Tuesday, May 1, 2012

முற்றத்து வெய்யில்...




உன் சிக்கலான கையெழுத்தை
என் சிக்கலவிழ்த்த
கூந்தலில் போடுகிறாய்....

வேண்டாம் என்ற என் கெஞ்சல்கள்
அனைத்தையும் உன் இதழ் எனும்
அழிப்பான் கொண்டே
அழித்துவிடுகிறாய்...

செய்யாத தவங்களுக்கு கிட்டிய
கேட்காத வரமாய் நேர்ந்துவிட்டது
உன் உறவு...

என் சமையலில் உப்பைப் போல நீ
அதிகம் சேர்க்கவும் முடியவில்லை
தவிர்க்கவும் முடியவில்லை...

மாற்றம் இல்லாதது மாற்றங்கள் மட்டுமே
உனது ஒவ்வொரு செயலாலும்
என் பருவங்களில் மாற்றங்களை
தலைகீழ்விகிதமாக்கியவன் நீ...

தெரிந்தே சக்கிரவியூகத்தில்
மாட்டியவள் நான்
எனது ஏற்பும் தோற்பும்
உனதாகிவிட்டது....

மழை நீர் போல் தேங்கி
இதயக் கேணியில் ஊற்றாக
பெருகுகின்றாய்...

நீ என்றேனும் ஒரு நாள் 
எனைக் கடந்துவிடக்கூடும்
எந்த முற்றத்திலும் நிற்காத
வெய்யிலைப் போல...

என் நிழலையும் பறித்துக் கொண்டு...

No comments: