Wednesday, November 1, 2017

சிறு கதை - குறை ஒன்றும் இல்லை


01.11.2017 குமுதம் இதழில் பிரசுரமான கதை

பகலில் பூக்கும் பூக்களை விட இரவிலும் அதிகாலையிலும் பூக்கும் பூக்களுக்கு கூடுதல் அழகு. சந்தடிகள் இல்லாத சத்தங்கள் இல்லாத குறுக்கும் மறுக்கும் ஓடி அலையும் மனிதர்களின் ஓயாத எண்ண அலைகள் சூழாத தூய்மையான பொழுதில் இயற்கையும் இறைவனும் இனைகின்ற தருணத்தில் மொட்டவிழும் மலர்களுக்கு தெய்வ சக்தி அதிகம் தான். மனதில் தோன்றிய சிந்தனைகளினூடே பவளமாகவே உதிர்ந்திருந்த பவளமல்லிகையை ஒவ்வொன்றாக பூக்கூடையில் சேகரித்த படியே நினைத்துக் கொண்டாள் சத்யவதி.

“என்ன சத்யாம்மா இது. ஏன் உங்க உடம்ப இப்படி வருத்திக்கறீங்க. ரெஸ்ட்ல இருங்கம்மா. சாமிக்கு பூ தானே சேகரிக்கனும் இதை எல்லாம் இருளி பார்த்துக்க மாட்டாளா? நீங்க முதல்ல உள்ளாற போங்க” என்றபடியே அவளிடமிருந்த பூக்கூடையை வாங்க முயன்றான் மாயன்.

அவனைப் பார்த்து சிரித்தபடியே “என்ன மாயா இது. பூ சேகரிக்கர சின்ன வேலையைக் கூட செய்ய முடியாத அளவுக்கு நான் முடியாம இல்லையேப்பா” என்றபடியே பூக்களை கூடையில் பொறுக்கிப் போட்டாள்.

உள்ளே சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்த சத்யவதி ”என்ன இருளி மக வரான்னு பரபரப்பா வேலை நடக்குதா. ஏன் ஒண்டி ஆளா கஷ்டப்படுற. தள்ளு நானும் கொஞ்சம் உதவறேன்” என்றபடியே காய்களை எடுத்தாள்.

அமாம்மா. உங்க மேல சந்தியாக்கு கொள்ளை பிரியம். எங்கள பார்க்க வருதோ இல்லையோ உங்களைப் பார்க்கத்தானே மாசம் தவறாம வந்துடறா” என்று பெருமை பொங்க சொன்னாள் இருளி.

சத்யவதியின் முகமும் அதைக் கேட்டு மலர்ந்தது. அந்த மலைக் கிராமத்திலேயே டாக்டருக்குப் படிக்கும் முதல் பெண் சந்தியா. மாயன் இருளியின் ஒரே மகள். சத்யவதியை இங்கு கொண்டு வந்து சேர்த்தவளும் அவள் தான். பாட்டி பாட்டி என உயிரை விடுவாள் சத்யவதிக்காக. இதோ இன்றும் வழக்கம் போல சத்யவதியின் மருந்து மாத்திரைகளோடு வந்து இரண்டு நாட்கள் தங்கி அவள் உடல் நிலையை பரிசோதித்து தனது சீனியர் டாக்டரிடம் சேர்ப்பிப்பது அவள் தான்.

’எப்போதோ போய்விட்டிருக்க வேண்டிய உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது இந்த மலைச்சாதிக் குடும்பம். இவர்களுக்கு அப்படி என்ன செய்துவிட்டேன். என்னால் முடிந்த கல்வி உதவித் தொகை வாங்கிக் கொடுக்கவும், அவள் படிப்பைத் தொடர, சிறிது பண உதவிகள் செய்ததும் மட்டும் தானே. எத்தனை அறிவான அழகான பெண் சந்தியா. அன்பானவளும் கூட’ என்று நினைத்தாள்.

பாட்டி என்று அழைத்தபடியே உள்ளே நுழைந்த சந்தியா தன் தோள் பைகளை கீழே வைத்துவிட்டு சத்யவதியைக் கட்டிக் கொண்டாள். “எப்படி இருக்கீங்க பாட்டி?” என்று கேட்டவளை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டாள் சதயவதி.

’ம். நீயே பார்த்துட்டு சொல்லு சந்தியா கண்ணு. நான் எப்படி இருக்கேன். சாகக் கிடந்த பிணத்தை உயிர் கொடுத்து நடமாட வைச்சுருக்கியே. உங்க எல்லாரோட கலப்படமில்லாத அன்பும் நச்சு கலக்காத இந்த மலைக் காத்தும் இப்போதைக்கு எமனை என்கிட்ட வரவிடாது போல இருக்கே’ என்று சொல்லியவளின் உதட்டில் உலர்ந்த புன்னகை சிரித்தாள்.

அம்மாவும் பாட்டியும் சமைத்துவைத்திருந்த அருமையான சாப்பாட்டுக்குப் பின் குட்டித் தூக்கம் போட்டு எழுந்த சந்தியா வழக்கமான பரிசோதனை கிட்டுடன் சத்யவதியிடம் வந்தாள். பரிசோதனைகள் மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொண்டவை எடுத்துக் கொள்ள வேண்டியவை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு சத்தியவதியின் கையைப் பிடித்துக் கொண்டு ”இன்னையோட மூனு மாசம் முடியப் போகுது பாட்டி. உங்க ஹெல்த்ல முன்னேற்றம் இருக்கு. ஆனாலும் இது போதாது, இந்த முறையாவது என்னோட சென்னைக்கு வந்து ஒரு முழு செக்கப் செய்துகோங்களேன்” என்றாள்.

“இல்லைமா. நான் அங்கே வந்தா தேவை இல்லாத பிரச்சனைகள் வரும். அப்படி என் உயிர தக்க வச்சுகிட்டு என்ன செய்யப்போறேன் நான். இருக்குற வரைக்கும் இங்கேயே இருந்துடரேனே” என்று கோட்டோவியம் போலத் தெரிந்த மலை முகடுகளை பார்த்தபடியே கூறினாள்.
சொல்லி வைத்தாற் போல இருவரது நினைவுகளும் பழைய நிகழ்வுகளில் சஞ்சரிக்க ஆரம்பித்தது. சத்தியவதிக்கு கருப்பை புற்று நோய் தாக்கி சில வருடங்களுக்கு முன் கருப்பையை எடுத்துவிட்டனர். அதன் பிறகான சில ஆண்டுகள் மருந்து மாத்திரைகளுடன் ஓரளவு நன்றாகவே சென்றது.

சென்ற ஆண்டு திடீரென புற்று நோய் வயிற்றின் மற்ற பாகங்களுக்கு பரவி, மூளையும் தாக்கிய நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நினைவின்றி மருத்துவமனையிலேயே கிடந்தாள். ஆளுக்கொரு வெளிநாட்டில் மகளும் மகனும் இருக்க தனி ஆளாக சத்தியவதியை பார்த்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார் ராமலிங்கம். மகனும் மகளும் இரண்டு மூன்று முறைக்கு மேல் இக்கட்டான கடைசி கால கட்டத்தில் இருக்கும் தாயைப் பார்க்க வந்து வந்து போயினர். ஓரளவுக்கு மேல் அவர்களாலும் அவரவர் குடும்பத்தை விட்டு வந்து உடன் இருக்க முடியவில்லை.

மருத்துவமனை அறையில் கோமா நிலையில் படுத்திருந்த சத்யவதியின் அருகே கவலையுடன் ராமலிங்கமும் மகன் அஷ்வின் மற்றும் மகள் சுதாவும் அமர்ந்திருந்தனர்.
“அப்பா கொஞ்சம் மனச தேத்திகிட்டு ப்ராக்டிகலா யோசிங்க. டாக்டர் எங்கிட்ட ஒரு யோசனை சொன்னார். சுதாக்கும் இதுல உடன் பாடுதான். உங்க கிட்ட தான் எப்படி சொல்றதுன்னு தெரியல” என்றான் அஷ்வின்.

”என்னடா என்ன சொல்லப் போற. இனிமே அடிக்கடி எங்களால வந்து பார்க்க முடியாது. ஏதாவது ஆச்சுன்னா அப்போ வரோம்னு தான? உங்க நிலமையும் புரியுது. இதுல நான் சொல்ல என்ன இருக்குப்பா. என்னால முடிஞ்ச வரைக்கும் பார்த்துக்கறேன். வேற என்ன பன்றது சொல்லு” என்றார்.
அது இல்லைபா. வந்து… அதாவது… என்று இழுத்தபடி அஷ்வின் தயங்க, சுதா தொடர்ந்தாள்.

”அப்பா. அம்மா கிட்டத்தட்ட ஆறுமாசத்துக்கு மேல இதே நிலைமைல தான் இருக்காங்க. நாமளும் ஹாஸ்பிடல் வீடுன்னு மாத்தி மாத்தி வச்சு பார்த்துட்டோம். ஒரு முன்னேற்றமும் இல்லையேப்பா. அதனால டாக்டர் என்ன சஜஷன் சொல்றாருன்னா இங்க சென்னை அவுட்டர்ல லாஸ்ட் கேர் ஹோம்னு ஒன்னு இருக்காம். இந்த மாதிரி நாள்பட கோமாலயோ தீராத வியாதிலயோ வெஜிடபிள் கண்டிஷன்ல இருக்கறவங்களுக்கான ஸ்பெஷல் ஹோமாம் அது”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெரிதாக விசும்பினார் ராமலிங்கம், ‘பார்த்தியா சத்யா உன்ன ஹோம்ல கொண்டு விடச் சொல்றாங்க. நான் இப்படி கையாலாகதவனாகிட்டேனே சத்யா’ என அரற்ற ஆரம்பித்தார்.

அவர் கலங்குவதைப் பார்த்து தர்மசங்கடமாகிவிட்டது இருவருக்கும். இதற்கே இப்படி என்றால் மேற்கொண்டு எப்படி பேச்சை தொடர்வது. இன்னமும் முழு விஷயத்தையும் கூறவில்லையே என கையைப் பிசைந்து கொண்டு நின்றனர்.
அஷ்வின் தான் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரை தேற்றிவிட்டு மேலும் தொடர்ந்தான்.

“அப்பா நிலமையை புரிஞ்சுக்கோங்க. அம்மாவ இதே நிலமைல உங்களாலயும் தனியா கவனிச்சுக்க முடியாது. நாங்களும் இருக்கற லீவெல்லாம் எடுத்துட்டு மூனு நாலு தடவை ஷார்ட் பீரியட்ல வந்துட்டு போய்ட்டோம். இனி லீவ் எடுத்தா எங்க வேலைக்கு அப்புறம் உத்திரவாதம் இல்லைப்பா. அதனால அம்மாவை அந்த ஹோம்ல விட்டுடலாம். அவங்க மத்த எல்லாத்தையும் பார்துப்பாங்க. ஏதாவது ஆச்சுன்னா நமக்கு தகவல் கொடுப்பாங்க. அதுவரைக்கும் நாம் யாரும் அங்க போய் பார்கவோ அவங்களை தொடர்பு கொள்ளவோ கூடாது. தகவல் வந்ததும் நாம மத்த காரியங்களை கவனிக்கலாம். டாக்டர்ஸ்ஸும் அம்மா தேறி வந்துடுவாங்கங்கற ஹோப் தரமாட்டேங்கறாங்களேப்பா. நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க. எங்களுக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா ப்ராக்டிகலா திங்க் பண்ணி பாருங்கப்பா” என்றான்.

பின் ஒரு வழியாக மூவரும் சத்யவதியை லாஸ்ட் கேர் ஹோமில் சேர்ப்பது என்று முடிவெடுத்து ஒரு லட்சம் டெபாசிட் செய்து அங்கு கொண்டு போய் சத்யவதியை விட்டுவிட்டனர். நினைவு தப்பி இருந்தாலும் அவர்கள் பேசுவது அழுவது நடப்பது எல்லாவற்றையும் சத்யவதியின் மூளையும் மனதும் உணர்ந்து கொண்டுதான் இருந்தது. அவளால் பதிலளிக்க முடியவில்லையே தவிர புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது அவளது பிரார்த்தனையாக ’கடவுளே என்னை சீக்கிரம் அழைத்துக் கொள்ளேன். என்ன பாவம் செய்தேன் என்று என் உறவுகளுக்கு இப்படி ஒரு சிக்கலான சூழ்நிலையை உண்டாக்கும் படி என்னை வைத்திருக்கிறாய்’ என்பதாகத்தான் இருந்தது.

அந்த ஹோமுக்கு சென்றதிலிருந்து அவளுடைய சகல மருத்துவமும் நிறுத்தப்பட்டது. பெயருக்கு சலைன் மட்டும் ஏற்றிக் கொண்டிருந்தனர். அதுவும் இரண்டு நாட்களுக்கு ஒரு பாட்டில் வீதம். மருந்தில்லாமல் உணவில்லாமல் வைத்திருந்தால் கடைசி நிலமையில் இருக்கும் நோயாளிகளின் மரணம் சீக்கிரம் நேரும் என்பதால் இந்த ஏற்பாடு.

அப்போதுதான் சீனியர் டாக்டர்கள் சிலருடனும் உடன் படிக்கும் மாணவ மாணவிகள் சிலருடனும் ப்ராக்டிகல் ஸ்டடிஸ்காக அந்த ஹோமுக்கு சந்தியா வந்தாள். ஒவ்வொரு நோயாளியாக பார்த்து ஆய்வு செய்து அவர்களது வியாதியின் தன்மை அறிகுறி என குறிப்பெடுத்துக் கொண்டே வந்தனர். சத்யவதியை அங்கு பார்த்ததும் சந்தியா அரண்டு போய்விட்டாள். தன் படிப்புக்கும் உதவித் தொகைக்கும் ஏற்பாடு செய்த சத்யாம்மாவா இந்த நிலையில் இங்கு, எனத் துடித்துவிட்டாள்.

தன் சீனியர் டாக்டர் மூலம் அந்த இல்ல உரிமையாளரிட்ம் பேசி குணமாகும் வரையோ அல்லது உயிர் போகும் வரையோ தன் பொறுப்பில் வைத்துக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கினாள். வாங்கிய ஒரு லட்ச ரூபாயை திருப்பித்தர வேண்டாம் என்றும் சொல்லி, பேஷண்டையும் தன் பொறுப்பில் எடுத்துச் செல்வதாகக் கூறியதால் ஹோம் உரிமையாளர் அவளுடன் அனுப்பி வைத்துவிட்டார். எதுவாக இருந்தாலும் தனக்குத்தான் முதல் தகவல் தர வேண்டும் என ஆயிரம்முறை சொல்லியே அனுப்பிவைத்தார்.

ஆம்புலன்ஸில் தன்னுடைய மலைக் கிராமத்துக்கு வேண்டிய மருந்து மற்றும் தேவைப்படும் மருத்துவ வசதியையும் செய்து கொண்டு அழைத்து வந்துவிட்டாள். இயற்கையின் சக்தியோ தெய்வ சக்தியோ, மலைக்காட்டின் ஆரோக்கியமான காற்றும் மாசு அற்ற சூழ்நிலையும் மருந்துகளும் சத்யவதியை படிப்படியாக எழ வைத்து நடமாட வைத்தன. அன்று முதல் இன்று வரை ஒரு குழந்தையைப் போல மாயனும் இருளியும் அதற்கும் மேலே சந்தியாவும் அவளைப் பாதுகாத்து வருகின்றனர்.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த சந்தியாவை அலைபேசி அழைத்தது. எடுத்துப் பேசியவள் மிகுந்த அதிர்ச்சிக்கு போனாள். பேசி முடிக்கும் வரை பொறுமையாக அவளையே பார்த்துக் கொண்டிருந்த சத்யவதி போனை வைத்ததும் “என்னம்மா என்னாச்சு. ஏன் இப்படி பதட்டமாகிட்டே?” என்றாள்.

பாட்டி இதை நல்ல விஷயம்ன்னு எடுத்துக்கறதா இல்லை கெட்ட விஷயம்னு எடுத்துக்கறதான்னு தெரியல பாட்டி. இந்த முறை உங்க செக்கப்காக மட்டும் நான் வரலை. சில விஷ்யங்களில் உங்க முடிவு என்னங்கறத தெளிவு படுத்திக்கலாம்னு தான் வந்தேன். அதுக்கு முன்னாலயே இப்படி ஒரு செய்தி வரும்னு நான் எதிர் பார்க்கல பாட்டி”

”சொல்லும்மா. இனிமே புதுசா எந்த அதிர்ச்சி என்ன தாக்கப் போறது. என்ன விஷயம் சொல்லு”

”மொதல்ல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். அப்புறமா போன்ல வந்த விஷயத்தைச் சொல்றேன். ஆறு மாசத்துக்கு முன்னால நினைவில்ல்லாத ஸ்டேஜ்ல இங்க உங்களை கூட்டிட்டு வந்தேன். கடவுள் அருளால இந்த இப்போ நீங்க எழுந்து நடமாடுற நிலைக்கு வந்துட்டீங்க. ஒரு நேர்மையான டாக்டரா, உங்க குடும்பத்துக்கு தெரியாம இப்படி தனிச்சையா மருத்துவம் பார்க்கறது சரியா என்கிற குற்ற உணர்வு வருது. அதுவும் இல்லாம உங்களுக்கு மறுபடியும் உங்க குடும்பத்தோட சேர்ந்து வாழனும்னு விருப்பம் ஏதாவது இருக்கா பாட்டி.

நீங்க இங்கயே இருக்கனும்னு என்கிறது தான் என்னோட விருப்பம். ஆனா உங்களுக்கு தாத்தாவ பிரிஞ்சு இருக்கறது கஷ்டமா இருக்குமோன்னு ஒரு உறுத்தல். அதுதான் பேசி ஒரு முடிவெடுக்கலான்னு வந்தேன்.

”சரி அடுத்து போன்ல வந்த செய்தி என்ன அதையும் சொல்லு” என்றாள் சத்யவதி சிறு புன்னகையுடன்.

அது வந்து பாட்டி உங்கள சேர்த்து இருந்தாங்க இல்லையா லாஸ்ட் கேர் ஹோம். அதுல பெரிய தீ விபத்து ஏற்பட்டுடுச்சாம். எல்லா நோயாளிகளும் எழுந்து நடமாட முடியாத கண்டிஷன்ல தான இருந்தாங்க. அதனால அவங்களை விட்டுட்டு வேலை ஆட்கள் மேனேஜர் எல்லாம் தப்பிச்சு வெளில வந்துட்டாங்களாம். அவங்களிலும் சில பேருக்கு நிறைய தீக்காயமாம். ஆனா பேத்தடிக் பாட்டி ஒரு நோயாளியைக் கூட யாராலும் காப்பாத்த முடியல. எல்லாரும் தீயில கருகிட்டாங்களாம் பாட்டி.

”சிவ சிவா! என்ன கொடுமையம்மா இது” என்று கூறும் போதே கண்களில் நீர்த்துளி உதயமாகியது.

“பாட்டி இன்னொறு விஷயமும் இருக்கு. நீங்களும் அந்த தீ விபத்துல இறந்துட்டதா தாத்தாக்கு தகவல் கொடுத்தாச்சாம். நீங்க இங்க இருக்கறது டாக்டர், எனக்கு அப்புறம் அந்த ஹோம் உரிமையாளருக்கு மட்டும் தான தெரியும். அவரால இந்த உண்மையை இப்போ சொல்ல முடியாது. சட்ட சிக்கல் வந்துடும்னு பயந்து நீங்களும் விபத்துல சிக்கி எரிஞ்சு போயிட்டதா தகவல் கொடுத்துட்டாங்க. இப்போ என்ன பண்றது நாம“ என்றாள் சந்தியா.

“ம்.. நீ முதல்ல கேட்ட கேள்விக்கு கடவுளே பதில் சொல்லிட்டார் சந்தியா. நான் இங்க இருக்கறது தான் சரின்னு அவனே முடிவெடுத்துட்டான். உங்களுக்கு ஆட்சேபனை இல்லாத பட்சத்துல நான் இந்த கிராமத்துலயே இருந்துடறேன். என் கணவர் பிள்ளைகளைப் பொருத்தமட்டும் நான் இறந்தது இறந்ததாகவே இருக்கட்டும். ஒரு வேளை நீ என்னைப் பார்க்காம இருந்திருந்தா இங்க கூட்டிட்டு வராம இருந்திருந்தா நானும் வியாதி முத்தியோ இல்லைன்ன இந்த விபத்துலயோ உண்மையாகவே செத்திருப்பேன். அது அப்படியே இருக்கட்டும்.

என் வியாதி குணமாகற வியாதி இல்லை. உங்களோட அன்பும் ஆதரவும் நீ தருகிற ட்ரீட்மெண்ட் இந்த இயற்கை சூழல் எல்லாமா சேர்ந்து என் ஆயுசை கொஞ்சமா நீட்டி வச்சுருக்கு அவ்வளவு தான். இன்னும் மூனு மாசமோ ஆறு மாசமோதான் என் ஆயுசு. தேவை இல்லாம நான் உயிரோட இருக்கேன்ன்னு போய் நின்னு மறுபடி என் வியாதி முத்தி அவங்களுக்கு மீண்டும் ஒரு தொல்லையாவோ இல்ல கவலையாகவோ மாற நான் விரும்பலம்மா.

இப்படியே இந்த இயற்கையோடவே நான் இருந்து இறந்தும் போயிடுறேன். என்னைப் பத்தின தகவலை அவங்களுக்கு கொடுக்க வேண்டாம். நான் இறந்துட்டதா நினைச்சு பதினாறு நாள் காரியம் முடிஞ்சதும் தன் அப்பாவை தன்னோட அமெரிக்காக்கு கூட்டிட்டு போயிடுவான் எங்க பிள்ளை. அவர் இப்போதைக்கு ஆரோக்கியமாத்தான் இருக்கார். என் கவலை இல்லாம அவரோட மீதி காலம் பேரப்பிள்ளைகளோட கழியட்டும்.

அவள் பேசுவதையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த சந்தியா கேட்டாள் ”பாட்டி உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமோ இல்ல கோபமோ அவங்க யார் மேலயும் இல்லையா? குடும்பம் குழந்தைகள்னு உழைச்சோமே ஆனா கடைசி காலத்துல இப்படி கைவிட்டுட்டு போயிட்டாங்களேன்னு தோனலையா?”

“ஏன் வருத்தப் படனும் இல்ல கோபப்படனும். அவங்கவங்க வேலை குடும்பம் சூழ்நிலை எல்லாமாத்தான் அவங்கள இந்த முடிவுக்கு தள்ளிச்சு. முடிஞ்ச வரைக்கும் என்னை நல்ல ஹாஸ்பிட்டல்ல வைத்தியம் மருந்து மாத்திரைன்னு செலவு செஞ்சுன்னு நல்லாத்தான பார்துக்கிட்டாங்க. ஓரளவுக்கு மேல நாம யாரையும் சார்ந்தோ எதிர்ப்பார்ப்பு வச்சுகிட்டோ இருக்கக் கூடாதும்மா.

அதுவும் இல்லாம எந்த அம்மாவும் குழந்தைகளை பெத்துக்கும் போதும் சரி வளர்க்கும் போதும் சரி, இவன் நமக்கு கடைசி காலத்துல என்ன செய்வான்னு நினைச்சு வளர்க்கறதுல்ல. தாயோட அன்பு எப்போவுமே நிபந்தனைகள் அற்ற அன்பு.

எங்கேயோ பெய்யற மழை இங்க குளிர் காத்த அனுப்பிவைக்கலையா. ரத்த சம்பந்தம் இல்லாத நீங்க எல்லாம் இப்போ எனக்கு ஆதரவா இல்லையா. அவங்க எல்லாம் சூழ்நிலைக் கைதிகள். அவங்களைக் குத்தம் சொல்லுறதுல எந்த பயனும் இல்லை.

இன்னும் சொற்ப நாட்கள் தான் என் ஆயுசு. இப்போ என் பிரார்த்தனை எல்லாம், என் கணவர் இனிமே என்னோட கவலை இல்லாம மீதி நாட்களை நிம்மதியா கழிக்கனும் என்கிறதும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம அவரோட முடிவு வரனும் என்கிறதும் தான்.

பெண்கள் வீக்கர் செக்ஸ்னு சொல்லுவாங்க ஆனா இந்த மாதிரி சூழ்நிலைகளை புரிஞ்சுக்கற பக்குவமும் ஏத்துக்கற மனப்பாண்மையும் பெண்களுக்குத்தான் ஆண்களைவிட ஸ்டார்ங்கா இருக்கு.  இதோ நான் இன்னும் கொஞ்ச நாள்ல என் பயணத்தை முடிச்சுட்டு பறந்துடுவேன். அங்கே போய் அவருக்காக காத்திருப்பேன். உங்க எல்லாருக்குமான ஆசிகளை மேல இருந்து அனுப்பிக்கிட்டே இருப்பேன் சந்தியா கண்ணு” என்றவளை மனது கனக்க கண்கள் கசிய பார்த்துக் கொண்டே இருந்தாள் சந்தியா.


சிறுகதை - குறை ஒன்றும் இல்லை

இந்த வார குமுதம் இதழில் (01.11.2017) என்னுடைய ”குறை ஒன்றும் இல்லை” சிறுகதை. அழகான படத்துடன் முதல் பத்தி. வரைந்த ஓவியர் ”தமிழ்” அவர்களுக்கும், பிரசுரித்த இதழ் ஆசிரியர் திரு. பிரியா கல்யாண ராமன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 


Tuesday, September 12, 2017

உலக தந்தையர் தினம்(18.06.2017)


உச்சி முகர்கிறாய்
இமை இடுக்கில்
கசிகின்றன பிரியங்கள்…

Wednesday, August 9, 2017

மனம்...

துணிகளை மடித்து வைத்தவாறே
நினைவுகளையும்
மடித்து வைக்கிறாள்
மனம் ஒரு
டிரங்குப்பெட்டி ஆகின்றது..

நானில்லாத என் வீடு...


ஒவ்வொரு முறை
கடக்கையிலும்
அனிச்சையாக
கண்கள் தழுவி விட்டுத்தான்
மீள்கின்றன
சாய்மானத் திண்ணையையும்
பவளமல்லி உதிர்ந்திருக்கும்
கோலமிட்ட மண் வாசலையும்..

Sunday, April 2, 2017

தூக்கம் - சிறுகதை


சாரு ஊஞ்சலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். ரகுநந்தன் மென்மையாக ஊஞ்சலுக்கு வலிக்குமோ அவள் உறக்கத்துக்கு வலிக்குமோ எனும்படி முன்னும் பின்னும் கோவிலில் தாயாரை வைத்து ஆட்டுவது போல ஆட்டிக் கொண்டிருந்தார். இரண்டாவது மகன் கேஷவ்அப்பா ஒரு குட் நியூஸ்என்று கத்தியபடியே கூடத்தில் நுழைந்தான்.
ச்சூ..ச்சூ.. ஏண்டா! உனக்கு மெல்லவே பேசத் தெரியாதா? அம்மா தூங்கறா இல்ல. ஏன் இப்படி கத்தற? அவளே பாவம் அத்தனை வேலையும் முடிச்சுட்டு இப்போ தான் கண் அசற்றா. சித்த பேசாம இரேன்என்றார்.
சரி சரி. மெல்லவே சொல்றேன். கேளுங்கோ. நான் கேம்பஸ் இண்ட்டர்வ்யூல செலக்ட் ஆகிட்டேன். இந்த வருஷம் இண்டென்ஷிப் முடிஞ்சதும் நேரே பூனால இருக்குற இன்ஃபோஸிஸ்ல ப்ளேஸ்மெண்ட். எடுத்த உடனேயே முப்பத்தஞ்சாயிர ரூபா சம்பளம் பா. அதான் உங்ககிட்டயும் அம்மாகிட்டயும் சொல்லி சேவிச்சுக்கலாம்னு வேகமா வந்தேன்என முகமெல்லாம் பூரிப்பாக சொன்னான்.
கணவனின் அன்பையும் ஊஞ்சல் ஆட்டுதலையும், மகனுக்கு வேலை கிடைத்த சந்தோஷச் செய்தியையும் கண்மூடியபடியே அரைத் தூக்கத்தில் ரசித்துக் கொண்டிருந்தாள் சாரு.
சாரு. ஏய் சாரு. ஏய் எழுந்துருடி? புருஷன் கூப்பிடறுது கூட காதுல விழாம அப்படி என்னத்தான் தூக்கமோ அதுவும் பகல்ல? ” என்ற காட்டுக் கத்தலால் திடுக்கிட்டு கண்விழித்த சாரு ஊஞ்சலில் இல்லை கூடத்து மூலையில் மணைகட்டையை தலைக்கு வைத்து தரையில் படுத்திருக்கும் நிதர்சனத்தை உணர்ந்து பதறி எழுந்தாள்.
அப்பாடா! இப்போவாது பரதேவதைக்கு முழிப்பு வந்துதே. போ மணி மூணாயிடுத்து. டிபனை பண்ணி காபியைப் போடுஎன்றபடி டிவி பார்க்கச் சென்றார் ரகுநந்தன்.
உதட்டோரம் உலர்ந்துவிட்ட புன்னகையுடன் எழுந்த சாருவுக்கு கனவில் வந்த இரண்டாவது மகன் கேஷவ் அருகில் இல்லாத உண்மை சுட்டது. அவன் இருந்திருந்தால் அப்பாவின் அதட்டலுக்கு நல்ல பதில் கொடுத்திருப்பான். என்ன செய்வது அனுசரனையானவர்கள் தன் அருகில் இருக்கும் பாக்கியம் தனக்கு இல்லை என்று எண்ணியவாரே தன் ஒரே தர்பாரான சமையல் அறைக்குள் சென்றாள்.
மழைவிட்ட பின்னாலும் இலைகளின் வழி தூரிக்கொண்டிருக்கும் நீரைப் போல கண்ணில் இன்னும் ஊஞ்சல் கனவு  மிச்சம் இருக்க, அதை அசை போட்டுக் கொண்டே அடை வார்க்க ஆரம்பித்தாள் சாரு.
பத்தாவது வரை மட்டுமே படித்திருந்த சாரு தனது பதினெட்டாவது வயதில் தன்னைவிட பன்னிரண்டு வயது மூத்தவரும் வருமானவரித் துறை அதிகாரியாகவும் இருந்த ரகுநந்தனை திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டாள். கணவனை இழந்துவிட்ட தன் தாயின் வற்புறுத்தலில் ரகுநந்தனை கைபிடித்து இந்த வீட்டுக்குள் நுழந்தாள் சாரு. ரகுந்தந்தனும் அவளைப் போலத்தான் கட்டாயத்தின் பேரில் மணந்திருப்பார் போல. ஆரம்பம் முதலே அவளின் உடல் மேல் இருந்த ஈர்ப்பு அவள் மனம் மேல் இருந்திருக்கவில்லை. அடுத்த ஆறு வருடங்களுக்குள் இரண்டு வருட வித்தியாசத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துவிட்டனர். மூத்தவள் திவ்யா, தற்போது திருமணம் ஆகி அமெரிக்காவில் தன் குழந்தையுடன் இருக்கிறாள். அடுத்தது  மகன் வருண். அவனுக்கு அடுத்து கேஷவ். மூத்தவர்கள் இருவரும் குணத்திலும் கோபத்திலும் அப்பாவைப் போலவே. கடைக்குட்டி  கேஷவ் தன்னைப் போல இருப்பதில் சாருவுக்கு மிகப் பெரிய ஆறுதல்.
அவன் இருந்தவரைக்கும் இவர்களது கிண்டலோ கேலியோ அலட்சியமோ அவளைப் பெரிதாக பாதித்தது இல்லை. தன் ஆறுதலுக்கும் தன்னைத் தாங்குவதற்கும் தன் மகன் கேஷவ் இருக்கிறான் என்ற தெம்பே அவளை நகர்த்திச் சென்றது. அவன் வேலை கிடைத்து பெங்களூரு போய்விட்ட இந்த ஆறு  மாதத்தில் அவள் நிரம்பவே தவித்துப் போய்விட்டாள். பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் எப்போதும் சமையலும், டிபனும் இதர வேலைகளும் என எந்திரமாக மாறிவிட்டிருந்த நாட்களில் தூக்கம் ஒன்றுதான் மிகப் பெரிய ஆசுவாசமாக இருந்தது. தூக்கத்தில் தான் அவள் தனக்கு பிடித்ததை நடத்திக் கொண்டாள். பிடித்ததைக் கண்டாள், பேசினாள், சிரித்தாள். இப்போதெல்லாம் எப்போது வேலை முடியும் எப்போது தூங்கப் போகலாம் என்றே இருந்தாள்.  
இரவு எட்டு மணிக்கு மூத்த மகன் வருண் வந்தான். சட்ணிக்கு தாளித்துக் கொண்டிருந்தவளின் இடுப்பில் எதையோ வைத்து சுற்றித் திருப்பினான். ”ஏய்! ஏய்! என்னடா பண்ற. சட்ணி கொட்டிட போறதுஎன்றபடியே திரும்பினாள் சாரு.
”என்னடா இது?”
அம்மா. ரொம்ப நாளா முதுகு வலி முதுகு வலின்னு சொல்லிண்டே இருந்தியே. அதான் இடுப்பச்சுத்தி கட்டுறதுக்கு பெல்ட் வாங்கிண்டு வந்தேன். படுக்கற நேரம் போக வேலை செய்யும் போதேல்லாம் இதை, இதோ இப்படி இறுக்கக் கட்டிக்கோ. வலி தெரியாது. கொஞ்ச நாள்ல சரியாகிடும். வர்ற வழியில நீ போற ஃபிஸியோ தெரபிஸ்ட் குமார் கிளினிக்ல இருந்து வாங்கிண்டு வந்தேன்என்றபடியே அந்த பெல்ட்டை அவளது இடுப்பைச் சுற்றி கட்டிக் காண்பித்தான்.
தேங்ஸ் டா. கை கால் அலம்பிண்டு வா. சூடா அடையும் சட்ணியும் எடுத்து வைக்கிறேன் சாப்பிடுஎன்றபடியே கண்ணோரம் துளிர்த்த நீரை புடவைத் தலைப்பில் ஒற்றிக் கொண்டாள்.
உள்ளுக்குள் பெருமையாக இருந்தது மகனை நினைத்து. இந்த வயதிலேயே அடுத்தவரை  நம்பாமல் தனக்கென்று சுய தொழில் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு பத்து பேருடன் ஆரம்பித்த கம்ப்பெணியை இரண்டே வருடத்தில் ஐம்பது  பேர் உள்ளதாக வளர்த்திருக்கிறான்.  எத்தனை உயர்ந்தாலும் இன்னும் ஆர்ப்பாட்டமில்லாமல் அன்பாக எல்லாரையும் அரவணைத்துச் செல்பவனாக இருப்பது கண்டு மனம் விம்மிக் கொண்டிருந்த போதே
தட் தட் தட் என்று கதவு இடிக்கும் ஓசையில் எழுந்தவள் கட்டில் முனையில் இடித்துக் கொண்டு காலை நொண்டியவாரே  சென்று கதவைத் திறந்தாள். வெளியே மூத்தவன் வருண் தான் கடு கடுவென்று நின்று கொண்டிருந்தான். “எவ்வளவு நேரமா காலிங்க் பெல் அடிக்கறது? கதவை ஒடச்சுதான் உள்ளே நுழையனும் போல இருக்கு. அப்படி என்ன பண்ணிண்டு இருந்த?” என்றான்.
உங்கப்ப்பா படுத்து தூங்க ஆரம்பிச்சுட்டாரா. எனக்கும் கண்ணசந்ததுன்னு கொஞ்ச நேரம் படுத்தேண்டா. அப்படியே தூங்கிட்டேன் போல இருக்கு. அடை வாக்கட்டுமா? கை கால் அலம்பிண்டு வா. மணி என்ன பதினொன்னா? இத்தனை நாழியா ஆயிடுத்துஎன்றபடியே சமையலறையை நோக்கிச் சென்றாள்.
அதெல்லாம் ஒன்னும் வேணாம். உன் அடையையும் அரிசி உப்புமாவையும் எத்தன தடவை சாப்பிடறது. க்ளையண்ட் மீட்டிங்க்ல டின்னரையும் முடிச்சுட்டே தான் வந்தேன். வர வர நல்லா சோம்பேரி ஆகிட்டம்மா நீ. எப்போ பாத்தாலும் தூங்கிண்டே இருக்க. முதல்ல ஒரு நல்ல டாக்டரா போய் பாருஎன்று சொல்லியபடியே அவன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான் வருண்.
ஆமாம் இப்போல்லாம் நான் தூங்க ரொம்பவே ஆசைப் படறேன். நிஜத்துல நடக்காததை, நடக்க முடியாததை எல்லாம் கனவுல காண்றதுக்காகவே நான் கண்ண மூடிக்கறேன். எனக்கு தூக்கம் வேணும். நிறைய நிறைய தூக்கம் வேணும். அதைக் குறைக்க நான் டாக்டர் கிட்ட எல்லாம் போக மாட்டேன் போடாஎன்று மனதினுள் நினைத்தபடியே மறுபடியும் தூங்கப் போனாள் சாரு.
அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை. அமெரிக்காவில் இருக்கும் மகள் திவ்யா போனில் பேசும் நாள். போன் பெல் அடித்தவுடன் எடுத்த ரகுநந்தன் அட்டகாசமாக சிரித்து ஆங்கிலத்தில் பேசும் போதே தெரிந்தது, அடுத்த முனையில் பேரன் அபினவ்தான் பேசுகிறான் என்று. மாற்றி மாற்றி பேரன், பெண், மாப்பிள்ளை என பேசிவிட்டு போன் கைமாறி வருணிடம் வந்தது. அவனும் அலட்டலாக அக்கா அத்திம்பேர் மருமானுடன் நுனி நாக்கு ஆங்கிலத்திலும் நடு நடுவே தங்க்லீஷிலும் பேசினான்.
மறுபடியும் போன் ரகுநந்தனிடம் போக திவ்யா சாருவைப் பற்றிக் கேட்டிருக்க வேண்டும். “அவளா? எங்க இப்போ எல்லாம் எப்போ பார்த்தாலும் தூங்கவே பொழுது சரியா இருக்கு உங்கம்மாக்கு. (சொல்லும் போதே கப கபவென்று எக்காளச் சிரிப்பு வேறு.) ”அதுவும் இன்னைக்கு சாப்பாட்டுக்கு வாழக்கா பொடிமாஸும் பண்ணி, சாயந்தரம் டிபனுக்கு உருளைக்கிழங்கு போண்டாவும் பண்ணினா. ஒன்னு ரெண்டு அதிகமா சாப்பிடுட்டாளோ என்னமோ. (மறுபடியும் ஹா ஹா ஹா என்று ஒரு நக்கல் சிரிப்பு.) சிரிப்புக்கு நடுவே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்நெஞ்சு வலிக்கறா மாதிரி இருக்கு. சித்த படுத்துக்கறேன்னு அப்போவே போய் படுத்துட்டாஎன்று படுக்கை அறைப் பக்கம் ஒரு பார்வை பார்த்துவிட்டு மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
உள்ளே சாருவுக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. கை உளைச்சலுடன் நெஞ்சும் அடைத்து அடைத்து வலிக்க. ஏண்ணா. ’சித்த வர்ரேளா. எனக்கு என்னமோ பண்றதுஎன்றபடியே தள்ளாடி படுக்கையைவிட்டு எழ முயற்சித்துக் கொண்டிருந்தாள். போன் பேசிக்கொண்டே அதை கவனித்த ரகு வேகமாக ஓடி வந்து அவளைத் தாங்கிப் பிடித்தார். ’டேய் வருண் சீக்கிரம் தண்ணி கொண்டு வாடா. அம்மாக்கு என்னமோ பண்றது பாருஎன்று கத்தினார். தண்ணீர் செம்புடன் ஓடி வந்த வருண்  அம்மாவை தோள் மேல் சாய்த்துக் கொண்டுஅம்மா. என்னம்மா பண்றது உனக்கு?’ என்று பதறினான்.
ரகு அவளைக் கட்டிக் கொண்டு அழவே ஆரம்பித்துவிட்டார். என்னடி திடீர்னு ஆச்சு. டேய் ஆம்புலன்ஸ கூப்பிடுடா என்றார். இருவரையும் கண்ணில் நீர் தளும்பி நிற்க பார்த்த சாரு. ’இல்லண்ணா. நான் பொழைப்பேன்னு தோனல. உங்களை எல்லாம் விட்டுட்டு போயிடுவேன் போல இருக்குஎனக்கு கேஷவை பார்க்கனும். கேஷ்வை கூப்பிடுங்கோ’  என்று திக்கித் திணறி வார்த்தைகளை உதிர்த்தாள்.
ஐயோ அப்படியெல்லாம் சொல்லாதடி, ஆயிரம் தான் திட்டினாலும் நீதாண்டி நம்மாத்துக்கு அஸ்திவாரம். நீ இல்லாம இந்த வீடு வீடா இருக்காது சாருஎன்று ரகு கலங்க.
அம்மா. என்னம்மா இப்படி எல்லாம் பேசற? இனிமே நான் அடையும் அரிசிஉப்புமாவுமே சாப்பிடறேன் மா. உன்னை படுத்த மாட்டேன் மா. பிஸினஸ் டென்ஷனை நான் யாருகிட்ட காட்டுவேன். அதுதான் உங்கிட்ட அப்படி பேசிட்டேன். மன்னிச்சுடும்மா. அதுக்காக இப்படி ஒரு தண்டனையை எங்களுக்கு தராதம்மாஎன்று சாருவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் வருண்.
யார் எப்படிக் கதறினாலும் உயிர் பறவை கூட்டிலிருந்து பிரியும் நேரத்தை தடுத்தா நிறுத்த முடியும்? அவளது உயிர் பிரிந்தது.

இப்போதும் சாரு வழக்கம் போல தூங்கிக் கொண்டுதான் இருந்தாள் தன் கடைசி கனவை கண்டபடியே.
கூடத்தில் ரகுசரி அதை விடு போன தடவை வந்தப்போ எனக்குன்னு  ஒரு  ஐ போன் வாங்கிண்டு வந்தியே இப்போ அது அவுட் டேட்டட் ஆகிடுத்து.  இந்த தடவை வர்றச்ச அடுத்த மாடல் போனும் அப்படியே  லேட்டஸ்ட் காண்ஃபிகரேஷன்ல லேப்டாப்பும்  வாங்கிண்டு வாஎன்று போனில் மகளிடம் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
**************************

தினமணி கதிரில் (02.04.2017) பிரசுரமான கதை.





முதல் சிறுகதை - ”தூக்கம்”

இன்றைய தினமணி கதிரில் 

என்னுடைய 

முதல் சிறுகதை “தூக்கம்” 


 பிரசுரமாகியுள்ளது. 


சமீபத்தில் தவறிய 

பிரபல எழுத்தாளர் 


திரு. அசோகமித்திரன் 

அவர்களின் சிறப்புச் 


சிறுகதை 

பிரசுரமாகியுள்ள அதே 


இதழில் என்னுடைய 

முதல் சிறுகதையும் 


வந்துள்ளது கூடுதல் 

மகிழ்ச்சி.