Tuesday, February 12, 2013

ஒரு கவிதை...



ஒவ்வொரு முறையும் எதையாவது
கொடுத்துவிட்டே செல்கிறாய்
ஒரு மிட்டாய் ஒரு மயிலிறகு
ஒரு புத்தகம் ஒரு புன்னகை
குறைந்தபட்சம் ஒரு முத்தமாவது...

இதற்கு ஈடாக என்னால்
எதைத் திருப்பித் தர முடியும்?

கட்டுப்பாடான தழுவல்???
மண் திண்ணும் மெய்???
உச்சகட்டப் பொய்
என் உயிர்???

ஒத்திகையின்றி இயல்பாக
எதைத் தருவது?

அதிகபட்சம்

சொற்களுக்கு முன்னும் பின்னும்
உனக்கு மட்டுமே புரியும் மௌனத்தை
புதைத்து வைத்துள்ள
ஒரு கவிதையைத் தவிர!!!...

Tuesday, February 5, 2013

எனது நாள்..



எனது நாளின் 
இருபத்து மூன்று மணிகளும்
ஐம்பத்து ஒன்பது நிமிடங்களும்
கேள்விக்குறியாகக் 
காத்திருக்கின்றன

உனது அழைப்பு என்கிற
ஒற்றைப் புள்ளி 
முடித்து வைக்கும்
அக் கடைசி வினாடிக்காக...

Sunday, February 3, 2013

நீயும்.. நீ அற்ற கோடிகளும்...



அடுப்படியில் அவியல் சமைப்பது முதல்
அம்மா வீட்டுக்கு போவது வரை

என் மூக்கு கண்ணாடி உடைஞ்சிருச்சு
குளியலரைக் குழாயில் தண்ணீர் வரலை

இந்தமாத அரிசி என்ன ரகம் வாங்கறது
பூஜைக்கு இந்தமுறை பொடி சாம்பிராணியா
கம்ப்யூட்டர் சாம்பிராணியா?

துணிக்கடையில் நிற்கையில்
எந்த நிறத்தில் எந்த விதத்தில் எடுத்து
நான் உடுத்தினால் உனக்குப் பிடிக்கும்?

உன் முகம் நோக்கி பதிலுக்கு
நிற்பது முதல்

என் உருண்டை முகத்துக்கு
நீளப் பொட்டிடாமல்
உனக்குப் பிடிக்கும் என
வட்டப் பொட்டிடுவது வரை

ஆதியும் அந்தமுமாய்
உனக்காகவே, உனைக் கேட்டே
உன் பொருட்டே உனை ஆதாரமாக்கியே
சுழன்றுவிட்ட எனக்கு

உனைப்பிரிந்து நான் வருந்தக் கிடைக்கும்
கோடிகளின் பூஜ்ஜியம் கூட
நீயின்றி எண்ணத் தெரியாதே!!!..

அதற்காகவேணும் பிரியாதிரு...

Wednesday, January 30, 2013

என் அப்பாவின் அன்பு..


அரைக்கிலோ இனிப்பும்
அரைக்கிலோ காரமும்
சாமிக்கு கதம்பமும் எங்களுக்கு
மல்லிகையுமாக
அப்பா வீட்டுக்குள் நுழைந்தாரென்றால்
முதல் தேதி சம்பள நாள்...

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தாலும்
அப்பா வாங்கிவரும் என்னமாச்சும்காக
கண்கள் சொருக அரைத் தூக்கத்தில்
காத்திருந்து கட்டிக் கொண்டது 
ஒரு காலம்...

நாள் கிழமை பண்டிகையில்
கண்ணாடி வளையல்களும்
பாடர் வைத்த பாவாடை தாவணியும்
தவனை முறையில் வந்தாலும்
சித்தாடை கட்டிய சிண்ட்ரெல்லாவாய்
சிரிப்புடன் சுற்றி சுற்றி வந்தது
பொற்காலம்..

இன்றும் கிடைக்கிறது
அதைவிடவும் அதிகமாகவும் உசத்தியாகவும்
இலையின் ஓரம் இனிப்புத் துண்டுடன்
சுருட்டப்பட்டிருக்கும் என் அப்பாவின்
அன்பைத்தவிர...

Monday, December 31, 2012

வழி வழியாய் வரும் கதைகள்...



என்ன இருக்கிறது படிக்கவும் பார்வையிடவும்
வெள்ளைத்தாள் முழுவதும்
சிவப்பை மட்டுமே சிந்திக் கொண்டிருக்கும்
கருப்பு எழுத்துக்கள்..

பாட்டி தன் தாயிடம் கதை கேட்டாள்
புராணங்களும் இதிகாசங்களும்

பாட்டியிடம் என் தாய் கதை கேட்டாள்
கம்பராமாயணமும் கட்டபொம்பனும்

என் தாயிடம் நான் கேட்டேன்
திருக்குறளும் திருவிளையாடலும்

என் மகள் என்னிடம் கேட்டாள்
சிங்க ராஜாவையும் சிண்ட்ரெல்லாவையும்

தன் மகளுக்கு அவள் என்ன சொல்வாள்
வன்முறையையும் வன்புனர்வையுமா????..

Saturday, December 29, 2012

ஹைக்கூ...


யாருக்காகவோ எதற்காகவோ
சுற்றிக் கொண்டேயிருக்கிறது பூமி
வானமாய் நீ...

Wednesday, December 26, 2012

விளிம்பு நீரென...


வெளிச்சத்தில் மறைந்திருக்கும் இருளைப் போல

எனதான அத்தனையிலும் நீயே
நிறைந்திருக்கிறாய்...

உன் ஸ்பரிசம் தீண்டும் பொழுது
சிறகுகள் அமிழ்த்தி அமரும்
பருந்தைப் போல
ஒரு கனத்த மௌனம் 
மனதை அழுத்துகிறது...

நமது ஒவ்வொரு சந்திப்பின் 
முடிவும்

எதிர்கொள்ளமுடியாத ஒரு
உண்மையாய்... ஊமையாய்...
நான் திரும்பும் வழி நெடுகிலும்
தொடர்கிறது 
எனை உறுத்தவாரே...

குழந்தையின் புரிந்து கொள்ளமுடியாத
புன்னகையும் அழுகையும் போல
உன் மீதான காதலும் கசப்பும்
விளிம்பு நீரென என் கண்களில்

சொட்டியும் விடாமல் வற்றியும் விடாமல்...