எத்தனை முறை நினைத்த போதும்
அலுக்கவே இல்லை
உனைப் பற்றிய எண்ணங்கள்...
எத்தனை வார்த்தைகள் கொண்டு
வடித்த போதும் என்
கவிதைப் பக்கங்களில் இன்னமும்
புனையப்படாத புலப்படாத
வார்த்தையாகவே இருக்கிறாய் நீ...
உனைப் பற்றிய நினைவுகள்
வரும்போதெல்லாம் மேகங்கள்
என் மீது மட்டும் பொழிகிறது
பூஞ்சாரல்கள்...
உன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம்
இதழில் தேன் தடவிச் செல்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள்...
காற்றில் உன் சுவாசம் தீண்டும்
போதெல்லாம்
எனக்காகவே மொட்டு விரிக்கிறது
மலர்க் கொடிகள்...
என்றேனும் உணர்ந்திருக்கிறாயா?
அதிகாலையில் பயணிக்கும்
மகரந்தத்தோடு என் காதலையும்
கலந்து நான் அனுப்பியதை...
எப்போதேனும் கண்டிருக்கிறாயா?
உன் வீட்டைச் சுற்றும்
மின் மினிப் பூச்சியுடன்
உனக்கான என் கனவுகளும்
சேர்ந்து மின்னுவதை...
எத் தருணமாவது முகர்ந்திருக்கிறாயா?
உன் தோட்டத்து ரோஜாக்களில்
என் வாசமும் கலந்திருப்பதை...
எப்போதாவது சேகரித்திருக்கிறாயா?
உன் முற்றத்தில் சிதறும் மழைச் சரங்களில்
என் முத்தங்களும் சிந்தியிருப்பதை...
இனிமேல் இவைகளைத் தேடாதே
நீயாக உணர வேண்டியதை
நான் சொல்லித் தேடுகையில்
காயப்பட்டுப் போகும் காதல் ரசனைகள்...
Wednesday, April 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment