Thursday, June 9, 2011

என்ன தவம் செய்தனை...










மயக்கத்தைத் தூண்டும்
சலனங்கள் தருகிறாய்...

ஜனனமும் மரணமும்
ஒரு சொல்லில் நிகழ்த்துகிறாய்...

ஊமையாய் இருந்த கண்களுக்கு
ஜாடைகள் பேச கற்றுத் தருகிறாய்...

சிவக்க மட்டுமே தெரிந்த கன்னங்களில்
வண்ணங்கள் குழைத்து
என் வெட்கத்துக்கும்
மெருகேற்றுகிறாய்...

தென்னங் கீற்றின் நடுவே சரியும்
நிலவின் நிழலைப் போல
சத்தமின்றி காதல் செய்கிறாய்....

விழிகள் தூக்கங்களைத்
தொலைத்த போதும்
உன் கனவுகளையே
சுமந்து போக வைக்கிறாய்...

சொற்களை உதிர்த்த
வாக்கியமாய்
நீ அற்ற பொழுதுகளில்
வெறுமையைக் கூட்டுகிறாய்...

நிழல் கூட விழமுடியாத
பேரொளியாய்
காதலை காதலாலேயே நிரப்புகிறாய்...

நித்தமும் நெகிழ்கின்றேன்
உனைப் பெற
என்ன தவம் செய்தனை...

No comments: