Sunday, October 21, 2012

தவிர்ப்பும்.. தவிப்பும்...


எனது அழைப்புகளை நீ
தவிர்க்க ஆரம்பித்த பின்
உனை அழைப்பதை நிறுத்திவிட்டேன்

நீ தவிர்க்கும் கோபத்தால் அல்ல

எடுக்காத அழைப்பின் ரீங்காரம்
என் அலைபேசியில் நாராசமாகவும்
உனதலைபேசியில் அபஸ்வரமாகவும்
ஒலிக்கும் என்ற தவிப்பால்...

Wednesday, October 17, 2012

யுத்தம்...


அறை எங்கும் சிதறிக் கிடந்தன
நாம் ஒருவரை ஒருவர்
பேச்சுக்களால் குதறிக் கொட்டிய
வார்த்தைகள்..

அவற்றின் ஒவ்வொறு அங்கமும் கீறப்பட்டு
ரத்தம் உறைந்தும் உறையாமலும்
விடைத்துக் கொண்டிருந்தன...

இனி வெட்டுவதற்கோ சிந்துவதற்கோ
வார்த்தைகள் இல்லாது
தீர்ந்திருந்த போழ்தில்...

உதட்டில் ஒரு சிகரெட்டைப்
பொருத்திக் கொண்டு
தலையை உதறி வெளியில் சென்றாய் நீ...

துடைப்பமும் முறமும் கொண்டு
அள்ள ஆரம்பித்திருந்தேன் நான்...

நிசப்தமான நம் அறை
அடுத்த யுத்தத்தைப்
பேசிக் கொண்டிருந்தது
நான்கு சுவர்களுடன் மௌனமாக...

Saturday, October 13, 2012

கடன்!!...



கடலிடம் நிறைய
கடன் வாங்கிவிட்டாயோ!!
உப்பு நீரை அடிக்கடி
என் கண்களிடமிருந்து
பெறுகிறாயே??

Thursday, October 4, 2012

நீயும்???... நானும்...


அனுமதி கேட்டு காதல் செய்தவனும் நீ
அனுமதியின்றி காயம் செய்தவனும் நீ

மிட்டாய் தொலைத்த குழந்தையாக
அழுது நிற்கிறேன்
உனை எதற்காகத் தொலைத்தேன்
என்பது புரியாமலேயே..

தீராத தனிமையின் மை கொண்டு
எழுதத் துவங்குகிறேன் உனக்கான
ஒரு கவிதையை...

எழுத்தின் சுவடுகளாக
உன்னால் கத்தரிக்கப் பட்ட
என் சிறகுகளே வந்து விழுகின்றன...

விசாரிப்புகள் ஏதும் அற்ற
உனது தீர்ப்பை கூறும் முன்னமே
நீ ஒடித்திருந்த
பேனா முட்களின் முனைகளில்
நொறுங்கிவிட்டிருந்தேன் நான்..