Tuesday, December 13, 2011

நிராகரிப்பு....









நிராகரித்தல் பழகு
நிராகரித்தல் ஏற்கவும் பழகு
நிராகரிப்பு ஒரு நிமிட வலி
ஒரு மணி நேரக் கவலை
ஒரு நாள் துக்கம்...

நிராகரிப்பு மறைந்த ஏற்பு
நிராகரிப்பு மறைத்த ஒப்புதல்
வாழ்நாள் பெருந்துயரம்...

உயிர்ன் கடைசி சொட்டு
முடியும் வரைக்குமான
பெருங்காயம்...

நிராகரிப்பு மீறி வரும்
அங்கீகாரத்தின்
விலை அவமானம்
நிராகரிப்பு கொடுப்போரின் பலம்
பெறுவோரின் பலவீனம்...

ஏதேனும் ஒரு தருணம்
நிராகரித்தலின் நிராகரிப்பு
பாவத்தின் சம்பளமாகப் பெறப்படும்...

ஆகையால் நிராகரித்தல் பழகு
நிராகரிப்பை ஏற்கவும் பழகு
சில நேரங்களில் கசப்பும்
நல் மருந்தாகும்...

Sunday, December 11, 2011

உடையாத பயணம்....













மொட்டை மாடி
நிலவு மழை
அதில் ஒற்றை நாற்காலி
உனக்கும் எனக்குமாய்...

ஊருக்கே தெரியும் நிலா
அதன் வழியே
நம் விழிகளுக்கு மட்டுமே புரியும்
நயன பாஷை...

என் உடல் வெப்பம் குறைய
நீ குளிக்கையில்
நான் நனையும் விந்தை!...

உன் பசிக்கு நான் புசிக்க
உன் வயிரோடு சேர்ந்து
மனமும் நிறையும் மாயம்!...

என் கையில் காயம்
உன் கண்ணில் வலி

எல்லாம் ஒட்டியிருந்தும்
ஒட்டாத தண்டவாளங்களாய்
இணைந்தே செல்கிறோம்
உடையாத பயணத்திற்காக...

Saturday, December 10, 2011

வேண்டும்....















எனக்கு உன் ஸ்பரிசம் இல்லா
தீண்டல் வேண்டும்

என் நாசிக்குச் சிக்காத
உன் வாசம் வேண்டும்

வாக்கியத்தில் சிக்காத உன்
வார்த்தைகளின் சீண்டல் வேண்டும்

உன் மௌனத்தின் சத்தம் கூட
என்னுள் விதைக்குதடா யுத்தம்...

Friday, December 9, 2011

உயிர் உரசும்....














என்றேனும் உன் உயிர் உரசும்
என் நினைவலைகள்
தழுவிச் செல்லும் உனை
நான் சொல்லில் மறைத்து
உன்னிடம் சொல்ல மறந்த
என் காதலை...

Thursday, December 8, 2011

மௌன வரம்...























இந்த ஆழ்ந்த மௌனத்தை
யாரிடம் பரிசாகப் பெற்றாய்?

என் எண்ணக் கதறல்கள் உனைக்
கூவி கூவி அழைத்த போதும்

வார்த்தை அம்புகள் உனை
சரம் சரமாய்த் தொடுத்த போதும்

சிஞ்சித்தும் கிழியாத இந்த
அடர்ந்த மௌனத்தை
எந்த அரக்கனிடம் வரமாகப் பெற்றாய்!...

Tuesday, December 6, 2011

அவன் என்பது.....












அடைந்துவிட்டதென நினைத்து
அவன்
இழந்துவிட்டது அதிகம்...

பெற்றுவிட்டது என எண்ணி
அவன்
தொலைத்துவிட்டது ஏராளம்...

கடவுளும் சாத்தானும்
அவன்
சக்கரத்தின் இரு பகுதிகள்...

ஒருவரை அடைந்த நேரம்
அவன்
மற்றவர் பால் தனிச்சையாக
நகர்த்தப் படுகிறான்...

இந்த நகர்தலில் சுவடுகள்
என எதையும்
அவன்
பதித்துச் செல்லவில்லை...

அவனுக்கு
என சக்தி எதுவும் இருக்கவில்லை

அவனுக்கு
என புத்தியும் ஏதும் இருக்கவில்லை

அவன்
என்பது ஒரு பெயர்ச் சொல்லாகவே
இருக்கும் வரை

நான் என்பதில்
அவன் மூழ்காதவரை

அவன்
வெறுமையின் உச்சத்தில்
வளர்ச்சிகள் முடித்த
முழு நிலவாகிவிடுகிறான்..

Friday, December 2, 2011

ஆதலால்...












எனக்குத் தென்றல் பிடிக்கும் தான்
ஆனால் பிடிக்கவில்லை?!..
நானும் நீயும் பேசுகையில்
இடையில் நுழைவதை
ஆதலால்...
இடைவெளி குறைத்துவிடு..