Sunday, January 26, 2014

(நி)சப்தம்...

யாருமற்ற என் அறையில்
இரவின் தனிமையுடன்
இமைகளை இணைத்த
நள்ளிரவு நேரம்...

எங்கிருந்தோ
க்ரக்.. க்ரக்.. க்ரக்..
மெல்லிய க்ரீச்சொலி
கேட்க ஆரம்பித்தது...

திடுக்கென இமை பிரித்து
பயப்பார்வை படரவிட்டு
விளக்கொளியை பரப்ப
சப்தம் அடங்கியது நிசப்தமாய்...

இருளணைத்து
இமைகள் இணை
காதுக்குள் மீண்டும் 
அதே க்ரக் க்ரக் க்ரக்...

ஒன்றுக்கு இரண்டாய்
விளக்குகளை எரியவிட்டு
மின் விசிறி நிறுத்தி
மிக உன்னிப்பாய்
சுவர் ஓரம்
நாட்காட்டி பின்புறம்
கட்டிலின் அடியில்
கொடித்துணியில் பக்கத்தில்
என நாற்புறமும் நோட்டம் விட்டு

சத்தம் அடக்கிய அச் சத்தத்தை
தேடித் தேடி அலுத்து
ஓய்ந்துபோய் அமர்ந்த நேரம்...

மெள்ளமாய்
மிக மெல்லமாய் க்ரீச்சிட்டு
தலை காட்டியது
பூச்சியும் அல்லாத
சிறு பறவையிலும் சேராத 
அச்சிறிய உயிரினம்

ச்சே!!!
உனக்குத்தானா இத்தனை பயந்தேன்
என நானும்
அதே ஏளனப் பார்வையுடன் அதுவும்

விடியல்
விளிம்பைத் தொடும் நேரம்
உறங்கச் சென்றோம்
கட்டில் மீது நானும்
கட்டில் அடியில் அதுவும்...

1 comment:

Iniya said...

நன்றாகவே உள்ளது தொடருங்கள்!
வாழ்த்துக்கள்...!