Wednesday, January 11, 2012

தீக்குளிக்கவில்லை சீதை...















அண்ட பேரண்டத்தை எல்லாம்
ஒரு துளியாக்கி உறிஞ்சிவிட்டது
போன்றதொரு வெறுமை
சூழ்ந்திருந்தது

காலத்தை கரைத்துவிட்ட
கனத்த மௌனம்
இருவரிடையே வியாபித்திருந்தது..

ஏன்? ஏன்? இந்த முடிவு?
ஏன் இம்முறை முரண்டுபிடித்தல்?
முன்பு எப்போதைக்குமல்லாத
பிடிவாதம்?
உன் இயல்புக்கு பொருத்தமல்லவே?

அங்கு அவர்களின் இதழ் பேசவில்லை
மொழி வசப்படவில்லை
விழியும் நேர்ப்படவில்லை
அவற்றின் பேரமைதியில் மனங்கள்
உரையாடியது இல்லை இல்லை
உணர்ந்தது தம் மொழிகளற்ற உணர்ச்சிகளை

கேட்காமலேயே அன்று தீயில்
விழுந்தெழுந்தாயே?
இன்று கேட்டும் ஏன் மறுதலிக்கிறாய்
இத்துனை பிடிவாதத்தோடு!...

வசதி இழந்து சுகம் மறுத்து
ராஜ வாழ்வு துறந்து
என் இருப்பிடமே சுவர்கம் என
காடு வரை வந்தவள் நீ...

நான் மீட்பேன் என நம்பி
உயிர் தேக்கி நின்றவளே
இன்று சூல்கொண்டு நம்
கரு தாங்கி நிற்கும் வேளையில்
ஏன் விட்டு விலகுகிறாய்?

நான் அறிவேன் உன் பதிவிரதம்
எனக்காகவா கேட்கிறேன்
ஊருக்காக கண்மணியே
இன்னுமொருமுறை குளித்தால் என்ன?

கண்களில் நீர் நிரப்பி உதிரத்தை வடித்தனள்

கேள்வியும் நீயே பதிலும் நீயே...
என் உலகம் நீ, என் உயிர் மூச்சு நீ
எனை அசைவிக்கும் சக்தி நீ
என் வாழ்வும் நீ மரணமும் நீ
சகலமாய் எனக்குள் நிறைந்தவன் நீ

ஒரு முறை என்ன? ஓராயிரம் முறை
தீக்குளிக்க சம்மதம் உனக்காக
என் பவித்திரம் உனைச் சேர்ந்தது
நீ உணர்வது நீ உணர்ந்தது
ஊருக்கு அல்ல ஊருக்காகவும் அல்ல..
புரிந்தவுடன் அழைக்க வா..

இப்போது விடை கொடு அன்பே

வணங்கிப் பிரிந்தாள்..

விளங்கி நின்றான் கனத்த மனத்தோடு
கலங்கி நடந்தாள் கனத்த வயிரோடு

இவர்கள் ராமனும் சீதையும்...

No comments: