Thursday, February 10, 2011

குறுங்கவிதைகள்....

என் பழைய டைரியிலிருந்து...


1.
நான் விளக்குதான்
என்னில் திரியும் இல்லை
எண்ணெயும் இல்லை
ஆனாலும் எரிகின்றேன்
உன் நினைவால்

2.
ச‌ந்த‌னமாக‌ இணைந்திருந்தோம்
நீராக‌ப் பிரிந்தாய்
உல‌ர்ந்துவிட்டேன் நான்

3.
த‌ப்பித் த‌வ‌றி த‌ட்டிவிடாதே
உன் மேல் ஒட்டியிருப்ப‌து
ம‌ண் அல்ல‌ என் ம‌ன‌து...

4.
என் கண்ணாடிக் கனவில்
கல் எறிந்தவன
உனக்கு நன்றி _ உடைத்ததற்கல்ல‌
ஒன்றை நூறாக்கியதற்கு..

5.
தெளிந்த மனதில் கல்லை
நீ எறிந்த்துவிட்டு
என்னை குழப்பவாதி என்றுவிட்டாயே...

6.
கைவ‌லிக்க‌ நான் எழுதிய‌
க‌விதைக்கு அவ‌ன்
என் க‌ர‌ங்க‌ளில் முத்த‌மிட்டான்
அட‌ நான் பாட‌கியாக‌ப்
பிற‌ந்திருக்க‌க் கூடாதா?...

Sunday, February 6, 2011

யுகம் யுகமாய்....

சின்னஞ்சிறு சிரிப்புதிர்க்கும்

உன் உதட்டுப் பிளவுகளில்

புதைந்து போகிறேன் நான்

உன் கருவிழிச் சிறையில் சிக்கி

காணாமலே போகிறேன்

விடுதலை மறந்து

உன் சுட்டு விரல் தீண்டலில்

பனியாய் உறைந்து

சுண்டு விரல் தொடுதலில்

நுரையாய் கரைகிறேன்

என் உயிர் குடிக்கும்

உன் ஓரப் பார்வையில்

எகிறும் என் இதயத் துடிப்பு

அன்று நீ பேசி உதிர்த்த வார்த்தைகளில்

இன்றும் பன்னீர்ப்பூ வாசனை

நாள் ஒன்று கூடி வர வருடம் நான்கு

தவமிருக்கும் மாதம் போல

என்னுள் உனக்கான தவங்கள்

யுகம் யுகமாய்

சிற்பமாக இருந்த என்னை

சிரிக்க வைத்து சிலிர்க்க வைத்து

மீண்டும் பாறையாக்கிப் போய்விடாதே...

Saturday, February 5, 2011

யாராவது?!....

அவசரமாக சாலை கடந்த நேரம்

அடிபட்டுத் துடிக்கும் நாயைப் பார்க்கையில்

உடல் நடுங்க சாலையைக் கடக்க

துணைக் கையை எதிர்பார்க்கும்

மூதாட்டியைப் பார்க்கையில்

பச்சை விளக்கு எரியும் முன்பே

அவசர கதியில் முந்திப் போகும்

கார்களைப் பார்க்கையில்

நீள் கம்பி வெளியில் சரிந்து

கூர் முனையில் பெயருக்கு

சிவப்புத் துணி எச்சரிக்கைப் பறக்க

அசைந்தாடிச் செல்லும் முச்சக்கர

வண்டியைப் பார்க்கையில்

இடப் பக்கம் இண்டிகேட்டர் போட்டு

வலப் பக்கம் கை காட்டி

நேராக விரைந்தோடும்

புல்லட் புலிகளைப் பார்க்கையில்

கருப்பு நிலவில் கால் பதித்தது போல்

நான்கு சக்கரங்களும் குதித்து குதித்து

குண்டும் குழியுமான தார் ரோட்டில்

தத்துவதைப் பார்க்கையில்

எரிச்சலுடன் கண் சுருக்கி உதடு சுழித்து

பல் கடித்து

கேட்கத் தோன்றியது...

“யாராவது இதற்கு ஒரு முடிவு கட்டக் கூடாதா?”

அலுத்துக் களைத்து வீடு வந்து, சோர்ந்து

பசி கிள்ளும் வயிற்றுக்கு எனக்கு நானே

சுடு சோறு இட்டுக் கொள்கையில்

தோன்றவே இல்லை இந்த “ யாராவது” ஆதங்கம்...

Friday, February 4, 2011

மன‌ம்....














நான் நின்று கொண்டிருந்தேன்

அது நடந்து கொண்டிருந்தது

நான் அமர்ந்து கொண்டிருந்தேன்

அது ஓடிக் கொண்டிருந்தது

நான் படுத்துக் கொண்டிருந்தேன்

அது பறந்து கொண்டிருந்தது

நடந்தது, ஓடியது பறந்ததெல்லாம்

அதுதான் _ ஆனால்

களைத்ததென்னவோ நான்....

Saturday, January 29, 2011

குறுங்கவிதை...

நிறைய குப்பைகளும்

சில குந்துமணிகளும் உள்ள‌

என் ஆழ் மனதில்

கோமேதகம் நீ....

Tuesday, January 11, 2011

மோன தவம்...

















நீல வானம்...

பரந்த நீர்ப் பரப்பு...

குளிர்ந்த காற்று

வெள்ளை வெளேர் பறவை...

கண் மூடி ஒற்றைக் காலில்...

மோன தவம்...

ஆஹா!...

பார்க்கப் பார்க்கப் பரவசம்தான்

"ஆனால் மீனுக்குத் தானே

தெரியும் கொக்கின் குரூரம்"....

Sunday, January 9, 2011

வெறுமையின் வருத்தம்








அகழ்வாராய்வில்
கிடைத்துக் கொண்டே
இருக்கிறது

ஆதாம் ஏவாளின்
காலடிச் சுவடும்
ஆதி மனிதனின்
சிக்கி முக்கிக் கல்லும்...

நானும் தேடிக் கொண்டே தான்
இருக்கிறேன்

கசங்கிய கனவுகளில்
கண்ணீர் மறைத்த நினைவுகளில்
தூசு தட்டிய ஞாபக அடுக்குகளில்...

எங்கேனும் கிடைக்கிறதா?
நாம் பேசிச் சிரித்த
மணித்துளிகளும்

கலங்கிப் பிரிந்த
கண்ணீர்த் துளிகளும் என்று...

ஒவ்வொறு தேடலின் முடிவிலும்
கிடைத்ததென்னவோ..

அழிக்கவும் முடியாத
அழவும் முடியாத
ஒரு வெறுமையின்
வருத்தம் மட்டும்....