Friday, April 18, 2014

ஊஞ்சல்...



உனக்கு எழுதியதைப் படிக்கையிலும்
நீ எழுதியதைப் படிக்கையிலும்
காலால் உந்தித் தள்ளும்
என் கொலுசின் சினுங்கலையும்
உதட்டின் சுழிப்பையும்
காற்றின் விசையையும்
ஒரு சேர உன் திசை நோக்கி
எடுத்துச் செல்லும்
என் வீட்டு ஊஞ்சல்..

Monday, April 7, 2014

எப்படி..?!!!..
















ஓடும் நீராகத்தானே இருந்தேன்
மலராய் எப்படிப் பூத்தாய்?!

கடும் பாறையாகத்தானே இருந்தேன்
கொடியாய் எப்படி படர்ந்தாய்?!

சுடும் நெருப்பாகத்தானே இருந்தேன்
நீராய் எப்படி அணைத்தாய்?!

நிலவு மட்டும் சுமந்த வானமாக இருந்தேன்
நட்சத்திரங்களாகி நிரம்பி வழிகிறாய்

மறக்கப்பட வேண்டும் என்பதாலேயே
மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறாய்...

Sunday, January 26, 2014

திரும்ப....

எனதானெதென்று
ப்ரத்தியேகமானதொன்று
பத்திரமாய்த்தான் வைத்திருந்தேன்..

மிகப் ப்ரயத்தனத்துடன்
கெஞ்சி கொஞ்சியே
எடுத்தாண்டுவிட்டாய்..
திருப்புதலுக்கானவோ
திரும்புதலுக்கானவோ
எந்த முகாந்திரமும் இன்றி...

கலங்கித் தவிக்கிறேன்
ஊமையாய் சுட்டெரிக்கும்
கடுங்கோடை வெயிலாயினும்
உரத்துப் பெய்யும் கன மழையாயினும்
உன் நினைவைத் தடுக்க முடியவில்லை

தயை கூர்ந்து
எடுத்துச் சென்ற எனதான
க(ற்)ருப்புக் குடையை
திரும்பக் கொடுத்துவிடேன்...

(நி)சப்தம்...

யாருமற்ற என் அறையில்
இரவின் தனிமையுடன்
இமைகளை இணைத்த
நள்ளிரவு நேரம்...

எங்கிருந்தோ
க்ரக்.. க்ரக்.. க்ரக்..
மெல்லிய க்ரீச்சொலி
கேட்க ஆரம்பித்தது...

திடுக்கென இமை பிரித்து
பயப்பார்வை படரவிட்டு
விளக்கொளியை பரப்ப
சப்தம் அடங்கியது நிசப்தமாய்...

இருளணைத்து
இமைகள் இணை
காதுக்குள் மீண்டும் 
அதே க்ரக் க்ரக் க்ரக்...

ஒன்றுக்கு இரண்டாய்
விளக்குகளை எரியவிட்டு
மின் விசிறி நிறுத்தி
மிக உன்னிப்பாய்
சுவர் ஓரம்
நாட்காட்டி பின்புறம்
கட்டிலின் அடியில்
கொடித்துணியில் பக்கத்தில்
என நாற்புறமும் நோட்டம் விட்டு

சத்தம் அடக்கிய அச் சத்தத்தை
தேடித் தேடி அலுத்து
ஓய்ந்துபோய் அமர்ந்த நேரம்...

மெள்ளமாய்
மிக மெல்லமாய் க்ரீச்சிட்டு
தலை காட்டியது
பூச்சியும் அல்லாத
சிறு பறவையிலும் சேராத 
அச்சிறிய உயிரினம்

ச்சே!!!
உனக்குத்தானா இத்தனை பயந்தேன்
என நானும்
அதே ஏளனப் பார்வையுடன் அதுவும்

விடியல்
விளிம்பைத் தொடும் நேரம்
உறங்கச் சென்றோம்
கட்டில் மீது நானும்
கட்டில் அடியில் அதுவும்...

Saturday, October 19, 2013

உறங்க வைக்க முடிவதில்லை...

பேசிய வார்த்தைகளை
உதைத்து உருட்டிக்கொண்டே
மௌனத்தால் முற்றுப் புள்ளியாக்கிவிட்டாய்
நம் நினைவுகளை...

விளையாட்டு முடிந்த மைதானத்தில்
திக்கற்று அலையும் வெற்றுக் காகிதமாய்,

அகால வேளையில்
பழுதடைந்த தண்டவாளத்தில்
கைவிடப்பட்ட ஒற்றை ரயில் பெட்டியின்
தனிமையோடு அலைகிறது மனது..

எரிமலையின் ஆழத்தில்
நிச்சலனத்தில் உறைந்திருக்கும்
உனக்கான சொற்களை என்னால்
ஒருபோதும் உறங்க வைக்க முடிவதில்லை...

நீ வீசி எறிந்த சொற்களின் மாபெரும்
த்தில் நசுங்கிக் கிடக்கின்றன
நமதான ஒரு ஒற்றைக் கனவும்
அதன் பெருவெடிப்பில்
கருகிச் சிதறிய இக் கடைசிக் கவிதையும்...

Monday, October 14, 2013

பக்கங்களற்ற புத்தகம்...


பக்கங்களற்ற புத்தகம் ஒன்று
சொல்லையும் பிம்பத்தையும் பிரித்து
சொற்களின் மீது மனக் கசப்பை
ஏற்றி விட்டு பிரிந்து கிடக்கிறது..

கடைசி நட்சத்திரம் வரை
நீண்டு கொண்டிருக்கும் இரவில்
என் நிலவு உதிர்ந்து கொண்டிருக்கிறது
சென்னிறமாக...

காலியான சத்திரத்தில் எஞ்சி இருக்கும்
பயணியின் நினைவு போல...

Thursday, August 22, 2013

ஆ(கா)தலால்.....

மழை நேரத்தில் நாம் சந்தித்ததில்லை
மழை நனைத்த சாலையில் நாம்
கை கோர்த்து நடந்ததில்லை..

மழைத்துளிகளின் இடைவெளியில் நாம்
ஒதுங்கி நனைந்ததில்லை...
சாரல்களில் ஓரத்தில் 
உடல் ஒட்டி நின்றதில்லை..

இருந்தும் மழை வரும் போதெல்லாம்
நீ வருவதாகவே நினைக்கிறேன்
ஆ(கா)தலால் நனைகிறேன்...