Saturday, June 25, 2011

களங்கமில்லா....வீட்டில் வரன் பார்க்கையில்
வண்ணக் கனவுகள்
கண்களில் ஆயிரம்...

கண்வனாக ராமனை ரசித்தேன்
தீக்குளித்த சீதை
சிந்தையில் சிரித்தாள்...

கண்ணனை கனப் பொழுது
காதலித்தேன்
காதலிகள் தன் கதை சொல்லிக்
கரைந்தனர்...

முருகனை முழு மனதால்
மூடி வைத்தேன்
இரு மணைவிகள்
மாலையுடன் மறுத்தனர்....

நளனுக்காக நானமுடன்
நடை பயின்றேன்
நடுக்காட்டில் தமயந்தி
தடை போட்டாள்...

கனவுகள் கலைந்திட
நான் மட்டும்
கண்ணகியாய், நளாயினியாய்,
சீதையாய்
இன்னும் கன்னியாய்
காத்திருக்கிறேன்
களங்கமில்லாக் கணவனுக்காக..

Friday, June 24, 2011

நட்பு....
அம்மா என்ற சொல்லில்
அன்பை உணர்ந்தேன்!

அப்பா என்ற சொல்லில்
கடமை உணர்ந்தேன்!

அக்கா என்ற சொல்லில்
செல்லம் உணர்ந்தேன்!

அண்ணா என்ற சொல்லில்
அக்கறை உணர்ந்தேன்!

தம்பி என்ற சொல்லில்
குறும்பை உணர்ந்தேன்!

தங்கை என்ற சொல்லில்
நேசம் உணர்ந்தேன்!

ஆசான் என்ற சொல்லில்
கண்டிப்பை உணர்ந்தேன்!

கணவன் என்ற சொல்லில்
காதல் உணர்ந்தேன்!

மழலை என்ற சொல்லில்
பாசம் உணர்ந்தேன்!

உன் நட்பு என்ற
ஒற்றைச் சொல்லில்

அத்தனையும் முழுதாய்
உணர்ந்தேன்...

Thursday, June 23, 2011

நிலா இரவின்...
அலைகடலில் மிதக்கும்
வெற்றுப் படகாய்
தத்தளிக்கிறது மனம்
நீ இல்லாத நினைவுகள்
சுமந்து...

நான் புதிதாய் எழுதும்
கவிதை முழுவதும்
நிரம்பியிருக்கிறது
நம் பழைய காதல்
வாசனை...

சூரியனின் ஆதார ஒளியில்
மொட்டு விரிக்கும்
நிலாஇரவின் அல்லி போல
எனது எல்லா வரிகளுக்கும்
மறைபொருள் ஆகிவிடுகிறாய் நீ...

உடைந்த என்
கண்ணாடி வளையல்களில்
இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது
உன் காதல் துளி...

பாலைவனப் பறவையாகிறேன்
என் தாகங்கள் தீர உன்
காதலைக் குடித்துக் கொண்டு....

Monday, June 20, 2011

உள்ளம் உரசும்....என் நாட்காட்டியில் தினங்கள் எல்லாம்
உன் பெயர் கொண்டே இருக்கிறது
மாதங்கள் எல்லாம்
உனைச் சுமந்தே கழிகிறது...

பல நேரங்களில்
தவிர்க்கமுடியாத மௌனத்தின்
நிரம்புதலாக நீயே இருக்கிறாய்....

இன்னமும் என் அலைபேசியில்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
நீ சொன்ன பொய்களின்
இனிமையான மிச்சம்...

உன் நினைவுகள் புண‌ர்ந்த
என் மொழிகள் யாவும்
காதல் கர்பம் தாங்கி
கவிதைகளை பிரசவிக்கின்றன...

சற்றே நாம் விதிகளை மாற்றி
உடல் உரசும் காமம் தவிர்த்து
உள்ளம் உரசும் காதல் பழகலாம் வா...

Friday, June 17, 2011

விழைகிறேன்....ஆழ்கடல் அடைந்துவிட்ட
அலை நான்
மீண்டும் கரை மோத
விழைகிறேன்

பூவிலிருந்து பொழிந்துவிட்ட
வாசம் நான்
மீண்டும் பூ சேர
விழைகிறேன்

வானை விட்டு மண் சேர்ந்த
மழைத்துளி நான்
மீண்டும் மேகம் தொட
விழைகிறேன்

சூரியன் குடித்துவிட்ட
பனித்துளி நான்
மீண்டும் இலை
தழுவ விழைகிறேன்

கூட்டுக்குள் நிரம்பிவிட்ட
தேன் துளி நான்
மீண்டும் மலர்
நனைக்க விழைகிறேன்

தவறவிட்டு பின் தவிப்புடன்
தேட விழையும் நம்
காலங்கடந்த காதல் போல...

Tuesday, June 14, 2011

இரவல் வாழ்க்கை.....

என் இயல்பை மறந்த இரவல் வாழ்க்கை"

படித்தது போதும் கால் கட்டு போடுவோம்
தாத்தாவின் ஆலோசனை அரங்கத்தில்...

கவர்ண்மெண்ட் மாப்பிள்ளை விட
சாஃப்ட்வேர் இஞ்சினியர் தான் உசிதம்
அப்பாவின் ஆதிக்கத்தில்.....

உள்ளூர் வேண்டாம் வெளிநாடு பார்ப்போம்
அண்ணணின் அலட்டலில்...

அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வேண்டாம்
ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு போதுமே..
வங்கி கணக்கில் சில லட்சங்கள் போதும்
மாமனாரின் எளிமையில்?!.....

மடிசார் வேண்டாம் சோளி போட்டுக்கோ
நாத்தனாரின் பெருந்தன்மையில்....

டயட்டை கடைபிடி இல்லையேல்
பெருத்து விடுவாய் _ கையில் எடுத்த
பாதுஷாவை நாசுக்காய் பிடுங்கிய
மாமியாரின் கரிசனத்தில்...

முதலிரவில் மாத்திரை தந்து
இப்போது வேண்டாமே குழந்தைப் பேறு
சிட்டிஸன்ஷிப் கிடைக்கட்டும்
பிறகு பார்க்கலாம்
புதுக் கணவனின் புத்திசாலித் தனத்தில்...

இதில் எங்கே தொடங்கியது?.

"என் இயல்பை மறந்த இரவல் வாழ்க்கை"

Monday, June 13, 2011


இறந்த மருமகனின்
மனைவியாய்
தாய் வீட்டில் விதவை
மகள்...

Friday, June 10, 2011

எப்படிப் புரிய வைப்பேன்?....

பூக்களுக்கு என் மேல் பொறாமை
மழையில் நனைந்து
குளிரெடுக்கையில்
என் தலை சாயும்
உன் மார்பின் கத கதப்பு
தமக்கு கிடைக்கவில்லை என...பனித் துளிகளுக்கு
என் மேல் பொறாமை
பூ இதழில் விழுந்தாலும்
என் இதழ் ஒற்றும் உன் இதழின்
மென்மை இல்லையென....

நட்சத்திரங்களுக்கு
என் மேல் பொறாமை
உன் கரு நீல விழிகளில்
என்னுருவம் ஒளிர்வது போல
தான் ஓளிர்வதில்லை என...

நிழலுக்கு என் மேல் பொறாமை
உன் கூடவே வந்தாலும்
எனைப்போல உனை ஒட்டி
இருக்க முடிவதில்லையென...

தென்றலுக்கு என் மேல் பொறாமை
நமக்குள் நுழைந்து
உன் உடல் தழுவ
நான் இடைவெளி
கொடுப்பதில்லை என...

மழைக்கு என் மேல் பொறாமை
என் முத்தங்கள்
உனை நனைப்பது போல்
தான் நனைப்பதில்லையென...

பாவம்! அவைகளுக்கு
எப்படிப் புரிய வைப்பேன்

நீ என்னிலும் நான் உன்னிலும்
முழுவதுமாய் கரைந்துவிட்டதை....

Thursday, June 9, 2011

என்ன தவம் செய்தனை...


மயக்கத்தைத் தூண்டும்
சலனங்கள் தருகிறாய்...

ஜனனமும் மரணமும்
ஒரு சொல்லில் நிகழ்த்துகிறாய்...

ஊமையாய் இருந்த கண்களுக்கு
ஜாடைகள் பேச கற்றுத் தருகிறாய்...

சிவக்க மட்டுமே தெரிந்த கன்னங்களில்
வண்ணங்கள் குழைத்து
என் வெட்கத்துக்கும்
மெருகேற்றுகிறாய்...

தென்னங் கீற்றின் நடுவே சரியும்
நிலவின் நிழலைப் போல
சத்தமின்றி காதல் செய்கிறாய்....

விழிகள் தூக்கங்களைத்
தொலைத்த போதும்
உன் கனவுகளையே
சுமந்து போக வைக்கிறாய்...

சொற்களை உதிர்த்த
வாக்கியமாய்
நீ அற்ற பொழுதுகளில்
வெறுமையைக் கூட்டுகிறாய்...

நிழல் கூட விழமுடியாத
பேரொளியாய்
காதலை காதலாலேயே நிரப்புகிறாய்...

நித்தமும் நெகிழ்கின்றேன்
உனைப் பெற
என்ன தவம் செய்தனை...

Wednesday, June 8, 2011

மலர்ந்தும் விரியும் பூ....

உனைத் தீண்டாமல் எனைக் கடக்கும்
தென்றலும் கசப்பாய்த்தான் வீசுகிறது

திறந்த வெளியிலும் மூச்சு முட்டுகிறது
உன் நினைவுச் சுமையால்
நெஞ்சில் அழுத்தம்..

வயல் வெளியில் வைக்கோல் பொம்மை போல்
தனித்தே இருக்கிறேன்
சினேகமநற்று புன்னகையற்று...
வாழ்க்கை மிகவும் குரூரமானது
அது நாம் பேசிய நிமிடங்களை
கரைத்துவிட்டது
பிரிந்த நொடிகளை கல்லாக்கிவிட்டது

உதிர்ந்துவிட்ட உன் உறவை மறக்க
கல்லறைக்குள் வாழ்கின்றேன் நான்
ஓட்டில் சுருங்கிய ஆமை போல்
உடல் குறுகிப் போனாலும்
உள்ளம் மட்டும் உன் நினைவால்
குழைகிறது....மலர்ந்தும் விரியும் பூப்போல....

Friday, June 3, 2011

என் குழந்தை...

என் பழைய டயரிலிருந்து.

என் முதல் குழந்தை உருவானபோது ஒவ்வொரு நிலையிலும் தோன்றியதை எழுதி வைத்த வரிகள்.


தாய்மை: (முதல் மூன்று மாதங்களில்)

உயிரில் உயிர் எழுதும் உறவு
உயிரில் உயிர் உருகும் உணர்வு
உயிரால் உயிர் வடிக்கும் ஓவியம்
உயிர் கொண்டு உயிர் எழுதும் காவியம்கருவரைக் குழந்தை: (இரண்டாம் மூன்று மாதங்களில்)

ப்ரம்ம உளி கொண்டு மயன்
என் கருவரையில் தங்க நிலவை
செதுக்கத் தொடங்கிவிட்டான்
பிரசவம்: (கடைசி மூன்று மாதங்களில்)

வண்ண வண்ண இதழ்களை விரித்து
ஒரு மொட்டு மென்மையாய் மலரப் போகிறது
மேகத் திரைக்குள் மறைந்திருந்த தங்க நிலா
வானத்து அரங்கில் அரங்கேறப் போகிறது..


குழந்தை : (பிறந்த சில நாட்களில் எழுதியது)

வசந்தகாலம் வேனிற்காலம்
மழைக்காலம் குளிர்காலம்
இத்தனை பருவமாற்றங்களும் ஒரே நாளிலா!
அட! என் அருகில் என் குழந்தை....


Thursday, June 2, 2011

நீயும் நானும்.....


வாழ்க்கை பயணத்தில் தண்டவாளங்களாய்
நீயும் நானும்
எப்போதோ இணைகிறோம்
ரயிலின் பாதை மாற்றத்தில்

வாழ்க்கைப் பாதையில் பயணிகளாய் நாம்
பாதை ஒன்றாயினும்
திசைகள் வெவ்வேறாய்

வானத்தின் சூரியனாய் நீ சந்திரனாய் நான்
இருப்பிடம் ஒன்றென்றாலும்
இணைய முடியா துருவங்களாய்

மரத்தின் வேராய் நீ கனியாய் நான்
தொடர்பிருந்தும்
தொடமுடியா தூரத்தில்

அடிவானமாய் நீ கடல் முடிவாய் நான்
ஒன்றாய் தோன்றினாலும்
ஒட்டாத உயரத்தில்

இருந்தும்...
நாம் இருப்பது
இணைவோம் என்ற
நம்பிக்கையில்....