Sunday, October 21, 2012

தவிர்ப்பும்.. தவிப்பும்...


எனது அழைப்புகளை நீ
தவிர்க்க ஆரம்பித்த பின்
உனை அழைப்பதை நிறுத்திவிட்டேன்

நீ தவிர்க்கும் கோபத்தால் அல்ல

எடுக்காத அழைப்பின் ரீங்காரம்
என் அலைபேசியில் நாராசமாகவும்
உனதலைபேசியில் அபஸ்வரமாகவும்
ஒலிக்கும் என்ற தவிப்பால்...

Wednesday, October 17, 2012

யுத்தம்...


அறை எங்கும் சிதறிக் கிடந்தன
நாம் ஒருவரை ஒருவர்
பேச்சுக்களால் குதறிக் கொட்டிய
வார்த்தைகள்..

அவற்றின் ஒவ்வொறு அங்கமும் கீறப்பட்டு
ரத்தம் உறைந்தும் உறையாமலும்
விடைத்துக் கொண்டிருந்தன...

இனி வெட்டுவதற்கோ சிந்துவதற்கோ
வார்த்தைகள் இல்லாது
தீர்ந்திருந்த போழ்தில்...

உதட்டில் ஒரு சிகரெட்டைப்
பொருத்திக் கொண்டு
தலையை உதறி வெளியில் சென்றாய் நீ...

துடைப்பமும் முறமும் கொண்டு
அள்ள ஆரம்பித்திருந்தேன் நான்...

நிசப்தமான நம் அறை
அடுத்த யுத்தத்தைப்
பேசிக் கொண்டிருந்தது
நான்கு சுவர்களுடன் மௌனமாக...

Saturday, October 13, 2012

கடன்!!...



கடலிடம் நிறைய
கடன் வாங்கிவிட்டாயோ!!
உப்பு நீரை அடிக்கடி
என் கண்களிடமிருந்து
பெறுகிறாயே??

Thursday, October 4, 2012

நீயும்???... நானும்...


அனுமதி கேட்டு காதல் செய்தவனும் நீ
அனுமதியின்றி காயம் செய்தவனும் நீ

மிட்டாய் தொலைத்த குழந்தையாக
அழுது நிற்கிறேன்
உனை எதற்காகத் தொலைத்தேன்
என்பது புரியாமலேயே..

தீராத தனிமையின் மை கொண்டு
எழுதத் துவங்குகிறேன் உனக்கான
ஒரு கவிதையை...

எழுத்தின் சுவடுகளாக
உன்னால் கத்தரிக்கப் பட்ட
என் சிறகுகளே வந்து விழுகின்றன...

விசாரிப்புகள் ஏதும் அற்ற
உனது தீர்ப்பை கூறும் முன்னமே
நீ ஒடித்திருந்த
பேனா முட்களின் முனைகளில்
நொறுங்கிவிட்டிருந்தேன் நான்..

Tuesday, September 25, 2012

தீராத பிரார்த்தனை ஒன்று...


தீராத பிரார்த்தனை தாங்கிய
காகிதத்துண்டு ஒன்று எட்டியபோது
கடவுள் மொழி புரியாதவராய்
இருந்தார்...

தீராத பிரார்த்தனையின்
குரல் ஒன்று கதறிய போது
கடவுள் காதுகளற்றவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனையின்
கண்ணீர்த் துளி ஒன்று
சொட்டிய போது கடவுள்
கண்களற்றவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனையின்
வலி ஒன்று அறைந்த போது
கடவுள் உணர்வுகளற்றாவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனை ஒன்று
தன் உருச்சிதைந்து
அழுகலின் நாற்றத்துடன் பரவியபோது
கடவுள் உணர்ச்சியற்றவராய் இருந்தார்

இப்படித் தீராத பிரார்த்தனைகள்
சுமந்து பால்வெளியில்
அலைந்து கொண்டிருக்கும்
காகிதத் துண்டுகள் எத்தனையோ?..

அவை என்றேனும் ஒருநாள்
பொழியக் கூடும் அமில மழையாக
கடவுளின் துகள்களையும் கரைத்துக் கொண்டு...

Wednesday, September 19, 2012

பருவம் மாறும் பிரியங்கள்...












ஒரு இளவேணிற் காலத்தே

புல் நுனிகளில் பனித்துளி போல
வந்து அமர்ந்தது உன் பிரியம்...

ஞாயிறின் முதல் கிரணம்
ஓடையில் விழுந்தது போல
தவழ்ந்தது உன் பிரியம்...

வண்ணத்துப் பூச்சியின்
மென் உறிஞ்சுதலாய்
தொடங்கியது உன் பிரியம்...

காற்றில் மகரந்த வாசனை போல்
உள் கலந்தது உன் பிரியம்...

முளையின் பற்றுதல் போல்
வேர்பிடித்து ஊடுருவியது
உன் பிரியம்...

கொழுவில் கொடி போலப்
பற்றிப் படர்ந்தது உன் பிரியம்...

அடை மழைக் காலத்தின்

அடித்துப் பெய்யும் மழையெனவும்
கட்டறுந்து வீசும் காற்றாகவும்

கடும் கோடையின்
சுட்டெரிக்கும் கதிரெனவும்
வரளச் செய்யும் வெப்பமாயும்
மாறிவிட்டிருந்தது...

பருவங்களைப் போல
இப்போது உன் பிரியங்களும்

Tuesday, September 18, 2012

நம் சிநேகம்...



















ஒரு கோப்பை காப்பியுடனாக
ஆரம்பித்தது நம் சிநேகம்...

சிறு தூரலென சிதறி
இலை மேல் தேங்கிய
துளியாகச் சறுக்கி
உயிரென வேரில் நுழைந்தாய்...

காமம் க்ரோதம் வன்மம் பயம்
பகட்டு வேஷம் பொறாமை எதுவுமற்று
மகிழ்ச்சி மட்டுமே கொண்டிருக்கும்
குழந்தை போல் இதயத்தை மாற்றினாய்...

வாழ்க்கையை அந்நிமிடத்திற்காகவே
வாழவைத்தாய்
என் ஆசைக்கும் மீசை
முளைக்கச் செய்தாய்...

உடைந்த வளையல் துண்டுகளிலும்
சாக்லேட் பேப்பரிலும்
புத்தக அட்டைகளிலும்
மின்னி மறையும் உன் பிம்பத்துடன்

அருந்திக் கொண்டிருக்கிறேன்
உனக்காக நிறைத்த கோப்பையை
வேறு எவருடனும் பகிரமுடியாமல்....

மனதின் தவிப்பையும்
சேர்த்து விழுங்கிக் கொண்டு...