
அது ஒரு மழைக்கால மாலை
உனக்கும் எனக்குமாய் என
இரு தேநீர் கோப்பைகள்
உனக்கும் சேர்த்து என் உதடுகளே
இரண்டையும் பருகும்.....
மேசையில் அடுக்கிய கண்ணாடிச் சதுரங்கம்
உனக்கும் சேர்த்து என் விரல்களே
காய் நகர்த்தி உன் வெற்றியை நிர்ணயிக்கும்....
ஜன்னல் கம்பிகளில் அணிவகுத்த
மழை முத்துக்களை என் விரல் கோர்க்க
இடைவெளி நிரப்பும் உன் கைகளாய்
இன்று என் இரண்டாம் கை.....
டெலிபோன் மணி அடிப்பதாய் எண்ணி
உனக்கும் சேர்த்து நானே
பேசிச் சினுங்கும் ஓரங்க நாடகமாய்
நகரும் நத்தை வாழ்க்கை....
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
என இருந்த காலம் கடந்து - இன்று
இரு போர்வைக்குள் என் ஒரு
துக்கம் மட்டுமே மிச்சம்....
புயலும் பூகம்பமும் இடியும்
தாங்கிப் பழகிய என் இதயம்
இன்று நீ இல்லா மௌனத்தின்
சத்தத்தில் அதிர்கின்றதே........
No comments:
Post a Comment