சாரு ஊஞ்சலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். ரகுநந்தன் மென்மையாக ஊஞ்சலுக்கு வலிக்குமோ அவள் உறக்கத்துக்கு வலிக்குமோ
எனும்படி முன்னும் பின்னும் கோவிலில் தாயாரை வைத்து ஆட்டுவது
போல ஆட்டிக் கொண்டிருந்தார். இரண்டாவது
மகன் கேஷவ் ”அப்பா ஒரு
குட் நியூஸ்” என்று கத்தியபடியே
கூடத்தில் நுழைந்தான்.
“ச்சூ..ச்சூ.. ஏண்டா! உனக்கு
மெல்லவே பேசத் தெரியாதா? அம்மா
தூங்கறா இல்ல. ஏன் இப்படி
கத்தற? அவளே பாவம் அத்தனை
வேலையும் முடிச்சுட்டு இப்போ தான் கண்
அசற்றா. சித்த பேசாம இரேன்”
என்றார்.
“சரி சரி. மெல்லவே சொல்றேன்.
கேளுங்கோ. நான் கேம்பஸ் இண்ட்டர்வ்யூல
செலக்ட் ஆகிட்டேன். இந்த வருஷம் இண்டென்ஷிப்
முடிஞ்சதும் நேரே பூனால இருக்குற
இன்ஃபோஸிஸ்ல ப்ளேஸ்மெண்ட். எடுத்த உடனேயே முப்பத்தஞ்சாயிர
ரூபா சம்பளம் பா. அதான்
உங்ககிட்டயும் அம்மாகிட்டயும் சொல்லி சேவிச்சுக்கலாம்னு வேகமா
வந்தேன்” என முகமெல்லாம் பூரிப்பாக
சொன்னான்.
கணவனின்
அன்பையும் ஊஞ்சல் ஆட்டுதலையும், மகனுக்கு
வேலை கிடைத்த சந்தோஷச் செய்தியையும்
கண்மூடியபடியே அரைத் தூக்கத்தில் ரசித்துக்
கொண்டிருந்தாள் சாரு.
“சாரு.
ஏய் சாரு. ஏய் எழுந்துருடி?
புருஷன் கூப்பிடறுது கூட காதுல விழாம
அப்படி என்னத்தான் தூக்கமோ அதுவும் பகல்ல?
” என்ற காட்டுக் கத்தலால் திடுக்கிட்டு கண்விழித்த சாரு ஊஞ்சலில் இல்லை
கூடத்து மூலையில் மணைகட்டையை தலைக்கு வைத்து தரையில்
படுத்திருக்கும் நிதர்சனத்தை உணர்ந்து பதறி எழுந்தாள்.
“அப்பாடா!
இப்போவாது பரதேவதைக்கு முழிப்பு வந்துதே. போ மணி மூணாயிடுத்து.
டிபனை பண்ணி காபியைப் போடு”
என்றபடி டிவி பார்க்கச் சென்றார்
ரகுநந்தன்.
உதட்டோரம் உலர்ந்துவிட்ட
புன்னகையுடன் எழுந்த சாருவுக்கு கனவில் வந்த இரண்டாவது மகன் கேஷவ் அருகில் இல்லாத உண்மை
சுட்டது. அவன் இருந்திருந்தால் அப்பாவின் அதட்டலுக்கு நல்ல பதில் கொடுத்திருப்பான்.
என்ன செய்வது அனுசரனையானவர்கள் தன் அருகில் இருக்கும் பாக்கியம் தனக்கு இல்லை என்று
எண்ணியவாரே தன் ஒரே தர்பாரான சமையல் அறைக்குள் சென்றாள்.
மழைவிட்ட
பின்னாலும் இலைகளின் வழி தூரிக்கொண்டிருக்கும் நீரைப் போல
கண்ணில் இன்னும் ஊஞ்சல் கனவு மிச்சம்
இருக்க, அதை அசை போட்டுக்
கொண்டே அடை வார்க்க ஆரம்பித்தாள்
சாரு.
பத்தாவது வரை மட்டுமே
படித்திருந்த சாரு தனது பதினெட்டாவது வயதில் தன்னைவிட பன்னிரண்டு வயது மூத்தவரும் வருமானவரித்
துறை அதிகாரியாகவும் இருந்த ரகுநந்தனை திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டாள். கணவனை
இழந்துவிட்ட தன் தாயின் வற்புறுத்தலில் ரகுநந்தனை கைபிடித்து இந்த வீட்டுக்குள் நுழந்தாள்
சாரு. ரகுந்தந்தனும் அவளைப் போலத்தான் கட்டாயத்தின் பேரில் மணந்திருப்பார் போல. ஆரம்பம்
முதலே அவளின் உடல் மேல் இருந்த ஈர்ப்பு அவள் மனம் மேல் இருந்திருக்கவில்லை. அடுத்த
ஆறு வருடங்களுக்குள் இரண்டு வருட வித்தியாசத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துவிட்டனர்.
மூத்தவள் திவ்யா, தற்போது திருமணம் ஆகி அமெரிக்காவில் தன் குழந்தையுடன் இருக்கிறாள்.
அடுத்தது மகன் வருண். அவனுக்கு அடுத்து கேஷவ்.
மூத்தவர்கள் இருவரும் குணத்திலும் கோபத்திலும் அப்பாவைப் போலவே. கடைக்குட்டி கேஷவ் தன்னைப் போல இருப்பதில் சாருவுக்கு மிகப்
பெரிய ஆறுதல்.
அவன் இருந்தவரைக்கும்
இவர்களது கிண்டலோ கேலியோ அலட்சியமோ அவளைப் பெரிதாக பாதித்தது இல்லை. தன் ஆறுதலுக்கும்
தன்னைத் தாங்குவதற்கும் தன் மகன் கேஷவ் இருக்கிறான் என்ற தெம்பே அவளை நகர்த்திச் சென்றது.
அவன் வேலை கிடைத்து பெங்களூரு போய்விட்ட இந்த ஆறு
மாதத்தில் அவள் நிரம்பவே தவித்துப் போய்விட்டாள். பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல்
எப்போதும் சமையலும், டிபனும் இதர வேலைகளும் என எந்திரமாக மாறிவிட்டிருந்த நாட்களில்
தூக்கம் ஒன்றுதான் மிகப் பெரிய ஆசுவாசமாக இருந்தது. தூக்கத்தில் தான் அவள் தனக்கு பிடித்ததை
நடத்திக் கொண்டாள். பிடித்ததைக் கண்டாள், பேசினாள், சிரித்தாள். இப்போதெல்லாம் எப்போது
வேலை முடியும் எப்போது தூங்கப் போகலாம் என்றே இருந்தாள்.
இரவு எட்டு மணிக்கு மூத்த
மகன் வருண் வந்தான். சட்ணிக்கு
தாளித்துக் கொண்டிருந்தவளின் இடுப்பில் எதையோ வைத்து சுற்றித்
திருப்பினான். ”ஏய்! ஏய்! என்னடா
பண்ற. சட்ணி கொட்டிட போறது”
என்றபடியே திரும்பினாள் சாரு.
”என்னடா
இது?”
”அம்மா.
ரொம்ப நாளா முதுகு வலி
முதுகு வலின்னு சொல்லிண்டே இருந்தியே.
அதான் இடுப்பச்சுத்தி கட்டுறதுக்கு பெல்ட் வாங்கிண்டு வந்தேன்.
படுக்கற நேரம் போக வேலை
செய்யும் போதேல்லாம் இதை, இதோ இப்படி
இறுக்கக் கட்டிக்கோ. வலி தெரியாது. கொஞ்ச
நாள்ல சரியாகிடும். வர்ற வழியில நீ
போற ஃபிஸியோ தெரபிஸ்ட் குமார்
கிளினிக்ல இருந்து வாங்கிண்டு வந்தேன்”
என்றபடியே அந்த பெல்ட்டை அவளது
இடுப்பைச் சுற்றி கட்டிக் காண்பித்தான்.
”தேங்ஸ்
டா. கை கால் அலம்பிண்டு
வா. சூடா அடையும் சட்ணியும்
எடுத்து வைக்கிறேன் சாப்பிடு” என்றபடியே கண்ணோரம் துளிர்த்த நீரை புடவைத் தலைப்பில்
ஒற்றிக் கொண்டாள்.
உள்ளுக்குள்
பெருமையாக இருந்தது மகனை நினைத்து. இந்த
வயதிலேயே அடுத்தவரை நம்பாமல்
தனக்கென்று சுய தொழில் ஒன்றை
ஏற்படுத்திக் கொண்டு பத்து பேருடன்
ஆரம்பித்த கம்ப்பெணியை இரண்டே வருடத்தில் ஐம்பது
பேர்
உள்ளதாக வளர்த்திருக்கிறான். எத்தனை
உயர்ந்தாலும் இன்னும் ஆர்ப்பாட்டமில்லாமல் அன்பாக
எல்லாரையும் அரவணைத்துச் செல்பவனாக இருப்பது கண்டு மனம் விம்மிக்
கொண்டிருந்த போதே
தட் தட் தட் என்று
கதவு இடிக்கும் ஓசையில் எழுந்தவள் கட்டில்
முனையில் இடித்துக் கொண்டு காலை நொண்டியவாரே சென்று
கதவைத் திறந்தாள். வெளியே மூத்தவன் வருண்
தான் கடு கடுவென்று நின்று
கொண்டிருந்தான். “எவ்வளவு நேரமா காலிங்க்
பெல் அடிக்கறது? கதவை ஒடச்சுதான் உள்ளே
நுழையனும் போல இருக்கு. அப்படி
என்ன பண்ணிண்டு இருந்த?” என்றான்.
“உங்கப்ப்பா
படுத்து தூங்க ஆரம்பிச்சுட்டாரா. எனக்கும்
கண்ணசந்ததுன்னு கொஞ்ச நேரம் படுத்தேண்டா.
அப்படியே தூங்கிட்டேன் போல இருக்கு. அடை
வாக்கட்டுமா? கை கால் அலம்பிண்டு
வா. மணி என்ன பதினொன்னா?
இத்தனை நாழியா ஆயிடுத்து” என்றபடியே
சமையலறையை நோக்கிச் சென்றாள்.
“அதெல்லாம்
ஒன்னும் வேணாம். உன் அடையையும்
அரிசி உப்புமாவையும் எத்தன தடவை சாப்பிடறது.
க்ளையண்ட் மீட்டிங்க்ல டின்னரையும் முடிச்சுட்டே தான் வந்தேன். வர
வர நல்லா சோம்பேரி ஆகிட்டம்மா
நீ. எப்போ பாத்தாலும் தூங்கிண்டே
இருக்க. முதல்ல ஒரு நல்ல
டாக்டரா போய் பாரு” என்று
சொல்லியபடியே அவன் அறைக்குள் சென்று
கதவை சாத்திக் கொண்டான் வருண்.
’ஆமாம்
இப்போல்லாம் நான் தூங்க ரொம்பவே
ஆசைப் படறேன். நிஜத்துல நடக்காததை,
நடக்க முடியாததை எல்லாம் கனவுல காண்றதுக்காகவே
நான் கண்ண மூடிக்கறேன். எனக்கு
தூக்கம் வேணும். நிறைய நிறைய
தூக்கம் வேணும். அதைக் குறைக்க
நான் டாக்டர் கிட்ட எல்லாம்
போக மாட்டேன் போடா’ என்று மனதினுள்
நினைத்தபடியே மறுபடியும் தூங்கப் போனாள் சாரு.
அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை. அமெரிக்காவில்
இருக்கும் மகள் திவ்யா போனில்
பேசும் நாள். போன் பெல்
அடித்தவுடன் எடுத்த ரகுநந்தன் அட்டகாசமாக
சிரித்து ஆங்கிலத்தில் பேசும் போதே தெரிந்தது,
அடுத்த முனையில் பேரன் அபினவ்தான் பேசுகிறான்
என்று. மாற்றி மாற்றி பேரன்,
பெண், மாப்பிள்ளை என பேசிவிட்டு போன்
கைமாறி வருணிடம் வந்தது. அவனும் அலட்டலாக
அக்கா அத்திம்பேர் மருமானுடன் நுனி நாக்கு ஆங்கிலத்திலும்
நடு நடுவே தங்க்லீஷிலும் பேசினான்.
மறுபடியும்
போன் ரகுநந்தனிடம் போக திவ்யா சாருவைப்
பற்றிக் கேட்டிருக்க வேண்டும். “அவளா? எங்க இப்போ
எல்லாம் எப்போ பார்த்தாலும் தூங்கவே
பொழுது சரியா இருக்கு உங்கம்மாக்கு.
(சொல்லும் போதே கப கபவென்று
எக்காளச் சிரிப்பு வேறு.) ”அதுவும் இன்னைக்கு
சாப்பாட்டுக்கு வாழக்கா பொடிமாஸும் பண்ணி,
சாயந்தரம் டிபனுக்கு உருளைக்கிழங்கு போண்டாவும் பண்ணினா. ஒன்னு ரெண்டு அதிகமா
சாப்பிடுட்டாளோ என்னமோ. (மறுபடியும் ஹா ஹா ஹா
என்று ஒரு நக்கல் சிரிப்பு.)
சிரிப்புக்கு நடுவே தொடர்ந்து சொல்லிக்
கொண்டிருந்தார் ”நெஞ்சு வலிக்கறா மாதிரி
இருக்கு. சித்த படுத்துக்கறேன்னு அப்போவே
போய் படுத்துட்டா” என்று படுக்கை அறைப்
பக்கம் ஒரு பார்வை பார்த்துவிட்டு
மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
உள்ளே சாருவுக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. கை உளைச்சலுடன் நெஞ்சும்
அடைத்து அடைத்து வலிக்க. ஏண்ணா.
’சித்த வர்ரேளா. எனக்கு என்னமோ பண்றது’
என்றபடியே தள்ளாடி படுக்கையைவிட்டு எழ
முயற்சித்துக் கொண்டிருந்தாள். போன் பேசிக்கொண்டே அதை
கவனித்த ரகு வேகமாக ஓடி
வந்து அவளைத் தாங்கிப் பிடித்தார்.
’டேய் வருண் சீக்கிரம் தண்ணி
கொண்டு வாடா. அம்மாக்கு என்னமோ
பண்றது பாரு’ என்று கத்தினார்.
தண்ணீர் செம்புடன் ஓடி வந்த வருண் அம்மாவை
தோள் மேல் சாய்த்துக் கொண்டு
’அம்மா. என்னம்மா பண்றது உனக்கு?’ என்று
பதறினான்.
ரகு அவளைக் கட்டிக் கொண்டு
அழவே ஆரம்பித்துவிட்டார். என்னடி திடீர்னு ஆச்சு.
டேய் ஆம்புலன்ஸ கூப்பிடுடா என்றார். இருவரையும் கண்ணில் நீர் தளும்பி
நிற்க பார்த்த சாரு. ’இல்லண்ணா.
நான் பொழைப்பேன்னு தோனல. உங்களை எல்லாம்
விட்டுட்டு போயிடுவேன் போல இருக்கு’எனக்கு
கேஷவை பார்க்கனும். கேஷ்வை கூப்பிடுங்கோ’ என்று
திக்கித் திணறி வார்த்தைகளை உதிர்த்தாள்.
ஐயோ அப்படியெல்லாம் சொல்லாதடி, ஆயிரம் தான் திட்டினாலும்
நீதாண்டி நம்மாத்துக்கு அஸ்திவாரம். நீ இல்லாம இந்த
வீடு வீடா இருக்காது சாரு’
என்று ரகு கலங்க.
”அம்மா.
என்னம்மா இப்படி எல்லாம் பேசற?
இனிமே நான் அடையும் அரிசிஉப்புமாவுமே
சாப்பிடறேன் மா. உன்னை படுத்த
மாட்டேன் மா. பிஸினஸ் டென்ஷனை
நான் யாருகிட்ட காட்டுவேன். அதுதான் உங்கிட்ட அப்படி
பேசிட்டேன். மன்னிச்சுடும்மா. அதுக்காக இப்படி ஒரு தண்டனையை
எங்களுக்கு தராதம்மா” என்று சாருவை நெஞ்சோடு
அணைத்துக் கொண்டான் வருண்.
யார் எப்படிக் கதறினாலும் உயிர் பறவை கூட்டிலிருந்து
பிரியும் நேரத்தை தடுத்தா நிறுத்த
முடியும்? அவளது உயிர் பிரிந்தது.
இப்போதும்
சாரு வழக்கம் போல தூங்கிக்
கொண்டுதான் இருந்தாள் தன் கடைசி கனவை
கண்டபடியே.
கூடத்தில்
ரகு ”சரி அதை விடு
போன தடவை வந்தப்போ எனக்குன்னு
ஒரு
ஐ
போன் வாங்கிண்டு வந்தியே இப்போ அது
அவுட் டேட்டட் ஆகிடுத்து. இந்த தடவை வர்றச்ச
அடுத்த மாடல் போனும் அப்படியே லேட்டஸ்ட் காண்ஃபிகரேஷன்ல லேப்டாப்பும் வாங்கிண்டு
வா” என்று போனில் மகளிடம்
பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
**************************
தினமணி கதிரில் (02.04.2017) பிரசுரமான கதை.
1 comment:
அன்பும் அனுசரணையும் இல்லாத ஆத்துக்காரர் + மகன்களை அடைந்துள்ள அம்மாக்களின் பாடு மிகவும் திண்டாட்டமே என்பதனை, நன்கு தெரிந்தவர்களின் அனுபவத்தில் உணர்ந்து மிகவும் அருமையாகவும் திறமையாகவும் எழுதியுள்ளீர்கள்.
தங்களின் தங்கமான எழுத்துக்களையும், கற்பனைகளையும் மிகவும் ரஸித்து ருசித்துப் படிக்க முடிந்தது என்னால்.
இன்றைய தினமணி கதிரில் வெளியாகியுள்ள தங்களின் இந்தக் கதைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள். தொடர்ந்து இதுபோன்ற நல்ல சிறுகதைகள் எழுத முயற்சி செய்யுங்கோ.
Post a Comment