Tuesday, July 1, 2014

மெட்டமைக்கிறாய்...

அடர் மழைக்குப் பின்னான
தூவானப் பொழுதொன்றில்
ஒற்றைக் கோட்டுப்பாதையில்
துணை தேடிய பறவை ஒன்றின்
அத்துவானக் குரலில்
வழிந்தொழுகும் விரகத்தை
கைகளில் ஏந்தியபடி
நனைந்த புல் நுனிகள்
பாதச்சூட்டை உணர்ந்துருக
இதழ் வெடிப்பில் கசிகின்ற
என் வரிகளுக்கு
கைக்கெட்டா தூரத்தில்
மெட்டமைக்கிறாய் நீ

Monday, June 30, 2014

முதல் துளி...

முதல் துளியில் தான்
ஆரம்பிக்கிறது
ஊழிப் பெருமழையும்....

Thursday, May 15, 2014

நிலா நிலா ஓடிவா...

பணத்தைத் தட்டிவிட்டு
பலூனைப் பிடித்துக் கொள்ளும்
ஒரே அற்புதம்
குழந்தை...

கசந்தது வாய் கடவுளுக்கு
குழந்தையின் நாவில்
சொட்டு மருந்து..

நிலா நிலா ஓடிவா...

தனக்கு ஊட்டிய சாதத்தை
அம்மாவுக்குத் தெரியாமல்
தன் பொம்மைக்கும் ஊட்டியது
குழந்தை..

குழந்தை தன் பொம்மைக்கு
ஊட்டும் போது மட்டும்
தரை இறங்குகிறாள்
நிலாப் பெண்.. 

நிலா நிலா ஓடிவா...


புதிர்களும் சுவாரசியங்களும்
நிறைந்த அழகுப் புதினம்
குழந்தை...

குழந்தையின் பொய் கலக்காத
அழுகையும் சிரிப்பும்
கடவுளே கேட்கும் வரம்...

பிராகரம் சுற்றியது குழந்தை
வரம் பெற்றன 
தெய்வங்கள்...

நிலா நிலா ஓடிவா...


தூளியில் குழந்தையின் சினுங்கல்
நெளிகிறது நிலா
முற்றத்து நீரில்...


நேற்றைய நினைவில்
குழந்தை காட்டியது அம்மாவுக்கு
தோசைக்கல்லில்
நிலா..

தேநீர் கோப்பையில்
இன்னுமொரு சொட்டுத் தேன்
குழந்தையின் தொடுகை..

Wednesday, May 14, 2014

குறுங்கவிதைக‌ள்...,


பட்டாம்பூச்சிகள் கொள்ளை அழகுதான்
ஆனாலும்
நீ பார்க்கையில்
என் இமை துடித்திடும்
அழகுக்கு நிகராக இல்லை!!!...

***************

நீயே ஒப்புக்கொள்ளும்
உன்னின் ஆக்கச் சிறந்த
அழகான பொய்
நான் தான்...

****************
காத்திருந்த வேளைதனில்
வேர்த்த்ருந்த என் புருவங்களை
வருடிச் சென்றது
உன் குளிர்ந்த பார்வை..

***************

உன்னைச் சொல்லாத
உன்னிடம் சொல்லாத
எதுவும் கவிதை இல்லை
வெறும் சொற்களே...