Thursday, December 15, 2011

அடுக்குகள்....
















முதலாம் அடுக்கு:

என்ன இது கைகளுக்கு அடியில்
புதுவித துருத்தல்
அட!.. இறக்கை முளைக்கிறதா எனக்கு?!..
பார்த்தபோதே நீண்டு விரிந்து...
பட படவென அடித்துப் பறந்தேன்...

கூதல் இரவில் பௌர்ணமி ஒளியில்
பூமியின் மடிப்புகள் தாவிக் கடந்து
வானின் அடுக்குகள் துளைத்து நுழைந்தேன்

தாய்ப்பால் பருகி தாலாட்டில் கிறங்கி
உதடு சிரிக்க குழந்தை
உறங்கும் சத்தம்
காதலன் காதலி பரிமாறிக் கொண்ட
அலைபேசி செய்தியில் ஒளிர்ந்த
முத்தச் சத்தம்
காசுக்கு தூக்கத்தை பேரம் பேசும்
கால் செண்டர் காளைகளின்
கணினிச் சத்தம்
கந்து வட்டியால் அயல்நாட்டில்
கணவன்-இங்கே ஒற்றைப் பாயில்
மனைவியின் பசலைச் சத்தம்
சோறுகாணா ஏழை இரைப்பையின்
இரைச்சல் சத்தம்
அத்தனை சத்தமும் மொத்தமாய் வாங்கி
ஜாமங்கள் கடந்து அடுக்குகள் திறந்து
தொடர்கிறதென் பறக்கும் பயணம்..



இரண்டாம் அடுக்கு:

மொட்டின் இதழ்கள் விரியும் சத்தம்
பூவோடு வண்டு கூடும் சத்தம்
செடிகளில் இலைகள் துளிர்க்கும் சத்தம்
புல்லில் பனித்துளி உறங்கும் சத்தம்
வேர்கள் நீரை உறிஞ்சும் சத்தம்
நிலவின் கிரணம் என் உடல் தொடும் சத்தம்
கருப்பைக் குழந்தை சுவாசிக்கும் சத்தம்
மழைத்துளி முத்தாக
சிப்பியை யாசிக்கும் சத்தம்
வானை விண்மீன் வாசிக்கும் சத்தம்
ஆழ்மனம் கண்களைப் படிக்கும் சத்தம்
உணர்ந்து கிளர்ந்து மேலடுக்கு அடைந்தேன்...

மூன்றாம் அடுக்கு:

முனிவர்கள் தபசிகள் ஞானிகள் மகான்கள்
தேடியலையும் முதலும் கண்டேன்
முடிவும் கண்டேன்
ஒளிப்பிழம்பு உருக்கிய ஜோதியின் வடிவில்
பேரண்டத்தின் பேரொளி ஜொலிக்க
அமைதியும் அன்பும் எங்கும் நிறைய
பூக்களுற்ற வாசம் பூக்களற்றும் பரவக் கண்டேன்
மனதின் கசடுகள் கசங்கி எரிய
இது தான் முழுமுதல் என்றே மயங்க
இதுவ‌ன்றி சுவர்கம் வேறெதுவுமுண்டோ?!
என்றே மனம் முயங்க
சில்லிட்ட உணர்ச்சியில் நான்
மேகம் போல் மிதக்க

அட இது என்ன முகில்கள் தூவும்
பனித்துளிகள் என் முகம்
நனைக்காமல்
இடை நனைக்கிறதே!..
சட்டென்று விழிப்பு அருகே
உடை நனைத்த சிணுங்கலில்
என் மூன்று மாதக் குழந்தை!..

No comments: