Monday, December 26, 2011

காயம் செய்யும் பூக்கள்....
நான் சிரமப்பட்டு வார்த்தைகளைச்
சேமித்து வாக்கியமாக்குகிறேன்
நீ மிகச் சிரத்தையாக முற்றுப் புள்ளி
வைத்துவிடுகிறாய்..

உன் காதல் எனை
மணிமேகலையாக்கிவிட்டது
என் இதயப் பாத்திரத்திலிருந்து
உன் நினைவுகளை
எத்தனைச் செலவழித்தாலும் தீர்வதேயில்லை

பூக்களால் காயப்பட்டுவிட்டேன்
முட்களையும் ஏன் எடுத்து வருகிறாய்?..
மௌனத்தைப் போர்த்திக் கொண்டு
நீ காலத்தை நிர்வாணமாக்குகிறாய்

துயரத்தின் பசி பொறுக்க மாட்டாமல்
நம் காதலைத் தின்றுவிட்டேன்
செரிக்கவும் இல்லை உமிழவும் முடியவில்லை
இதயத்தில் கல்லாக சமைந்துவிட்டது...

Saturday, December 24, 2011

நிறமிழந்த பாடல்கள்....
ஒருவகையில் நீ எனது தியானம்
உறவற்று இருப்பதும்
விருப்பு வெறுப்பற்று
உனை உணர்வதும்
பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறாய்
உனை அறியாமலேயே
பயின்று கொண்டிருக்கிறேன் நானும்
நீ அறியாமலேயே..

எனை உற்றதும் நீ உதறுவதும் நீ
உண்மை எதுவென தெளிவதும் நீ

உலகத்துக்குச் பொய் சொல்வது
தவிர்க்கமுடியாதது
உனக்கு நீயே சொல்லிக் கொள்ள
முடியுமோ?!..

நான் அறிவேன் என்னுடைய
ஒவ்வொரு கவிதையையும் படிப்பதற்கு
உன் ஒரு துளிக் கண்ணீரும்
எட்டிப் பார்க்கும் என்பதை

ஊமையின் வார்த்தைகளைப் பூசி
வரும் என் பாடல்கள்
உன் கண்ணீரில் நிறமிழந்து விடுகின்றன

Friday, December 23, 2011

உனக்கான ஒரு கவிதையோடு....

உன் மௌனத்தை தட்டி தட்டியே
களைத்துவிடுகிறது
என் வார்த்தைகள்...

உனது இருப்பின் இடம்
வழி தெரியாத பயணத்தின்
முடிவிலேயே இருக்கிறது...

என் கனவுக் கூட்டை கட்ட
உன் நினைவு இறகுகளை
சேமிக்கிறேன்...

நான் இமைகளை மூடுவது
கனவிலேனும் நம் சந்திப்பு
நிகழட்டும் என்பதால்
வழி தவறியேனும்
மறக்காமல் வந்துவிடு..

உன் விதி ரேகையின்
தேய்ந்த கோடாகவே
இருக்கிறேன் நான்...

என் தலை எழுத்தில்
நீ மட்டும் முதல் எழுத்தாகவே
இருக்கிறாய்...

உன் நினைவுகளின் இடறலில்
தடுக்கி விழுந்த நான்
ஒவ்வொரு முறையும்
எழுந்திருக்கிறேன் உனக்கான
ஒரு கவிதையோடு...

ஈழம்....
பொம்மலாட்டக்காரன் நம் கதையை
அரங்கேற்றினான்
ஆடாமல் அழுதன பொம்மைகள்

Thursday, December 22, 2011

உடைக்க முடியாத...
உடைந்த ஓட்டுச் சில்லை சாலைச் சிறுவனின்
கால்கள் எத்திச் செல்கிறது...
காலிக் கோப்பையை தேநீர்
நிரப்பிக் கொண்டே இருக்கிறது...
உனக்கென எழுதப்பட்ட கவிதைகளை
உன் இறுக்கமான மௌனம்
புதைத்துச் செல்கிறது...

எங்கோ தெரியும் மலைகளுக்குப் பின்
ஒளிந்திருக்கும் ரகசியத்தையும்
கடலுக்குள் மூழ்கும் சூரியனின்
அதிசயத்தையும்
அடர்ந்த காட்டில் நரியின் ஓலத்தின்
அச்சுறுத்தலையும்
ஊழிக் காற்றில் நடுங்கும் இதழ்களைச்
சுமந்திருக்கும் பூவின்
அச்சங்களையும்
பொருத்தியுள்ளது உன் மௌனம்...

அதிகமாகச் செலவழித்து விட்டேன்
அனேக வார்த்தைகளை
உன் மீதான காதலை, நம்பிக்கைகளை
உனக்கான எதிர்பார்ப்புகளை
என்னின் சில ஏமாற்றங்களை..

அத்தனையும் உடைக்க முடியாத
உன் மௌனத்துக்குப் பின்னே
நீ ஒளித்து வைத்துள்ள
பாசாங்குகளை செரிக்க முடியாமல்
உடைந்துவிடுகின்றன..

என்றேனும் மரணத்தின் ஸ்பரிசத்தை
நீ உணரும் போது
உணர்வுகளின் வெளிகள் நீண்டு
உறவுகளின் சுருக்கம் நீ அடையும்போது
தனிமை எனும் பாலை மண்ணில்
புதையுண்டு ஒரு துளி நீருக்கும்
தாங்கிப் பிடிக்கும் தோளுக்கும்
தழுவிச் கொள்ளும் கைகளுக்கும்
நீ ஏங்கும் போது

எனை மறந்து
யாருமற்றவன் என நீ வருந்தும்
அந் நொடிப்பொழுதில்


உனை மட்டும் சுமந்திருக்கும்
என் உயிரின் மிச்சங்கள் உதிர்ந்துவிடும்
துடி துடித்து...

Wednesday, December 21, 2011

வெற்றிடம்...
உன் பிரிவு என்னுள் எந்தவித
துயரத்தையோ சோகத்தையோ
ஏற்படுத்தவில்லை...

என் கண்களில் நீர் பூத்து உதிரவில்லை
மனம் குழம்பித் தவிக்கவில்லை
இதயம் உடைந்து நொறுங்கவில்லை...

உன் பிரிவு என்னுள் ஏற்படுத்தியது
ஒரு வெற்றிடம்
இனி யாரும்...
மறுபடி உன்னாலேயுமே கூட
நிரப்ப முடியாத...

என் உயிரின் கடைசிச் சொட்டுகளை
மரணம் உறிஞ்சி முடிக்கும்
வரைக்குமான ஒரு வெற்றிடம்...

Tuesday, December 20, 2011

புத்தகப் புழுக்களும் சில அட்டைப் பூச்சிகளும்....

புத்தகப் புழுக்களும் சில அட்டைப் பூச்சிகளும்


இது அவன் பாட்டனார் எழுதிய புத்தகமாம்
ஆயிரம் பிரதிகள் அறுபதே நாளில் விற்றதாம்
தேடிக்கொண்டிருக்கிறான் இன்னமும்
ஆயிரம் பிரதிகளில் ஒன்றுகூட
அவன் குடுபத்தில் இல்லை
கையெழுத்துப் பிரதி உட்பட

தலைமுறையின் எச்சங்களில் எல்லாம்
மிச்சங்கள் இல்லாமல் தேடினான்

பாட்டியின் பழைய டிரங்க்குப் பெட்டியில்
சில இதிகாசம் சிக்கியது
பெரியம்மாவின் அட்டைப் பெட்டியில்
சில மாயாஜாலங்கள் மாட்டியது
அம்மாவின் அலமாரியில்
பக்தி மணம் வீசியது
சித்தியின் சிற்றரையில்
சிற்றிலக்கியம் சிதறியிருந்தது
பெண்கள் வழி உதவாதென்று
ஆண்களிடம் ஆரம்பித்தது அவன் தேடல்
தாத்தாவின் அறையில் சித்த மருத்துவமும்
பெரியப்பாவின் அலமாரியில் சித்தர் பாடல்களும்
அப்பாவின் பீரோவில் சிந்தனாவாதிகளும்
சித்தப்பாவிடம் சில புரட்சியாளர்களும்
நிரம்பியிருந்தனர்

அண்ணனின் ஸ்கைபேகில்
உலக அழகியரும்
அக்காவின் இழுப்பறையில்
அழகியல் புத்தகமும்
சிரித்துக் கொண்டிருந்தன

தலைமுறை இடைவெளிகள்
அவரவர் அலமாரியில்...

ஆனால் அனைத்திலும் ஒற்றுமையாக
மூன்று அட்டைகள் மூடி
முதல் அட்டை மறைத்து
நிர்வாணம் தரித்த புத்தகம் மட்டும்
இன்னும் பத்திரமாக....

புத்தகப் புழுக்களும் சில அட்டைப் பூச்சிகளும்

கடைசிவரை கிடைக்கவில்லை...

Monday, December 19, 2011

எனக்கும் உனக்குமான பரிசு...

நான் செய்யும் தவமெல்லாம்
வரமாகி உனைச் சேர்கிறது
கவிதைகளாக

காதல் தோட்டத்தில்
என் கண்ணீர் குடித்த
உன் வேர்கள்
காயப் பூக்களை பரிசளிக்கிறது...

என் நினைவுகளை சேமித்து வைத்துக்கொள்
என்றேனும் தேவைப்படும்
நீ வெளிப்படுத்த
கண்ணீராகவோ அல்லது
புன்னகையாகவோ...

என் கண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்
என்றேனும் தேவைப்படும்
உன் வாழ்வில் சில
வர்ணங்கள் குழைக்க

என் புன்னகையை பொத்தி வைத்துக்கொள்
என்றேனும் தேவைப்படும்
என் பிரிவு உனைச் சுடுகையில்
ஒத்தடம் கொடுக்க...

உனக்கு பரிசளிக்கவென்றே
ஒவ்வொரு கவிதையையும்
செதுக்குகிறேன்
காகிதத்தில் பூக்களாக...

அத்தனையும் காகிதப் பூக்களாய் மட்டும்
நீ பார்ப்பதால்
உன் முன் அறையிலேயே
உதிர்ந்து போய்விடுகின்றன
தற்கொலைக்கு தூண்டப்பட்டு...

பிரிவின் மெல்லிசை....

நீ தோளில் சூடும் மாலைக்காக
என் உதட்டுப் புன்னகையை
பறித்துச் செல்கிறாய்...

என் வானத்து இரவில்
நட்சத்திரங்களாய் உன் ஞாபகம்
பிரிவாய் இத்தேய்பிறை...
நிலத்தில் கோலமிட
முயன்ற வானம்
மழைப் புள்ளிகளை
நிரப்பியது போல
என் நினைவுப் புள்ளிகளை
உன் நெஞ்சில் விதைத்தேன்...

இழைகள் இழுக்க இடமின்றி
தேங்கிவிட்ட நீரைப் போல
காதல் முளைக்க வழியின்றி
வெறுப்பு உரம் தூவிச் செல்கிறாய்..

Sunday, December 18, 2011

புசிக்க ஏதுமற்று.....

அன்று கனவுகளில் பசிந்திருந்த
என்னை
உன் நினைவுகள்
புசிந்திருந்தது

நினைவுகள் புசித்த
மீதத்தை
பிரிவு செரித்துவிட

புசிக்க ஏதுமற்று
இன்று என் கனவுகளின்
பட்டினிச்சாவு..

அனாதைப் பிணங்களானது
என் கவிதைகள்

Saturday, December 17, 2011

என்ன செய்யப் போகிறாய்?...
உனை நோக்கி நீண்ட என்
கிளைகளை இரக்கமின்றி
நான் உறங்கிய இரவில்
வெட்டிச் சென்றாய்..

உள் படர்ந்த காதல் வேரை
என்ன செய்யப் போகிறாய்?

Friday, December 16, 2011

ஞாபக முட்கள்...


உன் ஞாபக முட்கள்
கீறியது
என் காய்ந்த வடுக்களில்
பச்சை ரத்தம்...

தேடுகிறேன்...தேடுகிறேன்..

நீளும் இரவுகளில்..
குறுகிய என் தூக்கத்தில்...
மனதின் ஓரத்தில்...

ஒற்றை வெளிச்சப் புள்ளியாய்
முகவரி தொலைத்த
உன் முக வரியை...

விரைய விரைய விரையமாகும்
முடிவில்லாப் பயணத்தின் முடிவாய்
உன் நினைவுகளை...

கானல் நீராய்
கண்ணாமூச்சி ஆட்டமாய்...

எரியும் இதயத்தில்..
குளிரும் ரத்தத்தில்...
உருகும் உள்ளத்தில்...
தூக்கம் தொலைத்த இமைகளின் ஓரத்தில்...
எங்கேனும் சற்றே இருந்துவிட்டுப் போ...
தனித்த என் தனிமைக்கு துனையாக...

Thursday, December 15, 2011

அடுக்குகள்....
முதலாம் அடுக்கு:

என்ன இது கைகளுக்கு அடியில்
புதுவித துருத்தல்
அட!.. இறக்கை முளைக்கிறதா எனக்கு?!..
பார்த்தபோதே நீண்டு விரிந்து...
பட படவென அடித்துப் பறந்தேன்...

கூதல் இரவில் பௌர்ணமி ஒளியில்
பூமியின் மடிப்புகள் தாவிக் கடந்து
வானின் அடுக்குகள் துளைத்து நுழைந்தேன்

தாய்ப்பால் பருகி தாலாட்டில் கிறங்கி
உதடு சிரிக்க குழந்தை
உறங்கும் சத்தம்
காதலன் காதலி பரிமாறிக் கொண்ட
அலைபேசி செய்தியில் ஒளிர்ந்த
முத்தச் சத்தம்
காசுக்கு தூக்கத்தை பேரம் பேசும்
கால் செண்டர் காளைகளின்
கணினிச் சத்தம்
கந்து வட்டியால் அயல்நாட்டில்
கணவன்-இங்கே ஒற்றைப் பாயில்
மனைவியின் பசலைச் சத்தம்
சோறுகாணா ஏழை இரைப்பையின்
இரைச்சல் சத்தம்
அத்தனை சத்தமும் மொத்தமாய் வாங்கி
ஜாமங்கள் கடந்து அடுக்குகள் திறந்து
தொடர்கிறதென் பறக்கும் பயணம்..இரண்டாம் அடுக்கு:

மொட்டின் இதழ்கள் விரியும் சத்தம்
பூவோடு வண்டு கூடும் சத்தம்
செடிகளில் இலைகள் துளிர்க்கும் சத்தம்
புல்லில் பனித்துளி உறங்கும் சத்தம்
வேர்கள் நீரை உறிஞ்சும் சத்தம்
நிலவின் கிரணம் என் உடல் தொடும் சத்தம்
கருப்பைக் குழந்தை சுவாசிக்கும் சத்தம்
மழைத்துளி முத்தாக
சிப்பியை யாசிக்கும் சத்தம்
வானை விண்மீன் வாசிக்கும் சத்தம்
ஆழ்மனம் கண்களைப் படிக்கும் சத்தம்
உணர்ந்து கிளர்ந்து மேலடுக்கு அடைந்தேன்...

மூன்றாம் அடுக்கு:

முனிவர்கள் தபசிகள் ஞானிகள் மகான்கள்
தேடியலையும் முதலும் கண்டேன்
முடிவும் கண்டேன்
ஒளிப்பிழம்பு உருக்கிய ஜோதியின் வடிவில்
பேரண்டத்தின் பேரொளி ஜொலிக்க
அமைதியும் அன்பும் எங்கும் நிறைய
பூக்களுற்ற வாசம் பூக்களற்றும் பரவக் கண்டேன்
மனதின் கசடுகள் கசங்கி எரிய
இது தான் முழுமுதல் என்றே மயங்க
இதுவ‌ன்றி சுவர்கம் வேறெதுவுமுண்டோ?!
என்றே மனம் முயங்க
சில்லிட்ட உணர்ச்சியில் நான்
மேகம் போல் மிதக்க

அட இது என்ன முகில்கள் தூவும்
பனித்துளிகள் என் முகம்
நனைக்காமல்
இடை நனைக்கிறதே!..
சட்டென்று விழிப்பு அருகே
உடை நனைத்த சிணுங்கலில்
என் மூன்று மாதக் குழந்தை!..

உனைக் கடந்தும்.....
உனைக் கடந்தும்
விஷயங்கள்
உலகில் எத்தனையோ?!..

ஆனால்,
உனைக் கடக்க முடியாமல்
சுழலில் சிக்கிய துடுப்பானேன்
என் படகைத் தொலைத்து...

Tuesday, December 13, 2011

நிராகரிப்பு....

நிராகரித்தல் பழகு
நிராகரித்தல் ஏற்கவும் பழகு
நிராகரிப்பு ஒரு நிமிட வலி
ஒரு மணி நேரக் கவலை
ஒரு நாள் துக்கம்...

நிராகரிப்பு மறைந்த ஏற்பு
நிராகரிப்பு மறைத்த ஒப்புதல்
வாழ்நாள் பெருந்துயரம்...

உயிர்ன் கடைசி சொட்டு
முடியும் வரைக்குமான
பெருங்காயம்...

நிராகரிப்பு மீறி வரும்
அங்கீகாரத்தின்
விலை அவமானம்
நிராகரிப்பு கொடுப்போரின் பலம்
பெறுவோரின் பலவீனம்...

ஏதேனும் ஒரு தருணம்
நிராகரித்தலின் நிராகரிப்பு
பாவத்தின் சம்பளமாகப் பெறப்படும்...

ஆகையால் நிராகரித்தல் பழகு
நிராகரிப்பை ஏற்கவும் பழகு
சில நேரங்களில் கசப்பும்
நல் மருந்தாகும்...

Sunday, December 11, 2011

உடையாத பயணம்....

மொட்டை மாடி
நிலவு மழை
அதில் ஒற்றை நாற்காலி
உனக்கும் எனக்குமாய்...

ஊருக்கே தெரியும் நிலா
அதன் வழியே
நம் விழிகளுக்கு மட்டுமே புரியும்
நயன பாஷை...

என் உடல் வெப்பம் குறைய
நீ குளிக்கையில்
நான் நனையும் விந்தை!...

உன் பசிக்கு நான் புசிக்க
உன் வயிரோடு சேர்ந்து
மனமும் நிறையும் மாயம்!...

என் கையில் காயம்
உன் கண்ணில் வலி

எல்லாம் ஒட்டியிருந்தும்
ஒட்டாத தண்டவாளங்களாய்
இணைந்தே செல்கிறோம்
உடையாத பயணத்திற்காக...

Saturday, December 10, 2011

வேண்டும்....எனக்கு உன் ஸ்பரிசம் இல்லா
தீண்டல் வேண்டும்

என் நாசிக்குச் சிக்காத
உன் வாசம் வேண்டும்

வாக்கியத்தில் சிக்காத உன்
வார்த்தைகளின் சீண்டல் வேண்டும்

உன் மௌனத்தின் சத்தம் கூட
என்னுள் விதைக்குதடா யுத்தம்...

Friday, December 9, 2011

உயிர் உரசும்....


என்றேனும் உன் உயிர் உரசும்
என் நினைவலைகள்
தழுவிச் செல்லும் உனை
நான் சொல்லில் மறைத்து
உன்னிடம் சொல்ல மறந்த
என் காதலை...

Thursday, December 8, 2011

மௌன வரம்...இந்த ஆழ்ந்த மௌனத்தை
யாரிடம் பரிசாகப் பெற்றாய்?

என் எண்ணக் கதறல்கள் உனைக்
கூவி கூவி அழைத்த போதும்

வார்த்தை அம்புகள் உனை
சரம் சரமாய்த் தொடுத்த போதும்

சிஞ்சித்தும் கிழியாத இந்த
அடர்ந்த மௌனத்தை
எந்த அரக்கனிடம் வரமாகப் பெற்றாய்!...

Tuesday, December 6, 2011

அவன் என்பது.....
அடைந்துவிட்டதென நினைத்து
அவன்
இழந்துவிட்டது அதிகம்...

பெற்றுவிட்டது என எண்ணி
அவன்
தொலைத்துவிட்டது ஏராளம்...

கடவுளும் சாத்தானும்
அவன்
சக்கரத்தின் இரு பகுதிகள்...

ஒருவரை அடைந்த நேரம்
அவன்
மற்றவர் பால் தனிச்சையாக
நகர்த்தப் படுகிறான்...

இந்த நகர்தலில் சுவடுகள்
என எதையும்
அவன்
பதித்துச் செல்லவில்லை...

அவனுக்கு
என சக்தி எதுவும் இருக்கவில்லை

அவனுக்கு
என புத்தியும் ஏதும் இருக்கவில்லை

அவன்
என்பது ஒரு பெயர்ச் சொல்லாகவே
இருக்கும் வரை

நான் என்பதில்
அவன் மூழ்காதவரை

அவன்
வெறுமையின் உச்சத்தில்
வளர்ச்சிகள் முடித்த
முழு நிலவாகிவிடுகிறான்..

Friday, December 2, 2011

ஆதலால்...
எனக்குத் தென்றல் பிடிக்கும் தான்
ஆனால் பிடிக்கவில்லை?!..
நானும் நீயும் பேசுகையில்
இடையில் நுழைவதை
ஆதலால்...
இடைவெளி குறைத்துவிடு..