Thursday, June 25, 2015

......

புள்ளிகளுக்குள் அடங்கிவிடாத
கோட்டுக் கோலத்தின்
மையப் புள்ளியாய்
நீ...

Sunday, June 14, 2015

சமாதானம்....

ஆயிரம் இசைகள் இருந்தாலும்
உன்னோடு இசைந்திருக்கும்
இந்த ஒற்றைக்  குறிப்பின்
உயிர் கசிவு
போதுமானாதாய் இருக்கிறது
நம் சண்டையை
சமாதானத்துக்கு இழுத்து வர.

Saturday, May 30, 2015

வரம்..

பேசாத என் வார்த்தைகளை
கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது
உன் மௌனம்
மீள் சந்திப்பில்
பதம் பார்க்காமலிருக்க
மறதியை வரமாக்கித் தரட்டும்
உன் கடவுள்..

Wednesday, May 27, 2015

நேசக் காடு...

நேசக் காடுகளில்
காமத்தீ மூட்டுவது
காதல் சதுரங்கத்தில்
ராணியை இழப்பதாகும்...
____________________


சொல்லுறுவிய மௌனத்தில்
எஞ்சி நிற்கிறது
பெருங்காற்றின்
பேரிரைச்சல்.

Monday, April 13, 2015

அன்று பெய்த அப்பெரு மழையில்..


பெய்த மழையில்
முதல் துளி எது
விழுந்து முடித்த
கடைசி துளி எது

உன் இதழ்களில் தேடிக் கொண்டிருக்கிறேன்

முத்தங்களின் ஈரத்தில்
ஒளிந்துகொண்டு
போக்கு காட்டியபடி இருக்கிறது

நாம் சுவைத்த முதலும்
கடைசியுமான அத்துளி...

Monday, February 23, 2015

எனக்கு நீ...

எல்லாருக்கும் ஒரு நட்பு இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு காதல் இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது
எனக்கு நீ இருக்கிறாய்
எல்லருக்கும் ஏதோ ஒன்று
எதுவாகவோ இருக்கிறது
என் எல்லாமாகவும்
எனக்கு நீ இருக்கிறாய்.

நானாகிய தோட்டம்....

எனது பெருவெளியில்
தோட்டம் ஒன்று வரைந்தேன்
சில பூக்களையும்
கூடவே சில வண்ணத்துப் பூச்சிகளையும்

வந்து பார்க்கவும்
வாசங்கள் நுகரவும்
சில மனிதர்களையும் வரைந்து வைத்தேன்

விடியலில்
பூக்களின் நிறங்களும்
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளும்
காணாமல் போயிருந்தன

உதிர்ந்து கிடந்தன சில முகமூடிகள்…