Saturday, December 20, 2014

உன் பிரியங்கள்...

அலைபேசியை வைத்த பின்னும்
என் கன்னக் குழியில்
தேங்கிச் சிரிக்கின்றன
உன் பிரியங்கள்...

Monday, December 15, 2014

உனக்கும் எனக்கும் நடுவே....

உனக்கும் எனக்கும் நடுவே
நிறைய கொஞ்சல்கள்
இருந்தன
முரண்பட்ட கெஞ்சல்கள்
இருந்தன
கேலிகள் இருந்தன

நிறைய கவிதைகள்
இருந்தன
கூடவே சின்ன சின்னதாய்
சில பொய்களும்
மத்தாப்புச் சிதறலாய்
சில சிரிப்புகளும்...

இப்போது
உனக்கும் எனக்கும் நடுவே
பொதுவான மௌனம்
காற்றின் இடைவெளியை
நிரப்பியபடி ஊஞ்சலாடிக்
கொண்டிருக்கிறது...

உன் பக்கம் வருகையில்
என் முகத்தைப் பார்த்தபடியும்
என் பக்கம் திரும்புகையில்
உன் முகத்தைப் பார்த்தபடியும்....

Saturday, December 13, 2014

உன் வாசம்....

நீ வந்து போன
என் ரோஜாத் தோட்டத்தின்
மூலை எங்கும்
நித்யமல்லி வாசம்

Thursday, November 27, 2014

சில கவிதைகள்......

நீ
நான்
சில கவிதைகள்
சொல்வதற்கும்
சொல்லும் போதே மறப்பதற்கும்...

Thursday, November 13, 2014

இம்மழை.....

சிறு தூரல்களில்
உன் புன்னகையையும்
பூஞ் சாரல்களில்
உனதன்பையும்
தொடர் பொழிவுகளில்
உன் பேச்சையும்
அடித்துப் பெய்கையில்
உன் கோபத்தையும்
எப்போதும் இம்மழை
உனை
நினைவூட்டுவதாகவே இருந்துவிடுகிறது..

நீ இல்லை....


அடித்துப் பெய்கிறதே?!...
இந்த மழைக்கான
மேகம்
நீ இல்லை....

Saturday, September 13, 2014

எனக்காகவே.....


எந்நேரத்திலும் என் கை
நழுவி விடும்
விதைதான் நீ
எனக்குத் தெரியும்
எங்கு விழுந்தாலும்
எனக்காகவே
பூப்பாய் என்று....

Sunday, September 7, 2014

நீ....

இரவுகளைப் போலத்தான் நீயும்
அலாதியான  ரகசியங்களையும்
விடுபடாத புதிர்களையும்
பொத்தி வைத்து சுவாரசியம் கூட்டுவதில் 

Thursday, August 28, 2014

கதை கதையாம்...


எல்லா அம்மாக்களையும் போலவே
நானும் என் குழந்தைகளுக்கு
கதை சொல்ல ஆசைப்படுகிறேன்
ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம் ..................
.........................................
இதற்கு மேல் ஒரு போதும் தொடர்ந்ததில்லை..

இதைப்போலவே நீயும்
உன் குழந்தைகளுக்கு
தேவதைக் கதைகள் சொல்லி இருக்கலாம்
இதழோரத்துப்  புன்னகையோடும்
இமைகள் நனைக்கும் நீர்த்துளியோடும்....

Tuesday, July 1, 2014

மெட்டமைக்கிறாய்...

அடர் மழைக்குப் பின்னான
தூவானப் பொழுதொன்றில்
ஒற்றைக் கோட்டுப்பாதையில்
துணை தேடிய பறவை ஒன்றின்
அத்துவானக் குரலில்
வழிந்தொழுகும் விரகத்தை
கைகளில் ஏந்தியபடி
நனைந்த புல் நுனிகள்
பாதச்சூட்டை உணர்ந்துருக
இதழ் வெடிப்பில் கசிகின்ற
என் வரிகளுக்கு
கைக்கெட்டா தூரத்தில்
மெட்டமைக்கிறாய் நீ

Monday, June 30, 2014

முதல் துளி...

முதல் துளியில் தான்
ஆரம்பிக்கிறது
ஊழிப் பெருமழையும்....

Thursday, May 15, 2014

நிலா நிலா ஓடிவா...

பணத்தைத் தட்டிவிட்டு
பலூனைப் பிடித்துக் கொள்ளும்
ஒரே அற்புதம்
குழந்தை...

கசந்தது வாய் கடவுளுக்கு
குழந்தையின் நாவில்
சொட்டு மருந்து..

நிலா நிலா ஓடிவா...

தனக்கு ஊட்டிய சாதத்தை
அம்மாவுக்குத் தெரியாமல்
தன் பொம்மைக்கும் ஊட்டியது
குழந்தை..

குழந்தை தன் பொம்மைக்கு
ஊட்டும் போது மட்டும்
தரை இறங்குகிறாள்
நிலாப் பெண்.. 

நிலா நிலா ஓடிவா...


புதிர்களும் சுவாரசியங்களும்
நிறைந்த அழகுப் புதினம்
குழந்தை...

குழந்தையின் பொய் கலக்காத
அழுகையும் சிரிப்பும்
கடவுளே கேட்கும் வரம்...

பிராகரம் சுற்றியது குழந்தை
வரம் பெற்றன 
தெய்வங்கள்...

நிலா நிலா ஓடிவா...


தூளியில் குழந்தையின் சினுங்கல்
நெளிகிறது நிலா
முற்றத்து நீரில்...


நேற்றைய நினைவில்
குழந்தை காட்டியது அம்மாவுக்கு
தோசைக்கல்லில்
நிலா..

தேநீர் கோப்பையில்
இன்னுமொரு சொட்டுத் தேன்
குழந்தையின் தொடுகை..

Wednesday, May 14, 2014

குறுங்கவிதைக‌ள்...,


பட்டாம்பூச்சிகள் கொள்ளை அழகுதான்
ஆனாலும்
நீ பார்க்கையில்
என் இமை துடித்திடும்
அழகுக்கு நிகராக இல்லை!!!...

***************

நீயே ஒப்புக்கொள்ளும்
உன்னின் ஆக்கச் சிறந்த
அழகான பொய்
நான் தான்...

****************
காத்திருந்த வேளைதனில்
வேர்த்த்ருந்த என் புருவங்களை
வருடிச் சென்றது
உன் குளிர்ந்த பார்வை..

***************

உன்னைச் சொல்லாத
உன்னிடம் சொல்லாத
எதுவும் கவிதை இல்லை
வெறும் சொற்களே...
Tuesday, May 6, 2014

தனிமை...

பேரிரிச்சலில்
நிரம்பி வழிகிறது
ஏதுமற்ற இத் தனிமை...

Wednesday, April 23, 2014

என் வாசலில் நீ...என் வாசலில்
உரைந்துவிட்டிருந்தது
ஒரு பனித்துளி
முந்தைய இரவின் இனிமைகளோடு...

நீதானே!...


யார் சொன்னது?
ஆண்கள் கருவை சுமக்க
முடியாது என்று..
என் கவிதைகளுக்கான
கருவை சுமப்பதே நீதானே!....

Monday, April 21, 2014

உன் வரவு....

கொண்டாடுவதற்கு
எதுவும் இல்லாத நாளாகத் தான்
அன்று இருந்தது
நீ வருவதற்கு முன்பு வரை...

Friday, April 18, 2014

ஈரம்...அருந்தி முடித்த தேநீர்
கோப்பையில்
சொட்டிக் கொண்டிருந்தது
உன் நினைவு
மறுபடியும் நனைகின்றன
என் இதழ்கள்...

ஊஞ்சல்...உனக்கு எழுதியதைப் படிக்கையிலும்
நீ எழுதியதைப் படிக்கையிலும்
காலால் உந்தித் தள்ளும்
என் கொலுசின் சினுங்கலையும்
உதட்டின் சுழிப்பையும்
காற்றின் விசையையும்
ஒரு சேர உன் திசை நோக்கி
எடுத்துச் செல்லும்
என் வீட்டு ஊஞ்சல்..

Monday, April 7, 2014

எப்படி..?!!!..
ஓடும் நீராகத்தானே இருந்தேன்
மலராய் எப்படிப் பூத்தாய்?!

கடும் பாறையாகத்தானே இருந்தேன்
கொடியாய் எப்படி படர்ந்தாய்?!

சுடும் நெருப்பாகத்தானே இருந்தேன்
நீராய் எப்படி அணைத்தாய்?!

நிலவு மட்டும் சுமந்த வானமாக இருந்தேன்
நட்சத்திரங்களாகி நிரம்பி வழிகிறாய்

மறக்கப்பட வேண்டும் என்பதாலேயே
மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறாய்...

Sunday, January 26, 2014

திரும்ப....

எனதானெதென்று
ப்ரத்தியேகமானதொன்று
பத்திரமாய்த்தான் வைத்திருந்தேன்..

மிகப் ப்ரயத்தனத்துடன்
கெஞ்சி கொஞ்சியே
எடுத்தாண்டுவிட்டாய்..
திருப்புதலுக்கானவோ
திரும்புதலுக்கானவோ
எந்த முகாந்திரமும் இன்றி...

கலங்கித் தவிக்கிறேன்
ஊமையாய் சுட்டெரிக்கும்
கடுங்கோடை வெயிலாயினும்
உரத்துப் பெய்யும் கன மழையாயினும்
உன் நினைவைத் தடுக்க முடியவில்லை

தயை கூர்ந்து
எடுத்துச் சென்ற எனதான
க(ற்)ருப்புக் குடையை
திரும்பக் கொடுத்துவிடேன்...

(நி)சப்தம்...

யாருமற்ற என் அறையில்
இரவின் தனிமையுடன்
இமைகளை இணைத்த
நள்ளிரவு நேரம்...

எங்கிருந்தோ
க்ரக்.. க்ரக்.. க்ரக்..
மெல்லிய க்ரீச்சொலி
கேட்க ஆரம்பித்தது...

திடுக்கென இமை பிரித்து
பயப்பார்வை படரவிட்டு
விளக்கொளியை பரப்ப
சப்தம் அடங்கியது நிசப்தமாய்...

இருளணைத்து
இமைகள் இணை
காதுக்குள் மீண்டும் 
அதே க்ரக் க்ரக் க்ரக்...

ஒன்றுக்கு இரண்டாய்
விளக்குகளை எரியவிட்டு
மின் விசிறி நிறுத்தி
மிக உன்னிப்பாய்
சுவர் ஓரம்
நாட்காட்டி பின்புறம்
கட்டிலின் அடியில்
கொடித்துணியில் பக்கத்தில்
என நாற்புறமும் நோட்டம் விட்டு

சத்தம் அடக்கிய அச் சத்தத்தை
தேடித் தேடி அலுத்து
ஓய்ந்துபோய் அமர்ந்த நேரம்...

மெள்ளமாய்
மிக மெல்லமாய் க்ரீச்சிட்டு
தலை காட்டியது
பூச்சியும் அல்லாத
சிறு பறவையிலும் சேராத 
அச்சிறிய உயிரினம்

ச்சே!!!
உனக்குத்தானா இத்தனை பயந்தேன்
என நானும்
அதே ஏளனப் பார்வையுடன் அதுவும்

விடியல்
விளிம்பைத் தொடும் நேரம்
உறங்கச் சென்றோம்
கட்டில் மீது நானும்
கட்டில் அடியில் அதுவும்...