Saturday, October 31, 2015

மழைத் துளிகள்...

தார்ச்சாலையில்
விழுந்து தெறிக்கும்
மழைத்துளிகள்
தரையில் முளைத்த
நட்சத்திரங்கள்...

Friday, October 30, 2015

இன்றைய ஞாயிறுகள்...

ஏனைய நாட்களைப் போலவே
இன்றைய ஞாயிறு பொழுதும்
சத்தம் இல்லாமல்
சந்தடி இல்லாமல்
கூச்சல் இல்லாமல் குழப்பம் இல்லாமல்
கூடிப் பேசாமல் கும்மாளம் இல்லாமல்
அவரவர்  லேப் டாப்பிலும்
வாட்ஸப்பிலும் ஃபேஸ் புக்கிலும்
யூ ட்யூபிலும்  இனிதே
கழிந்தது

அழைப்பு….

மழையில்லாத ஒரு
குளிர்கால மாலையில்
நீண்ட பயணத்தில்
கிடைத்த ஜன்னலோர 
இருக்கையாய்
உனதிந்த அழைப்பு….


காதல்ராட்சசன்...

ஒரு முழப் பூவுக்கு
முழு நீள முத்தம்
கேட்கும்
ராட்சசன் நீ...

வருத்தம்...

ஒவ்வொரு முறை நீ
சுகவீனப்படும் பொழுதும்
சொல்லமுடியாத
வார்த்தைகள்
தொண்டையில் சிக்கிய
விக்கலாய்
தவித்துப் போகின்றன
ஆற்றுதலின்றி…


Thursday, October 29, 2015

நினைவுப் பூக்கள்....

கடந்த வழியெங்கும்
நினைவுகள்
விதைத்து வந்தேன்
நீ முளைத்துப் பூத்திருந்தாய்...


Wednesday, October 28, 2015

மீண்டும் ஒரு வாய்ப்பு - மல்லிகை மகள் டிசம்பர் 2014 இதழில்

2014 டிசம்பர் மாதத்தில் மீண்டும் எனது கவிதைகள் மல்லிகை மகள் இதழில் வெளியானது. நம் வரிகளை நாம் அச்சில் பார்ப்பதே ஒரு தனி சுகம் தான். 
நன்றி திரு. சிவஞானம் சார். 




மறக்க முடியாத மே 2014.


மே மாதம் 2014 மறக்க முடியாத மகிழ்வான தருணங்களைக் கொடுத்தது. இம்  மாதத்தில் தான் எனது கவிதை முதன் முதலாகபுத்தகத்தில் அச்சேறியது. மல்லிகை மகள் மாத இதழில். அச்சேற்றிய மல்லிகை மகள்  இதழ் ஆசிரியர்
 திரு. சிவஞானம் சாருக்கு எனது மகிழ்வான நன்றிகள்.





இதே மாதத்தில் மீண்டுமொரு ஆச்சரியம். முன்னனி வார இதழான குமுதத்திலும்(28.05.2014 தேதியிட்ட) குழந்தைகளைப் பற்றி எழுதிய கவிதைகள் பிரசுரமாகின. 
பிரசுரித்த குமுதம் இதழ் ஆசிரியர் திரு. ப்ரியாகல்யாணராமன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.





Monday, October 26, 2015

பிரசுரமான கவிதை - தினமணி -”மது ஒழிப்பு”

தினமணி மின் நாளிதழில் “ மது ஒழிப்பு” என்ற தலைப்பின் கீழ் எனது கவிதை.
பிரசுரித்தமைக்கு நன்றி தினமணி மற்றும் திருமதி. உமா சக்தி.

மது ஒழிப்பு

மது மது மது
அன்பைக் கெடுக்குமது
மரியாதைக் குலைக்குமது
குடும்பம் தவிர்க்குமது
உயர்வைக் தடுக்குமது
மனதைக் கலைக்குமது
பண்பைக் தொலைக்குமது

குளிர்ந்த நிலையில் கசந்த திரவம்
உடனே செய்யுமே உபத்திரவம்
மதுவில் தொடங்கி
மாதில் தொடர்ந்து
வாழ்வைக் குடித்து
மரணத்தில் முடிக்கும்
மதுவுக்கு
விலக்கும் வேண்டாம்
ஒழிப்பும் வேண்டாம்
முற்றிலும் செய்வோம் மது அழிப்பு
அரசு செய்யட்டும்
அமைச்சர் செய்யட்டும்
ஆண்டி செய்யட்டும்
குப்பம் சுப்பன் பெருமாள் பேராண்டி
யாரோ தொடங்கட்டும்
என்ற எண்ணம் தவிர்த்து
தனிமதன் தன் ஒழுக்கத்திலிருந்து
துவங்கட்டும்

மது ஒழிப்பும் மது அழிப்பும்…

Sunday, October 4, 2015

ஜன்னல் இதழில் (01 - 14.10.2015)

இம் மாதம் 01.10.2015 - 14.102015 தேதியிட்ட ஜன்னல் இதழில் எனது கவிதைகள் பிரசுரமாகியுள்ளதை நட்புகளுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
நன்றி ஜன்னல்.