
சாக்கடைக்குள் மூழ்கி முத்தெடுத்துப் போனபின்ன்னே
சந்தனம் பூசிக் கொண்டு
சீச்சீ... அது சாக்கடை என்போரே?..
விலை பேசி சதை புணர்ந்து போனவரே
அவர்கள் கதை உணர்வீரோ?....
ஒரு ஜான் வயிறு நிறைக்க
எண் ஜான் உடம்பை பந்தி வைத்த
பாலியல் தொழிலாளி...
நித்தம் நித்தம் உணர்வுகள் கொன்று
உணர்ச்சிகள் விற்று தன்
பாலினம் மரத்த தொழிலாளி...
இரப்பைக்கு உணவளிக்க கருப்பையை
தீயிலிட்ட கொடுங்குற்றவாளி...
செல்வத்தின் எச்சத்தால் அவளுடன் நீ..
வறுமையின் உச்சத்தால் உன்னுடன் அவள்...
கற்புச் சாயம் வெளுத்த மிச்சத்தில் பெண்மை...
உன் தேவை தீர்த்தும்
தன் தேவை தீரா வெறுமையில் அவள்..
உடையைக் களைந்து உதட்டில்
புன்னகையை ஒட்ட வைத்தாள்
உணர்வுகள் களைந்து உடம்பில்
உணர்ச்சி மட்டும் ஒட்ட வைத்தாள்
கண்களின் ஈரம் களைந்து
காமம் மட்டும் ஒட்ட வைத்தாள்
ஒட்ட வைத்து ஒட்ட வைத்து
ஒட்டாத மனம் மட்டும்
பந்தி முடிந்தும் பசி தீராமல்...
காத்திருக்கிறாள்...
சாக்கடைக்குள் நிலவாக
தன் தொழில் முடிவது
வயதிலா? வியாதியிலா! என...