Monday, May 23, 2016

முதல் கவிதைத் தொகுப்பு - “மௌனத்தின் சப்தங்கள்”


தலைப் பிரசவத்தின் பின்னான என் முதல் பிரசவம், ஆம்  எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும் உயிர் சேர்த்து நான் பிரசவித்த என் கவிதைக் குழந்தை “மௌனத்தின் சப்தங்கள்” ஆக இன்று என் கைகளில். 11.05.2016 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள். இரண்டு விசேஷ சம்பவங்களை கொண்டிருக்கும் நாள். ஒன்று எங்கள் மகன் அத்வித்தின் உபநயன விழா. மற்றொன்று, அதே நாளில் விழாவின் தொடர்ச்சியாக எளிய முறையில் அரங்கேறிய என் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.

சந்தியா பதிப்பகம் திரு. நடராஜன் அவர்கள் கவிதைத் தொகுப்பை வழங்க, தொழிலதிபரும், கரூர் அரவிந்-ஏ-டிரேடர்ஸ்  ன் உரிமையாளருமான
திரு.வி. தங்கவேலு அவர்கள் பெற்றுக் கொண்டார். பங்கேற்று, வாழ்த்தி விழாவினை சிறப்பித்த இருவருக்கும் எனது பணிவான வணக்கங்கள் மற்றும் அன்று நடந்த இரு விழாக்களிலும் பங்கு கொண்டு, தொகுப்பை பெற்றுக் கொண்டு வாழ்த்தி உற்சாகமளித்த உறவுகள் மற்றும் நட்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  

பதட்டம், அவசரம் காரணமாக சிற்சில தவறுகளை கொண்டுள்ள போதும், கைகளில் தவழும் புத்தகம் பார்க்கையில், இளம் சிசுவை  நுகருவதைப் போன்ற ஒரு நெகிழ்வும் உற்சாகமும் ஏற்படாமல் இல்லை.
கலாப்ரியா, கல்யாண்ஜி என மேலும் பல ஜாம்பவான்களின் படைப்புகளை வெளியிட்டிருக்கும், வெளியிட்டுக் கொண்டே இருக்கும் சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக என்னுடைய தொகுப்புமா?!...நினைக்கையிலேயே பரவசத்துடன் கூடிய ஒரு வித பயமும் பதட்டமும் கலவையாக தோன்றுகிறது.

இத் தொகுப்பு எந்த அளவு உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் எனத் தெரியாது. நான்கு சுவற்றுக்குளான என் உலகத்தில் நான் எழுதிய கிறுக்கல்களை கவிதைகள் எனக் கொண்டு, நம்பிக்கையுடன் ஊக்கமளித்து, மிகக் குறுகிய கால அவகாசத்தில் பிரசுரித்து தந்த சந்தியா பதிப்பகத்தாருக்கும், முழு முனைப்புடன் இதை செயல்படுத்தி, சாத்தியமாக்கிய என் கணவர் பாலாஜிக்கும் நன்றிகள் பல.
  

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சமீபத்தில் உபநயன விழா கண்ட வடுவான (வடு மாங்காயான) தங்கள் மகன் ’அத்வித்’க்கு என் மனம் நிறைந்த நல்லாசிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தலைப் பிரசவத்தின் பின்னான தங்களின் முதல் பிரசவமான தங்களின் கவிதைக் குழந்தை “மௌனத்தின் சப்தங்கள்” ..... பிரபல ’சந்தியா பதிப்பகம்’ என்ற மருத்துவமனை மூலம் சுகப்பிரஸவம் ஆகியுள்ளது கேட்க மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

இதுபோன்றே மென்மேலும் அடுத்தடுத்து பல்வேறு பிரஸவங்கள் நிகழவும் வாழ்த்துகிறேன்.

SOS said...

வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் மிக நன்றி வை.கோ சார்.