வந்தேன்
நீ முளைத்துப் பூத்திருந்தாய்...


Wednesday, September 9, 2015

பரிசு...

எப்போதுமே உனை நினைக்கும் நேரம்
துளிர்க்கும் ஈரம்
நனைக்கும்
என் இமைகளின் ஓரம்

இன்றென்னவோ
மேலிருந்து 
பள்ளம் நோக்கி 
வீழும் அருவியாய் 
கண்களிலிருந்து  இறங்கி
நெஞ்சுக் கூட்டில் ததும்பி
நாபிச் சுழி நிரப்பிய 
விழி நீரை 
வீழும் நீரை 
தடுக்க முயலவில்லை 

சிறு துளியோ பெரு மழையோ
என் கண்ணீர் என்றுமே உனை
தூற்றாது பதில் கேட்காது

எனக்கு உன் மீது 
புகார்கள் இல்லை
கோபங்கள் இல்லை 
வருத்தங்கள் இல்லை

இவை எல்லாம் எப்போதோ
எனைக் கடக்க வைத்துவிட்டாய்

நீ கொடுக்கும் பிறந்த நாள்
பரிசாக நான் இறக்கும் நாள் வரை
ஏந்திச் செல்வேன்
பொழுது போக்காக
நீ மீன் பிடிக்க ஆரம்பித்திருக்கும்

என் கண்ணீர் துளிகளை..

Monday, September 7, 2015

சொல் அடுக்கும் கவிதைக்காரி...

கண்ணீரின் தடம் எங்கும் பாசியென
நீ படிந்திருக்கிறாய்
உன் நினைவுகளில் நிரம்பித் ததும்பும்
என் மனதில் வெற்றிடமே இருப்பதில்லை
பிரிவின் ஏக்கம் இளைக்க வைக்கவில்லை
அசாதாரணமாக எடை கூடியிருக்கிறேன்
சதா உன் நினைவுகளைத் தின்று
உடைந்துவிடும் சாத்தியக் கூறுகள்
அதிகமிருக்கும் நம்பிக்கையின்
அந் நாள் நெருங்குவதை
நாட்காட்டியில் வெறிக்கிறேன்
என் பாடல்களில் இப்போதெல்லாம்
துள்ளல்கள் இருப்பதில்லை
வற்றிப் போன உன் காதலைப் போல
நீ புறக்கனித்த சொற்களை கவிதையாக்கி
வைக்கிறேன்
பிரிதொரு நாள் தேவைப் படும்
நீ குத்திக் காண்பிக்கவேணும்
நான் சொல் அடுக்கும் கவிதைக்காரி
நீ சொல்லெறியும் ஜென்மம்...

Friday, September 4, 2015

விதியால் தீர்மாணிக்கப்படும்…

அன்றைக்கான
அந்தச் சம்பவத்துக்குப் பின்
எனக்குத் தெரிந்துவிட்டது
இனி நீ எனக்கு
அப்பாவாக அம்மாவாக
காதலனாக கணவனாக
தோழனாக துரோகியாக
தேவனாக சாத்தானாக
கடவுளாக மிருகமாக
இன்ன பிற எது எதுவாகவோ
இருக்கப் போகிறாய் என
ஆனால் எது எதுவாக
எப்போதெல்லாம்
என்பது நமது

விதியால் தீர்மாணிக்கப்படும்…

Thursday, August 27, 2015

நகை முரண்...

இறந்த பின்பும்
உனக்காக
துடித்திருப்பேன்
என்று சொல்பவர்களால்
மட்டுமே
நம்மை
உயிருடன் சாகடிக்கவும்
முடிகிறது.

Tuesday, August 25, 2015

எடை குறைவு....

கடைசியாக உனைப் பார்த்தது
உனதறையில் நீ
நடைபயிற்சி இயந்திரத்துடன்
மூச்சு வாங்கப் போராடிக்
கொண்டிருந்த போதுதான்
நான் வந்து போன சுவடுகளை
பிரிதொரு நாள்
நீ யார் மூலமேனும்
அறிந்திருக்கக் கூடும்
ஆனால் அறிந்திருக்க
வாய்ப்பில்லை
சற்றே கூடுதலாக
குறைந்துவிட்டிருக்கும்
என் உடலின் எடையை..

Monday, August 24, 2015

வசந்தகாலம்.... வசம் இழந்த காலம்...

விடியலில் நினைவுக்கு
வந்தே தொலையாத

தொலைந்திடும்
நள்ளிரவின் கனவு போல
மீண்டு வராமலேயே

காட்டுத்தீயில் அகப்பட்ட
காய்ந்த சருகுகளாய்
சட சடவென கருகிவிட்டது
நம் வசந்தகாலம்
நாம் வசம் இழந்த காலம்...

ஒரு வார்த்தையில் தொடங்கி
சில வார்த்தைகளில் தொடர்ந்து
இப்போது வார்த்தைகள்
தொலைத்த ஊமையின் வெறுமையுடன்
வெளியேறிவிட்டாய்...

எப்போதும் வாதங்களுடனும்
வார்த்தைகளுடனும்
போர் புரிந்து கொண்டிருக்கும் 
நீ
ஒருபோதும் 
அறியப் போவதே இல்லை
என் காதலையும்
இக் கவிதையையும்…

Saturday, August 22, 2015

நிறம் உதிர்த்த.....

பிடித்திருந்த கைகளை
உதறிக் கொண்டாய்
பறத்தலின் திசை
தெறியாது நகர்கிறேன்
என் நிறங்களை
உன் உள்ளங்கைளில்
உதிர்த்துவிட்டு....